புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014


மேலும் 106 கோயில்களில் அன்னதானம் 
நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.


தமிழ்நாடு சட்டப் பேரவை விதி-110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், "இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களில் உள்ள தொன்மையான ஓவியங்களை பழமை மாறாது புதுப்பிக்கும் வகையில், தொல்லியல் வல்லுநர்களைக் கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு அளித்த மதிப்பீட்டின்படி, திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், அருள்மிகு நாறும்பூநாதசுவாமி திருக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்தில் உள்ள பழமையான சுவரோவியங்களை 1 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பித்துப் பராமரிக்கப்படும்.

2002 ஆம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 518 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம், ஆன்றோர்கள், சான்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 13.9.2012 அன்று என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு பெரும் பயனளிக்கும் இத்திட்டம், நடப்பு ஆண்டில் 3 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

எஸ்.சி.-எஸ்.டி. மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 1,006 கோயில்களில் திருப்பணி 

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் அமையப் பெற்றுள்ள திருக்கோயில்கள் சரியான பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து இருப்பதை அறிந்த அரசு, கடந்த 3 ஆண்டுகளில், ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளிலுள்ள 1,630 திருக்கோயில்களை சீரமைக்க, ஒரு திருக்கோயிலுக்கு 50,000 ரூபாய் வீதம் 8 கோடியே 15 லட்சம் ரூபாய் நிதியினை ஒதுக்கி, அதன் மூலம் அத்திருக்கோயில்கள் பயனடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்யப்படும்.

இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறிய திருக்கோயில்கள் நிதி வசதியின்மையால் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாது சிதிலம் அடைந்துள்ளதை அறிந்த அரசு, திருப்பணிக்கான உதவியை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியதோடு, கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 1,262 திருக்கோயில்களுக்கு 6 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அந்த திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 1,006 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்திட திருக்கோயில் ஒன்றுக்கு 50,000 ரூபாய் வீதம் 5 கோடியே 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

16 கோயில்களில் அன்னதானக் கூடங்கள்

அன்னதானம் அருந்தும் பக்தர்கள் வசதிக்கென அன்னதானக் கூடம் இல்லாத திருக்கோயில்களில் சமையல் அறையுடன் கூடிய அன்னதானக் கூடம் அமைத்தல், அங்கு பக்தர்கள் வசதியுடன் அமர்ந்து உணவருந்த தேவையான மேஜை நாற்காலிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றை நிறைவேற்றும் வகையில், கடந்த 3 ஆண்டுகளில் 23 அன்னதானக் கூடங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 29 அன்னதானக் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில் 16 திருக்கோயில்களில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அன்னதானக் கூடங்கள் கட்டப்படும்.

10,000 சிறு கோயில்களுக்கு பூஜை பொருட்கள்

திருக்கோயில்களில் ஒரு கால பூஜையேனும் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு கால பூஜைத் திட்டத்தை சீரமைத்து இன்று 11,931 கிராமப்புறத் திருக்கோயில்கள் பயனடைந்து வருகின்றன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள சிறு சிறு திருக்கோயில்கள் உட்பட சிறு சிறு கிராமப்புறத் திருக்கோயில்களிலும், நாள்தோறும் முறையாக பூஜை நடைபெறுவதற்கு தேவையான பூஜை உபகரணங்கள் இல்லை என்பது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10,000 சிறு சிறுத் திருக்கோயில்களுக்கு முறையான பூஜை செய்திட ஏதுவாக, பித்தளை தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு மற்றும் தொங்கு விளக்கு ஆகியவை 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் வாங்கி வழங்கப்படும்.

68 தொன்மையான கோயில்கள் புனரமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளில் 186 திருக்கோயில்களுக்கு 67 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இவ்வாண்டு மேலும் 68 தொன்மையான திருக்கோயில்களை அவற்றின் தொன்மை மாறாது புனரமைத்து புதுப்பிக்க 22 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ரூ.25 கோடியில் அருணாசலேஸ்வரர் கோயிலில் தங்கும் விடுதி 

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் பக்தர்கள் தங்கும் விடுதி 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

பழம் பெருமை வாய்ந்ததும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக விளங்குவதுமான ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கி வழிபடுவதற்கும், சுற்றுலாப் பயணிகள் தங்கி செல்லவும் போதுமான தங்கும் வசதி இத்தலத்தில் இல்லை என்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி சுமார் 500 பக்தர்கள் தங்கும் வகையில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ad

ad