29 ஜூலை, 2019

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்! சபையில்செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு அரசியல் தீர்வே முக்கியம். அதனால்தான் அரசுக்கு ஆதரவை வழங்கி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பை வழங்குவதாகக் கூறி மக்கள் ஆணையைப் பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதெனத் தெரிவித்து சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் இன்று முன்வைத்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியல் தீர்வை இரண்டு வருடங்களில் தருவதாகத் கூறி எங்களை ஏமாற்றிவிட நினைக்காதீர்கள்.

தமிழருக்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை என்பதாலும் அது கிடைக்கும் என்பதாலும் நம்பி நாங்கள் எம்மீதான விமர்சனங்களையும் தாண்டி உங்களுக்கு ஆதரவை வழங்கி வருகின்றோம்.

அதற்காக நாங்கள் அரசின் அடிவருடிகள் அல்லர். வெறும் கம்பெரலியவை வைத்து நாங்கள் அரசியல் நடத்தவில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அது ஒரு சிறு நிகழ்வு தான். எங்களுக்கு அரசியல் தீர்வே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.