புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

உடனுக்குடன் முடிவுகளை எமது இணையத்தில் காணலாம் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கிரிக்கெட் திருவிழா
5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்–10 சுற்று முடிவில் குரூப்1–ல் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, தென்ஆப்பிரிக்க அணிகளும், குரூப்2–ல் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, வெஸ்ட் அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
நியூசிலாந்து, இங்கிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம் ஆகிய 6 அணிகள் சூப்பர்–10 சுற்றுடன் வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையில் மிர்புரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் இலங்கையும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. இந்த உலக கோப்பை திருவிழாவில் சுழற்பந்து வீச்சு தான் பெரும்பாலான ஆட்டங்களின் முடிவை தீர்மானித்துள்ளன. இந்த ஆட்டத்திலும் சுழலின் தாக்கம் மேலோங்கி இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
இலங்கை எப்படி?
லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்திய இலங்கை அணி இங்கிலாந்திடம் மட்டும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது.
முந்தைய ஆட்டத்தில் நியூசிலாந்தை வெறும் 60 ரன்களில் சுருட்டியதால் இலங்கையின் நம்பிக்கை இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது. முதல் முறையாக களம் கண்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தது இலங்கைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. ஹெராத்தின் திடீர் எழுச்சியால், அஜந்தா மென்டிசுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறி தான்.
ஒரு அணியில் 6 கேப்டன்கள்
மூத்த வீரர்கள் தில்ஷன், சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே நீண்ட காலம் இலங்கையை அணியை வழிநடத்தியவர்கள். ஒரு நாள் போட்டி கேப்டன் மேத்யூஸ், 20 ஓவர் அணியின் கேப்டன் தினேஷ் சன்டிமால், தற்காலிக கேப்டன் மலிங்கா என்று ஒரு கேப்டன் படையே இலங்கை அணியில் அணிவகுத்து நிற்கிறது. இவர்களின் அனுபவத்தையும், ஹெராத், செனநாயக்கே ஆகியோரின் சுழற்பந்து வீச்சை தான் இலங்கை அணி பெரிதும் சார்ந்திருக்கிறது என்பது மறுப்பதற்கு இல்லை.
2012–ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி 36 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் கோப்பையை கோட்டை விட்டது. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்க இலங்கைக்கு இதுவே சரியான வாய்ப்பாகும்.
வெஸ்ட் இண்டீஸ் அணி
நடப்பு சாம்பியான வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர்–10 சுற்றில் வங்காளதேசம், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளை பந்தாடியது. இந்தியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
தனது கடைசி லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை 82 ரன்களில் அடக்கி அமர்க்களப்படுத்தியது. அதே உத்வேகத்தை ஆசிய சாம்பியனான இலங்கையுடனும் தொடருவதில் வெஸ்ட் இணடீஸ் வீரர்கள் வெறி கொண்டு காணப்படுகிறார்கள்.
வெஸ்ட் இண்டீசின் துருப்பு சீட்டுகளாக கருதப்படும் 20 ஓவர் கிரிக்கெட்டின் டாப்–2 சுழற்பந்து வீச்சாளர்கள் சாமுவேல் பத்ரீயும், சுனில் நரினும் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள். விக்கெட்டுகளை சாய்ப்பதுடன் சிக்கனமாக பந்து வீசுவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்கள். இதுவரை 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பத்ரீ சராசரியாக ஓவருக்கு 5.62 ரன்கள் வீதமும், 6 விக்கெட்டுகள் எடுத்துள்ள நரின் 4.50 ரன்கள் வீதமும் வழங்கியுள்ளனர்.
மிரட்டுவாரா கெய்ல்
பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல், வெய்ன் சுமித், கேப்டன் டேரன் சேமி, வெய்ன் பிராவோ ஆகியோர் அச்சமின்றி பந்து வீச்சை வெளுத்துகட்டுவதில் வல்லவர்கள். இவர்களின் ‘வேட்டை’ தொடர்ந்தால் இலங்கையின் பாடும் நிச்சயம் திண்டாட்டம் தான். பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி இரண்டு அணியும் சரிசம பலத்துடன் திகழ்வதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பதை கணிப்பது கடினம்.
ஆனால் இலங்கை அணி முந்தைய லீக் ஆட்டங்கள் அனைத்தையும் சிட்டகாங் மைதானத்தில் விளையாடியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே மிர்புரில் தான் ஆடி வருகிறது. இது வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமான அம்சம் என்றாலும், இங்குள்ள தன்மைக்கு ஏற்ப இலங்கை வீரர்கள் சீக்கிரம் தங்களை தயார்படுத்தி விடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் மெதுவான இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பும் என்பதால் சுழலை சமாளிக்கும் அணியின் மடியில் வெற்றிக்கனி பரிசாக விழும்.
இவ்விரு அணிகளும் இதுவரை ஐந்து 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4–ல் இலங்கையும், ஒன்றில் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன.
அணி விவரம்
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இலங்கை: குசல் பெரேரா, தில்ஷன், சங்கக்கரா, மஹேலா ஜெயவர்த்தனே, தினேஷ் சன்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், திசரா பெரேரா, குலசேகரா, மலிங்கா, ஹெராத், செனநாயக்கே.
வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், வெய்ன் சுமித், லென்டில் சிமோன்ஸ், சாமுவேல்ஸ், வெய்ன் பிராவோ, டேரன் சேமி (கேப்டன்), தினேஷ் ராம்டின், ஆந்த்ரே ரஸ்செல், கிரிஷ்மர் சான்டோகி, சுனில் நரின், சாமுவேல் பத்ரீ.
மாலை 6.30 மணிக்கு...
மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
‘ஜெயித்தால் கேப்டன் பதவி
பறிபோகும்’–சேமி
இந்த ஆட்டம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சேமி கூறுகையில், ‘கிரிக்கெட்டில் எங்களுக்கு இது இன்னொரு ஆட்டம் தான். கிரிக்கெட்டை பொறுத்தவரை ஆட்டத்திற்கு முன்பு என்ன நடக்கிறது என்பது பிரச்சினையில்லை. போட்டிக்குரிய நாளில் களத்தில் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். 2012–ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியில் நாங்கள் இலங்கையை தோற்கடித்தோம். இங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி தயாராகி உள்ளோம். இலங்கை அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் மீது எங்களுக்கு நிறைய மதிப்பு உண்டு. அதே நேரத்தில் வெற்றி பெற களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’ என்றார்.
2012–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு உங்களிடம் இருந்து ஒரு நாள் போட்டி கேப்டன் பதவி பறிபோய் விட்டதே என்று கேட்டபோது சிரித்தபடி பேசிய சேமி, ‘இந்த உலக கோப்பையை நாங்கள் வென்றால் அனேகமாக டெஸ்ட் கேப்டன் பதவியில் நான் இருக்க மாட்டேன்’ என்று தமாஷ் செய்தார். மேலும் அவர் கூறும் போது, ‘ என்னை பொறுத்தவரை கேப்டன் பதவியில் இருக்கிறேனா இல்லையா என்பது பற்றி ஒரு போதும் நினைத்ததில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எப்போதும் உற்சாகமாக விளையாடி வருகிறேன் அவ்வளவு தான்.’ என்றார்.

ad

ad