திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியில் செம்பியன்குளம், கருவேப்பமுறிப்புக்குளம் ஆகிய பிரதேசங்களை அண்டிய வயல் நிலங்களும் மேட்டுக்காணியுடன் தோட்டப் பயிர்ச் செய்கை நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளது. ஒதியமலை கிராமத்தில் திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரைக் குடியேற்றுவதை நாம் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நேரில் சென்று பார்வையிட்டுள்ளோம்.
அப்பகுதியில் வாழ்ந்த எமது தமிழ் மக்களின் குடியிருப்பு வீடுகள் அத்திபாரத்துடன் குழிதோண்டி எடுக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் அங்கு வாழ்ந்ததற்கான சான்றுகளாக கற் கிணறுகளையும் மரத்தோப்புக்களையும் மட்டுமே நாம் தற்பொழுது காணக்கூடியதாகவுள்ளது. மேலும் அப்பகுதியில் பழைய பாதை அகற்றப்பட்டு தென் பகுதியினருக்குக் குடியேற்றுவதற்கு வசதியாக குடியேற்றக் காணிகளுக்கு இடையே ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அதிகமான எல்லைக் கட்டைகளும் நாட்டப்பட்டுள்ளன. இதேபோல்அப்பகுதியில் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு புதிய சிங்களக் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டு வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
ஒதியமலை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட , பழைய கொம்பனித் தெரு என்ற பகுதிநோக்கி செல்லும்போது வெலி ஓயா பகுதிக்குள் இடம்பெறும் சிங்களக்குடி திணிப்புக்கள் போன்று குடியேற்றங்கள் துரிதகதியில் நடைபெறுவதைக்கண்டு அதிர்ச்சியுற்றேன்.அங்கு புதிதாக பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. புல்டோசர் மூலம் புதிய பாதைகள் அமைக்கப்படும் பணி இடம்பெறுவதை நேரில் கண்டேன். தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டு புதிதாக சிங்கள பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன .
புதிய வீடுகள் கட்டப்படுவதற்கான அடிக்கல்களும் நாட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதிகளுக்கு மின்சார வசதியும் பூரணமாக வழங்கப்பட்டுள்ளது. முதலில் தமிழர்கள் பயன்படுத்திய சிலோன் தியேட்டர்ஸ் பகுதியில் தற்போது சிங்கள மக்கள் பயன்படுத்துவதையும் நேரில் அவதானித்தேன். ஒதியமலை வாசிகசாலையிலுள்ள எங்கள் மக்களிடம் அங்கு இடம்பெறும் நில, வள அபகரிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடினேன்.
பின்னர் ஒதியமலைப்படுகொலை இடம்பெற்ற பகுதிக்கு சென்றபோது அச்சம்பவம் தொடர்பில் மக்கள் என்னிடம் வேதனையுடன் விபரித்தனர். அக்கட்டடத்தினுள்ளே 28 தமிழ்மக்கள் சுட்டுக்கொள்ளப்பட்டதையும் மேலும் 5 பேர் அருகிலிருந்த காட்டுப்பகுதியில் டிராக்டர் வண்டியுடன் சேர்த்து எரிக்கப்பட்டதையும் அவர்களின் நினைவு நாளையே அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவு கூர்வதாகவும் கூறினர். இம்முறை அந்த நினைவு நாளில் நீங்கள் அவர்களை நினைவு கூர துணையிருப்போம் என்றோம்.
அதன் பின்னர் ஒதியமலை பிள்ளையார் கோயிலுக்கு வந்து பூஜைகளில் கலந்து கொண்டபோது 89 வயதுடைய நாகமணி சின்னத்தம்பியிடம் சில தரவுகளை சேகரிக்க முடிந்தது. அங்கு அவர் சுமார் 4 தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வருவ தாகவும் ஒதியமலை தமிழரின் பூர்விகக்கிராமம் எனவும் , டொலர் பாம், கென்பாம் ஆகிய பகுதிகளுக்கு அண்மித்த நவாலயம், சிவாலயம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தமிழருக்குரியவை என்றும், தற்போது பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வரை சிங்களக் குடி இருப்புக்கள் வந்துவிட்டன என்று வேதனையுடன் விபரித்தார்.
ஒட்டுமொத்தமாக மக்களிடம் தரவுகளை சேகரித்த, நான் நேரில் கண்டு கொண்ட தரவுகளின்படி இடப்பெயர்வுக்கு முன் எங்கள் மக்களின் பாவனையிலிருந்த சுமார் 700 ஏக்கர் நிலப்பகுதியும் காடுகளாக இருந்த சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதியும் இன்று துரிதகதியில் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
இவைகள் யாவும் ஒதியமலை பிரதேசச் செயலர் பிரிவுக்குட்பட்டவை.
"காரவாய்க்கால் ,வேலங்குளம், நெடுங்கேனியான் முறிப்பு ஆகிய தமிழ்ப்பெயர்கள் ஏதும் இப்போது அங்கே இல்லை. அதாவேடுனுவேவ, கலியானபுர உள்ளிட்ட பல சிங்களப்பெயர்கள் இப்போது போதிதாக முளைத்துள்ளன. மேலும் தற்போது வயல் செய்து கொண்டிருக்கும் பகுதியில் , ஓதியமலைக்குளம் தாண்டி செல்லும்போது ராணுவத்தினர் தம்மை தாக்குவதாகவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அங்கு இடம்பெறும் நில,வள அபகரிப்புக்கள் பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றுள்ளது.