புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2013


தமிழர் குரலை ஒலித்த நவநீதம்பிள்ளை! அதிரடியாய் வெளியேறிய இலங்கை பேச்சாளர்! ஜெனிவாவில் நடப்பது என்ன?- விகடன் 
எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஈழச் சோகத்தின் கொடூர ரணம் ஆறவே ஆறாது. இது இந்திய நாடாளுமன்றம் தொடங்கி இங்கிலாந்து நாடாளுமன்றம், ஜெனிவா மனித உரிமை மன்றம்
வரை ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
உலகமெங்கும் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருக்கும் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடுக்கும் அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடை சொல்ல முடியாமல் விக்கித் தவிக்கிறது இலங்கை அரசு.
இன்னும் ஒரு வாரத்தில் முடிவுற இருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் 'என்னதான் நடக்கிறது?’ என்பதை அறிய, பெங்களூருவில் இருந்து ஜெனிவா சென்றிருக்கும் பேராசிரியர் பால் நியூமனிடம் பேசினோம்.
தமிழகத்தைப் போலவே பல்வேறு நாடுகளி​லிருந்தும் வந்திருந்த தமிழர்கள் ஜெனிவா மனித உரிமை மன்றத்துக்கு வெளியே நின்று கடுங்குளிரிலும் கொட்டும் பனியிலும் 'ஈழத் தமிழனத்துக்கு நீதி வழங்க வேண்டி’ ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து யுத்தத்தின் கொடூரத்தை விவரிக்கின்றனர்.
யுத்தத்தில் நேரடி​யாகப் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் இருந்தும் பல்வேறு புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஜெனிவாவுக்கு வந்து ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஹை கமிஷனர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து இலங்கை இராணுவத்துக்கு எதிராக சாட்சியங்களைப் பதிவுசெய்கின்றனர்.
அதன் வெளிப்பாடாகவே இரண்டு நாட்களுக்கு முன், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் ஹை கமிஷனர் நவநீதம்பிள்ளை பேசும்போது, 'கடந்த ஆண்டு ஐ.நா-வில் வலியுறுத்திய மக்கள் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலையா என்பதை அறிய சர்வதேசப் போர் விசாரணை நடத்த வேண்டும். தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் குடியமர்த்தப்பட்டு இருக்கும் ராணுவத்தை வெளியேற்றி, பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
யுத்தத்தின்போது கைது​செய்யப்பட்ட அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்ற நான்கு மிக முக்கியமான கருத்துக்களை இலங்கைக்கு எதிராகப் பதிவுசெய்தார்.
நவநீதம்பிள்ளையின் கருத்துக்களைச் சற்றும் எதிர்பாராத இலங்கை அரசின் ஐ.நா. பேச்சாளர் ரவிநாத‌ ஆரியசிங்க, 'ஐ.நா-வின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. கொஞ்சம்கூட நியாயமில்லாதது. தமிழர்கள் வசிக்கும் வடகிழக்கில் மீள்குடியேற்றம், பாதுகாப்பு வசதி, கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் வேகமாக நடந்து வருகின்றன’ என வழக்கமான பாடலையே வாசித்துவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.
அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் பிரதிநிதிகளிடமும் 'இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை. அங்கே ஏராளமான போர்க்குற்றங்கள் நடந்து இருக்கின்றன.
அதனால், சுதந்திரமான சர்வதேச போர் விசாரணை நடத்த வேண்டும். இறுதியாக, பொதுசன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்’ என, தகுந்த ஆதாரங்களோடும் சனல் 4-ன் வீடியோ காட்சிகளோடும் விவரித்தோம். அவர்களும் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, இலங்கையில் நடைபெற்றது கொடூரமான இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
அதிலும் குறிப்பாக, அமெரிக்க வெளியுறவுத் தூதர் எலீன் சாம்பர்ளின் டொனஹொ, ''இலங்கையில் நடந்தது இனப்படுகொலை. போர்க்குற்ற விசாரணை தேவை. இலங்கையில் விசாரணை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது. அமெரிக்க விசாரணைக் குழு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் விரும்புகிறது.
இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸை, வாஷிங்டனுக்கு அழைத்து எங்களுடைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமான எந்தப் பதிலும் சொல்லாமல் போய்விட்டார்’ என வேதனைப்பட்டார்.
தெற்காசியப் பிராந்தியத்தில் பலம் பொருந்திய நாடாக இருக்கும் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே, மற்ற நாடுகள் இலங்கைக்கு எதிராகப் பலமான தீர்மானத்தை நிறைவேற்றுவதையோ, ஈழத் தமிழினத்துக்கு நீதி வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளிலோ ஈடுபடும் என்பது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளிடம் பேசியபோது தெளிவாகத் தெரிந்தது.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது வரும் 21-ம் தேதியோ அல்லது 22-ம் தேதியோ வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
வாக்கெடுப்புக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் தீர்மானத்தின் சாராம்சத்தை சீர்குலைக்க எல்லா வேலைகளிலும் ஈடுபட்டுள்ளது
இலங்கை. தொடர்ந்து டெல்லியிலும், ஜெனிவாவில் உள்ள இந்தியப் பிரதிநிதிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக நாடுகளின் ஒத்துழைப்போடு இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறும்'' என நம்பிக்கையுடன் முடித்தார்.
21-ம் திகதியை உலகத் தமிழர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறோம்.

ad

ad