புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2015

எங்கே அரசியல் ஓ நாய்கள்??



அதிகாரமற்றவர்களின் பிணங்கள்
நேறறு தோழர் பழநி பெரியசாமியுடன் போளூருக்குச் சென்றிருந்தேன். உள்ளூரில் தோழர் விநாயகம் அவர்களோடு இணைந்துகொண்டு ஆந்திரப் படுகொலையால் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றோம். வேலூர்
- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் சந்தவாசலிலிருந்து பிரிந்து படவேடு என்கிற கோயில் தலமொன்றைத் தாண்டிச் செல்லும் வழியில் இருக்கிறது வேட்டைகிரிபாளையும். இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருவர் - முருகன், சசிகுமார் ஆகியோர் - பிணங்கள் வந்திருப்பதாகும் மக்கள் அவற்றை நடுச் சாலையில் வைத்து மறியல் செய்வதாகவும் தகவல் வர அங்கே சென்றோம்.
கண்ணாடிச் சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த இருவர் பிணங்களுக்கு அருகே அவர்கள் குடும்பத்தினர் அழுதுகொண்டிருக்க, சாலையில் அமர்ந்துகொண்டிருந்த மக்கள் மத்தியில் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். நிறைய போலீஸ், சில பத்திரிகையாளர்கள் என்றிருந்த அவ்விடத்தில், மக்கள் கோபத்தோடு குமுறிக்கொண்டிருந்தார்கள்.
கொல்லப்பட்ட இருவருமே பெயின்டர்கள். முதல்முறையாக ஆந்திராவுக்குச் சென்றிருக்கிறார்கள் என்று தெரிகிறது. செம்மரம் வெட்டும் தொழிலுக்குச் சென்றிருக்காதவர்கள் அவர்கள். யாரால், எப்படி அங்கே போனார்கள் எ்ன்பது தெளிவாக தெரியவில்லை.
கொடூரமாக அடித்து சித்தரவதை செய்து. சு்ட்டுக்கொல்லப்பட்ட சடலங்கள் என்பதை நன்றாக தெரிந்துகொளளமுடிந்தது. ஒரு சடலத்தை கையால் ஆராய்ந்து பார்த்த நபர், பிறப்புறுப்பு அறுக்கப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறார். முருகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சசிக்குமாருக்கு 2, 3 வயதுகளில் இரு பையன்கள். செம்மரம் வெட்டும் உடற்கட்டுகூட இல்லாதவர்கள் என்கிறார்கள். இப்படியே பக்கத்திலுள்ள அனந்தபுரம், கலசமுத்திரம், முருகாபாடி போன்ற ஊர்களில் மொத்தமாக ஏழு உடல்கள் வந்தன. ஜவ்வாது மலையில் மேற்பகுதியில் நம்மியம்பட்டு என்கிற மலையாளிகள் (மலைவாழ் மக்கள்) ஊருக்கு ஐந்து உடல்கள் சென்றன.
உடல்களை மறு-பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றுகூறி மக்கள் பிணங்களைக் கிடத்தி போராடினார்கள். இது தொடர்பாக பாமக நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தது. பிரேதங்களை புதைக்கவோ எரிக்கவோ செய்யாமல் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட இருந்த நேரத்தில் திரும்பினோம்.
நாங்கள் திரும்புகிற நேரத்தில் பாமகவின் எதிரொலி மணியன் உள்ளிட்ட சிலர் வந்தனர். முன்னதாக வேலு வந்திருந்தார் எ்ன்றார்கள். ஆனால் சம்பவம் நடந்து மூன்று நாள்களாகியும் எந்த முக்கியத் தலைவர்களும் வரவில்லை என்று மக்கள் கூறினார்கள். இப்போது ஏன் வந்தீர்கள் என்று பாமக தலைவர்களைப் பார்த்து சிலர் கத்தினார்கள். அவர்கள் கமுக்கமாக காதில் போட்டுக்கொள்ளாமல் கேமிராவுக்கு முன்பான வேலையில் மும்முரமாக இருந்தார்கள்.
மொத்தமும் வன்னியர்களாக இருந்த அந்த இடத்தில், நாங்கள் செனறடைந்த நேரத்தில் ம்க்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் அம்பேதகர் புரட்சி முன்னணி என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள். தலித்கள், மலைவாழ் மக்கள், வன்னியர்கள் மத்தியில் வேலைசெய்கிறார்களாம்.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சுவடே அங்கே காணவில்லை. விசிக வந்ததா என்று தெரியவில்லை.
வேலூர் - திருவண்ணாமலை சாலையில் ஒரு சுவரொட்டியைக் கூட பார்க்க இயலவில்லை. நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்களாயின. சம்பந்தப்பட்ட குடும்பத்தவரைத் தவிர வேறு யாரும் போராட்டத்தில் இறங்கவில்லை. தோழர் வி்நாயகத்தின் தமிழ்நாடு மக்கள் கட்சித் தோழர்கள் சில பணிகளில் இறங்கியிருந்தார்கள். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தினரும் இடதுசாரிகளும் தலித் விடுதலையாளர்களும் வன்னியர் சங்கமும் மும்முரமாக இயங்கியபகுதிதான் இது. ஆனால் இன்று அந்த மக்களுக்காக யாரும் வந்ததாகத் தெரியவில்லை. எல்லா அடையாளங்களும் எல்லைக்கு உட்பட்டவையே. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே நாட்களில் இதே சாலைகளில் நான் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்றேன். வெறுமையாக இருந்தது.
பிரதிநிதித்துவமற்ற மக்களாக, அதிகாரமற்ற மக்களாக, வாக்கு வங்கிகளாகக்கூட கருதப்படாத மக்களாக அவர்கள் இருக்கிறார்கள். 20 தமிழர்கள் அல்லது 20 தொழிலாளிகள் அல்லது 20 பின்தங்கிய சமூகத்தினர்... எல்லாம் அடையாளங்களும் சரிதான். ஆனால், யார் இவர்களுக்கு அதிகாரத்தை வாங்கித் "தரப்போகிறார்கள்"?
அரசியல் செயல்பாட்டின் மிக முக்கியமான கடமை அவர்களுக்கு "நாம் முகம்கொடுப்பது" அல்ல, அவர்களின் முகம் வெளிப்படுவதற்கு இசைவாக நாம் பின்னால் நிற்கவேண்டும் என்பதுதான் முக்கியம். இது நன்றாகத் தெரிகிறது. ஆனாலும் போனதற்காக இரு தொலைக்காட்சி ஊடகவியலர்களுக்கு பேட்டியளித்துவிட்டு கடமையாற்றிவிட்டுத் திரும்பினோம். இப்போதைக்கு நம்மால் அவ்வளவுதான் செய்யமுடிந்தது.
இப்பகுதியில் அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்வதில் நாங்கள் உள்பட எல்லா அமைப்புகளுமே பின்தங்கியுள்ளன. தமிழகத்தின் எல்லா சமூகச் சுட்டிகளும்போல அரசியல் சுட்டியும் இங்கே அதள பாதாளத்தில்.

ad

ad