புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2013

சாவதை தவிர வேறு வழியில்லை!- ஓர் அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.
நன்றி விகடன் 
தமிழகத்தில் பூந்தமல்லி, செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் செயல்படுகின்றன.
அவற்றில், திருச்சி முகாமில்தான் ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்க வைக்கப்​பட்டுள்ள சங்கர் என்பவரைப் பார்ப்பதற்காக அவரது மனைவி காவியா, (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) கடந்த 20-ம் தேதி, காலை 11.20 மணிக்கு சென்றார். எஸ்.ஐ. ரவிச்சந்திரனிடம் காவியா மனுவைக் கொடுத்துள்ளார். அப்போதுதான் அந்த அநீதி நடந்தது.
காவியா நம்மிடம் சொல்ல முடியாமல் கதற, நடந்ததை விவரித்தார் சங்கர்.
எனக்குப் பூர்வீகம் ஆவுடையார் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள ஏம்பல் கிராமம்.
பிழைப்புக்காகப் பெற்றோர் இலங்கைக்குப் போன போது நான் பிறந்தேன். அதன்பிறகு 1997-ல் தமிழகத்துக்கு வந்த என்னை, இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
அங்கேயே சில வருடங்கள் இருந்த நான், அங்கிருந்து வெளிப்பதிவில் முகாமிலிருந்து வெளியேறி, புதுக்கோட்டையில் தங்கி கூலி வேலைசெய்தேன்.
இந்த நிலையில், இலங்கையில் போர் தீவிரமான சமயத்தில் என் அம்மா, அப்பா, அக்கா உள்ளிட்ட அனைவரும் இறந்து விட்டனர்.
யாருமற்ற நிலையில் இருந்த எனக்கு இவளோட சிநேகிதம் கிடைத்தது. அதுவே காதலாகி, திருமணம் செய்து, எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. இப்போது என் மனைவி மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாள்.
என்னைப்போன்ற அகதிகள், அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் குடியேறினால், இரண்டே வருடங்களில் குடியுரிமை கிடைப்பதாகச் சொன்னார்கள்.
என் குழந்தைகளாவது படித்து ஆளாக வேண்டும் என்று அவுஸ்திரேலியாவுக்குப் போக முயற்சி செய்தேன். இதைத் தெரிந்துகொண்ட கியூ பிராஞ்ச் பொலிஸார், கடந்த ஆகஸ்ட் மாசம் 24-ம் தேதி என்னை விசாரணைக்காக அழைத்துப் போய், பொய் வழக்குப் போட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
அந்த வழக்கில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்தது. ஆனால் சிறையைவிட்டு வெளியே வந்த என்னை கைதுசெய்து, 25 நாட்ளுகக்கு முன் இந்த முகாமில் அடைத்தனர்.
அன்று காலை 11.20-க்கு முகாமுக்கு வந்த காவியா, எஸ்.ஐ. கிட்ட என்னைப் பார்க்க மனு கொடுத்திருக்கிறது. அதை வாங்கிய எஸ்.ஐ. அங்கிருந்த பெண் காவலரைக் கூப்பிட்டு, 'செக் பண்ணி அனுப்புங்க என்று சொல்லியிருக்கிறார்.
பின்புறமுள்ள அறைக்கு காவியாவை அழைத்துச் சென்ற அந்தப் பெண் காவலர், சேலையைக் கழட்டு, ஜாக்கெட்டைக் கழட்டு என்று மிரட்டியிருக்கார். அரைமணி நேரம் நிர்வாணமாக நிற்கவைத்து அனுப்பினார்.
அழுதபடியே வந்து,  உன்னைக் கல்யாணம் பண்ணிய குத்தத்துக்கு கோர்ட்டு, ஜெயில்ன்னு அலைய வெச்சிட்டே. மிச்சமிருக்கிறது மானம் மட்டும்தான். இப்ப அதுவும் போச்சு. இப்படி பொலிஸ் சித்திரவதை செய்​தால் சாவறதை தவிர வேறு வழியில்லை’ என்று கதறி அழுதாள் காவியா.
18 வருஷமாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் என்மீது எந்த வழக்கும் கிடையாது. இலங்கையில் நான் பிறந்த ஒரே காரணத்துக்காக என்னைச் சிறையில் தள்ளிய பொலிஸார், என் மனைவியையும் நிர்வாணமாக நிறுத்தியிருக்கிறதது எனக் கதறினார் சங்கர்.
அதேமுகாமில் உள்ள ஈழநேரு தெரிவித்ததாவது,
எங்களைப் பார்க்க வருகிறவர்களை மேலோட்டமாகக் கழுத்திலிருந்து கால்வரை சோதனையிடுவதுதான் வழக்கம். ஆனால் அந்தப் பெண்ணைத் திட்டமிட்டே நிர்வாணப்​படுத்தியுள்ளனர். அந்த அறையில் கமரா வைக்கப்பட்டிருந்ததா, காவலர்​கள் படம் எடுத்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த முகாம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் இங்கு கொண்டு வரப்பட்டு ஏழு மாதங்கள் ஆகின்றன. கலெக்டரும் சரி, காவல்துறை உயரதிகாரிகளும் சரி... யாரும் இந்த முகாமை பார்வையிட்டதுகூட கிடையாது.
அதனாலேயே இங்குள்ள அதிகாரிகள் எங்களைக் கைதிகளைப் போல நடத்துகிறார்கள். நாங்கள் அறை கண்காணிப்பில் இருப்பவர்களே, தவிர சிறைக் கைதிகள் இல்லை.
எங்களைத் தனிமைப்படுத்தும் இந்த உத்தரவை ரத்துச்செய்ய வேண்டும். அந்தப் பெண்ணுக்கு நடந்த அவலம் தொடராதபடி, தமிழக முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவல்துறை வட்டாரத்தில், முகாம் வாசிகள் இந்தச் சம்பவத்தை தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யான திரிபாதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனியை விசாரிக்க சொல்லியிருக்கிறார்கள் என்றனர்.
ராஜபக்ச மட்டும்தான் போர்க் குற்றவாளியா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

ad

ad