இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெ ரிக்கா கொண்டு வரும் தீர்மானம், இதையொட்டி தமிழகத்தில் எழுந்துள்ள மாணவ சமூகத்தின் எழுச்சி, அரசியல் கட்சிகள் மற்றும் ஈழ ஆதரவு அமைப்புகளின் போராட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் வலுவான குரல்கள் என ராஜ பக்சேவுக்கு எதிராக தமிழகம் கொந் தளித்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் இணைச்செயலரும் அதிகாரப்பூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னைக்கு வந்திருந்தார். அவரை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து கிட்டத்தட்ட 4 வருடங்கள் முடியப் போகிறது. தற்போது ஈழத் தமிழர்களின் நிலை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழீழப் பகுதிகள் எப்படி இருக்கின்றன?
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்கிற குரல்கள் வலுவாக எதிரொலித்த நிலையிலும் அவர்கள் விடு விக்கப்படவில்லை. மீள் குடியேற்றம் முழுமையாக நடக்க வில்லை. தமிழர் நிலங்கள் ராணுவத்தின ரின் முகாம்களுக்காகவும் அவர்களின் குடியிருப்புகளுக்காகவும் ஆக்கிர மிக்கப்பட்டு உயர்ந்து நிற்கின் றன. தமிழர்களின் கலாச்சார- ஆன்மிக அடையாளங்களான இந்து கோயில்கள் இடிக்கப் பட்டு அந்த இடங்களிலும் மற்றும் பல பகுதிகளிலும் பௌத்த ஆலயங்கள் நிறுவப்பட்டு விட்டன. வடக்கு பிரதேசத்தில் முழுமையாக ராணுவ குடியேற்றமும் சிங்கள குடியேற்றமும் செய்து சிங்கள மயமாக்குவது என்பதை மட்டுமே தங்களின் தினசரி நிகழ்ச்சி நிரலாக வைத்திருக்கிறது அரசு. தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை அழித்தொழிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் ராஜபக்சே அரசு செவ்வனே செய்து வருகிறது. போரின் போது தமிழ் மக்களை இனப் படுகொலை செய்தவர்கள், தற்போது எஞ்சியிருக்கும் தமிழர்கள் மீது பொருளாதார தாக்குதலையும் கலாச்சார தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழல்களை சர்வதேசமும் இந்தியாவும் உணர வேண்டும்.
தாயகப் பிரதேசத்தில் தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறது இந்தியா. மறு சீரமைப்பிற்காக தொடர்ந்து நிதி ஒதுக்கீடும் இந்தியா செய்கிறது. நடப்பு பட்ஜெட்டில் கூட 500 கோடி ஒதுக்கியிருக்கிறார் ப.சிதம்பரம். இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டு பலன் தமிழர்களுக்கு கிடைக்கிறதா?
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் ஈழத்தமிழர்களும் எப்படி பார்க்கிறீர்கள்?
சுரேஷ் பிரேமசந்திரன் : தமிழ் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள். அதனால் தமிழர்களின் கருத்து தான் கூட்டமைப்பின் கருத்தும். ஐ.நா.மனித உரிமை கவுன்சில் ஆணையர் நவநீதம் பிள்ளை தாக்கல் செய்த அறிக்கையில் "போரின் போது நடந்தவைகள் குறித்து சுயாதீன மான சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், போரின் போது சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறதா என்பதை விசாரணை செய்ய வேண்டும்' என்பது உள்ளிட்ட பல பரிந்துரைகளை செய்திருக்கிறது. இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசயங்களில் ஒன்று. கடந்த வருடம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட இப் போது ஒரு படி மேலே சென்று சில விசயங்களை ஆராய முற்பட்டிருக் கிறது என்றுதான் பார்க்கிறோம். அதேசமயம் இந்தியாவும் அமெரிக்கா வும் தங்களுடைய பூகோள ரீதியான அரசியல்களை மையப்படுத்தியே இலங்கை மீது ஆதிக்கம் செலுத்துகிறதே தவிர, தமிழர்களின் நலன் சார்ந்து நீதி கேட்கும் வகையில் நகரவில்லை. 100 கோடியே 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட வல்லர சாகப்போகின்ற இந்தியாவில் ஏழரை கோடி தமிழர்கள் இருக் கிறார்கள். அதனால் அவர்களின் உணர்வுகளோடு ஒத்துழைத்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மேலும் வலுவானதாக்கி பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கான நீதியை விரைந்து பெற்றுத் தர இந்தியா முயற்சிக்க வேண்டும்.
படிப்படியாக முன்னேறும் தீர்மானங்களால் ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது நீண்ட வருடங்கள் ஆகலாம் என்கிறார்களே?
சுரேஷ் பிரேமசந்திரன் : காலதாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்கிற சொற்றொடர் உண்டு. அதனால் தமிழர்களுக்கான நீதி தாமதிக்கப்படவோ தடுக்கப்படவோ மறுக்கப்படவோ கூடாது என்பதற்கேற்ப இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இலங்கை இறையாண்மை மிக்க ஒரு நாடு. இந்தியாவின் நட்பு நாடும் கூட. அதனால் அதன் உள் நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது' என்று இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறதே?
சுரேஷ் பிரேமசந்திரன் : இந்த கூற்றுகள் சரியில்லை. 13-வது சட்ட திருத்தம் உள்பட எத்தனையோ விவகாரங்களில் இந்தியா அழுத்தம் கொடுத்தது. ஆனால் அதனை இலங்கை அரசு மதித்ததா? நிறைவேற்றியதா? அப்படியிருக்க, எப்படி நட்பு நாடென்று இன்னமும் சொல்லிக்கொண்டிருக்க முடியும்? தமிழினத்தையே இல்லாதொழிக்க இலங்கை அரசு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் பழைய கொள்கை பிடிப்புகளிலேயே இந்தியா இருக்கக் கூடாது. அதன் கொள்கையில் மாற்றம் தேவை. தமிழர்களின் உணர்வு கள்தான் இந்தியாவுக்கு நல்லது என்கிற மாற்றுச் சிந்தனை வேண்டும். இந்தியா-சீனா, இந்தியா-பாகிஸ்தான் யுத்தங் களின்போது இலங்கை, இந்தியா பக்கம் நிற்கவில்லை. இந்தி யாவின் எதிரிகள் பக்கம்தான் நின்றது. ஈழத் தமிழர்கள்தான் ஆத்மார்த்தமாக இந்தியாவை ஆதரித்தனர். அதனால் தமிழர் கள் மட்டுமே இந்தியாவின் நட்பு சக்தியாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து, தமிழர்கள் தங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான தீர்வை தாங்களே தீர் மானித்துக்கொள்கிற வகையில் தனது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இந்தியா.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை மேலும் நீர்த்துப்போக வைக்க, இந்திய-இலங்கையின் பிரதிநிதியாக அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரமணியசாமி அனுப்பி வைக்கப்பட்டார் என்கிற செய்தி குறித்து?
சுரேஷ் பிரேமசந்திரன் : இலங்கைக்கு ஆதரவாக எந்த விவகாரத்திலும் செயல்படுவது சுப்ரமணியசாமிக்கு வழக்கமான ஒன்றுதான். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அமெரிக்க தளபதி ராபர்ட் ஓ பிளேக்கை சுப்ரமணியசாமி சந்தித்துப் பேசினார். அதில் எந்த அளவுக்கு சாமிக்கு வெற்றி கிடைத்தது என்று தெரியவில்லை. அதே போல, இந்த முயற்சியில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் சென்றிருக்க வாய்ப் பில்லை, இலங்கையின் பிரதிநிதியாகவே அவர் இதில் குதித்துள்ளார்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்காக நீதி கேட்டு தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டங்கள் பற்றி?
சுரேஷ் பிரேமசந்திரன் : தாய்த்தமிழகம் எங்களை கைவிடவில்லை. குறிப்பாக தமிழக மாணவ சமூகத்தினரின் எழுச்சி மிகுந்த போராட்டங்களை கண்டு மெய்சிலிர்க்கிறோம். இத்தகைய போராட்டங்கள் இன்னும் வலுப்பட வேண்டும். தாய்த்தமி ழகத்தின் உணர்வுகளை புரிந்துகொண்டு தமிழக அரசும் இந்திய அரசும் ஈழத்தமிழ் மக்கள் விரும்பும் நீதிக்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்பார்ப்பும்.
-சந்திப்பு : இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்