புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013




            டந்த மார்ச் 7ஆம் தேதி எனது ஃபேஸ் புக் பக்கத்தில் வருத் தத்துடன் ஒரு குறிப்பை எழுதினேன்.

‘’80களில் ஈழத் தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட இனப்படுகொலையை கண்டித்து தமிழக மாணவர்கள் வீதிக்கு வந்து பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இன்று இந்திய அரசாங்கத்தை நிர்பந்திக்கவேண்டிய ஒரு காலகட்டத்தில் மாணவர்களிடம் இருந்து பெரிய அளவில் எந்த எதிர் வினையும் இல்லை. அரசியல் கட்சிகள் மட்டுமே  குரல் கொடுத்துக்கொண்டி ருக்கின்றன. பொதுவாகவே மாணவர் சமுதாயம் முற்றிலுமாக அரசியல் ரீதியாக காயடிக்கப்பட்டு வருங்கால ஏடிஎம் மெஷின்களாக மாற்றப் பட்டுவிட்டன என்று தோன்றுகிறது.’’

அதற்கு ஒரு மாணவர் “"நாங்கள் அந்த நிலையை மாற்றிக்காட்டுவோம்' என்று மறுமொழி இட்டிருந்தார். மார்ச் 8ஆம் தேதி லயோலா கல்லூரி மாண வர்கள் 8 பேர் இலங்கைப் பிரச்சினையில் ராஜபக்ஷேயின் மீது சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். 

மார்ச் 9ஆம் தேதி மீண்டும் ஒரு குறிப்பை எழுதினேன்.

“ஒரு அரசியல் போராட்டம் மாணவர்கள் கையில் செல்லும்போது அது மக்கள் போராட்டமாகிறது. இலங்கைப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து வரும் லயோலா கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். தீ பரவட்டும்... ... ... 

உண்மையில் தீ வேகமாகப் பரவவே செய்தது. தமிழகம் முழுக்க அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள், கலைக் கல்லூரி மாணவர்கள், சில பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் என தமிழகம் ஒரு புதிய அரசியல் குரலைக் கேட்டு வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் தமிழக வரலாற்றில் ஒரு போராட்டம் பொதுமக்களின் அக்கறையையும் அனுதாபத்தையும் பெரிய அளவில் பெற்று வருகிறது என்றால் அது இந்தப் போராட்டம்தான். இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழர்கள் மேல் நிகழ்த்திய இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக தமிழக மக்களின் மனசாட்சியை இந்தப் போராட்டம் தட்டி எழுப்பி வருகிறது.. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் தன்னெழுச்சியான குரலாக இந்தப் போராட்டம் ஒலிக்கிறது. 

உலக வரலாற்றில் மாபெரும் அரசில் மாற்றங்களுக்கு மாணவர் போராட்டங்களே உந்து சக்தியாக இருந்திருக்கின்றன. குறிப்பாக கொடுங்கோன்மை மிக்க அதிகார அமைப்புகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் பல நாடுகளில் கொதித்தெழுந்து போராடி யிருக்கிறார்கள். சீனாவில் தியான்மென் சதுக்கத்தில் நிகழ்ந்த மாணவர் போராட்டம் உலகிற்கு அந்த நாட்டின் கொடுங்கோன்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டியது. இன்று ஐரோப்பிய நாடுகளில் வால்மார்ட் நிறு வனங்களுக்கு எதிராக மாணவர்கள் அணிதிரண்டு வருகின்றனர். பல நாடுகளில் கல்விக் கட்டணக் கொள்ளைகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்துகின்றனர்.

1965-இல் தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய மகத்தான இந்தி எதிர்ப்புப் போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இன்றும் கருதப் படுகிறது. அது தி.மு.க. அதிகாரத்திற்கு வரவும் அன்று உதவியது. அஸ்ஸாமில் தங்களது உரிமைகளுக்காக போராடிய மாணவர்கள் இயக்கம் பிறகு அரசியல் கட்சியாக மாறி அதிகாரத்தைக் கைப்பற்றியதையும் நாம் அறிவோம். தெலுங்கானா போராட்டத்தில் இன்று முன்னணியில் நிற்பவர்கள் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களே. சில மாதங்களுக்கு முன்பு  புது தில்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி விவகாரத்தில் மாணவர்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்தபோதுதான் அரசாங்கமும் நீதி அமைப்புகளும் இந்தியாவில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்க நிர்பந்திக்கப்பட்டன.

மாணவர் போராட்டங்கள் உடனடியாக கவனம் பெறுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் நீண்டகால அரசியல் நோக்கங்கள் இல்லாதவர்கள் என்பதால் அவர்களை சமரசத்திற்கு இட்டுச் செல்வதோ விலை பேசுவதோ கடினம். பல்லாயிரம் மாணவர்கள் ஒரு இடத்தில் கூடும் சந்தர்ப்பம் இயல்பாக இருப்பதால் அவர்கள் அணிதிரள்வது சுலபம். அவர்களது போராட்டம் குறிப்பிட்ட தலைமைக்குக் கட்டுப்பட்டது அல்ல என்பதால் அதன் வேகத்தையும் திசையையும் யாரும் வரையறுக்க முடியாது. மேலும் ஒரு சிவில் சமூகத்தினுடைய, மக்கள் சமூகத்தினுடைய நேரடிக் குரலாக மாணவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த இருபதாண்டுகளில் கல்வி அமைப்பு களிலிருந்து அரசியல் படிப்படியாக அகற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள், சுயநிதிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் அரசியல் உணர்வும் சமூக உணர்வும் முற்றாக அழித்து துடைக்கப் பட்டுவிட்டது. இப்போது இந்த போராட்டங்களில் முன் னணியில் இருப்பவர்கள் அரசு கலைக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர் களாகவோ கிறித்துவ பின்புலம் கொண்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்களாகவோ இருப்பது தற்செயலானதல்ல. இவற்றிற்கு அப்பால் பெரும்பாலான மாணவர்கள் முற்றாக சமூகத்திலிருந்து விலகிய ஒரு கல்விச் சூழலிலேயே வளர்கிறார்கள். இந்தப் போராட்டங்களில் பெண்கள் கல்லூரி யைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இதுவரை முன்வராததையும் கவனிக்க வேண்டும். 

பொறியியல் கல்லூரிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மூளை அடிமைகளை உற்பத்தி செய்யும் பணியில் மட்டுமே ஈடு பட்டிருக்கின்றன. பெரும் தொகையைச் செலுத்தி அங்கே படிக்க வரும் மாணவர்களுக்கு அங்கே தங்களது பொருளாதாரம் சார்ந்த கனவு களையும் பயங்களையும் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதில்லை. இவ்வாறு சமூக, அரசியல் உணர்வோ பொறுப்போ இல்லாமல் வளரும் தலைமுறையினர் அநீதியும் ஊழலும் மிக்க ஒரு அமைப்பில் தங்களை வெகு இயல்பாகப் பொருத்திக் கொள்கின்றனர். அவர்களுக்கு எதைப் பற்றியும் எந்தக் கேள்விகளும் இருப்பதில்லை. 

நீண்டகாலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் இந்த மாணவர் எழுச்சி ஈழப்பிரச்சினையில் மட்டுமல்ல இளைஞர்கள் தங்களது சமகாலப் பிரச்சினைகள்பால் ஈடுபாடும் பங்கேற்பும் கொண்டவர்களாக மாறுவதற்கான ஒரு துவக்கமாக இருந்தால் அது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. 

ஆனால் அதேசமயம் தற்சமயம் தமிழகத்தில் நடந்து வரும் மாணவர் போராட்டங்கள் அவற்றின் நோக்கங்கள் சார்ந்து அரசியல்ரீதியான தெளிவைக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுகிறது. அவர்களின் நோக்கங்களின் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. ஆனால் அதில் கொஞ்சம் குழப்பங்கள் இருக்கின்றன. 

லயோலா கல்லூரி மாணவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தங்கபாலு தாக்கப்பட்டிருக்கிறார். தி.மு.கவைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் சுப.வீ வந்தபோது எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப் பட்டுள்ளன.

இதைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் செய்யவில்லை, போராட்டக்காரர்களுடன் இருந்த வேறு சில அமைப் பினரே இதைச் செய்தனர் என்று செய்திகள் தெரிவிக் கின்றன. ஒரு மிகப் பெரிய மாணவர் எழுச்சி என்பது அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற வேண்டியது மிகவும் முக்கியம். இலங்கைக்கு எதிரான ஒரு வலுவான தீர்மானத்தை இந்திய அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்பது தான் மாணவர்களின் முக்கியக் கோரிக்கை என்றால் அதற்கு எல்லா கட்சிகளையும் நிர் பந்திக்க வேண்டுமே தவிர அவர்களை அவமதிப்பது என்பது மாணவர் போ ராட்டத்தின் நோக்கத்தைச் சீர்குலைப்பதாகும். 

லயோலா மாண வர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ""நாங்கள் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை கண்டிக்கிறோம்'' ’என்கிறார்கள். இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் இந்த குறைந்தபட்ச தீர்மானத்தைக்கூட ஆதரிக்கத் தயங்கும் சூழலில் இந்த தீர்மானத்தை எதிர்ப்பது இந்திய அரசாங்கத்திற்கு சாதகமான ஒரு விஷயமாகவே முடியும். ஈழத் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் மிக நீண்டது. வல்லரசுகளின் சூதாட்டங்களுக்கு இடையே இந்த நீதியைப் படிப்படியாகத்தான் வெல்ல முடியும்.

கடந்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இப்போது தான் ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு ஆதரவுக்கரம் நீட்ட முன்வந்திருக்கின்றன. உலகத்தின் மனசாட்சியை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் ஈழத் தமிழர்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள். அதன் ஒரு தொடர்ச்சி யாகவே அமெரிக்க தீர்மானத்தையும் கருத வேண்டும். அமெரிக்க தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கான அழுத்தம் இல்லை என்றால் அதற்கான ஒரு திருத்தத்தைக் கொண்டு வரும்படி நாம் இந்திய அரசை வலியுறுத்தலாம். அல்லது அதற்கான ஒரு புதிய தீர்மானத்தை இந்தியாவே கொண்டுவரும்படி கேட்கலாம். மாறாக அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது அபத்தமானது. ஏற்கனவே ராஜபக்ஷேயும் அவர் கூட்டாளிகளும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.  

சர்வதேச விசாரணைக்காக மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பது என்ற அடிப்படையில் இதை ஆதரிக்கும் எல்லா கட்சிகளோடும் சேர்ந்து ஒரு பொதுத்திட்டத்தோடு மாணவர்கள் போராடினால் அது இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு போராட்டமாக இருக்கும். 

ஆனால் இங்குள்ள சில அமைப்புகள் தங்களது தி.மு.க., காங்கிரஸ் எதிர்ப்பிற்கு மாணவர்கள் போராட்டத்தைப் பயன்படுத்த நினைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும். கூடன்குளம் போராட்டத் தையும் அவ்வாறு தங்கள் அரசியல் நோக் கங்களுக்காகப் பயன்படுத்த சில அமைப்புகள் முயற்சித்ததை அறிவோம். இவ்வாறு தமிழகத்தில் உருவாகும் ஒவ்வொரு மக்கள் எழுச்சியையும் தங்கள் அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த விரும்பும் சக்திகளிடமிருந்து இன்று மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.

ஈழத் தமிழர்களுக்காக ஒரு சிறிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் குரல்கள் ஒன்றுபட்டு ஒலிக்க வேண்டிய நேரம் இது. ஆனால் ஈழ அரசியல் தங்கள் கையிலிருக்கும் தனிச் சொத்தாக இங்கே இருக்கும் ஒவ்வொரு அரசியல் அமைப்பும் நினைக்கின்றன. இதற்காக ஒன்றையொன்று தாக்கி அழிக்கும் சதி வேலைகளில் ஈடு படுகின்றன. 

ஈழத் தமிழர்களை முன்வைத்து தமிழக அரசியலில் நடைபெற்றுவரும் இந்தச் சூதாட்டங்களை புறம் தள்ளி  ஒன்றுபட்ட நோக்கத்திற்காக தமிழகத்தின் அனைத்து பெரும் அரசியல் இயக்கங்களையும் மாணவர்கள் தங்கள் பக்கம் வென்றெடுக்க வேண்டும். அதற்கான ஒரு பரந்துபட்ட அரசியல் திட்டத்தையும் செயல் திட் டத்தையும் அவர்கள் தாங்களே உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வப்போது தோன்றி மறையும் சிறு சலசலப்பாக இந்தப் போராட்டம் மறைந்துபோய்விடும் அபாயம் உள்ளது. 

அரசு இயந்திரம் மாணவர்கள்மேல் ஏற்கனவே அடக்குமுறைகளைத் தொடங்கி விட்டது. 

தீ பரவட்டும்.

படம் : அசோக்

ad

ad