புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று

துவங்குகிறது. இதில், 5 பவுலர்களுடன் ‘தாக்குதல்’ நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.



இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று காலேயில் துவங்குகிறது. இந்தியாவை பொறுத்தவரை துவக்கத்தில் முரளி விஜய் (வலது தொடை காயம்) இல்லாதது பின்னடைவு. ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தரலாம். பயிற்சி போட்டியில் அரைசதம் அடித்த தவான் நம்பிக்கை அளிக்கிறார்.  
கோஹ்லிக்கு நெருக்கடி:
பயிற்சியில் ரோகித் சர்மா (7,8 ரன்) சொதப்பினார்.  கேப்டன் கோஹ்லியும் இதே பட்டியலில்தான் உள்ளார். முழுத்தொடருக்கு பொறுப்பேற்றுள்ள இவர், திறமையை நிரூபிக்க வேண்டும். ரகானேவின் நிலையான ஆட்டம் அணிக்கு பலம். விக்கெட் கீப்பர் பணியை விரிதிமான் சகா மேற்கொள்வார். 6 பேட்ஸ்மேன்கள் களமிறக்கப்பட்டால் புஜாராவின் இடம் கேள்விக்குறிதான். 
5 பவுலர்கள்:
டெஸ்டில் ‘டிரா’ செய்வதை விட வெற்றி பெறுவதே முக்கியம். இதற்கு 5 பிரதான பவுலர்கள் அவசியம் என கேப்டன் கோஹ்லி நம்புகிறார். இந்த ‘பார்முலா’ எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை. வேகப்பந்துவீச்சில் இஷாந்த் நம்பிக்கை அளிக்கிறார். பயிற்சி போட்டியில் அச்சுறுத்திய (5 விக்.,) இவர் இன்றும் மிரட்டலாம். புவனேஷ்வர் இடம் உறுதி. உமேஷ் யாதவ், வருண் ஆரோனும் சவாலுக்கு தயாராக உள்ளனர். மழை வரும் பட்சத்தில் அஷ்வின், ஹர்பஜன், அமித் மிஸ்ரா என மூன்று ‘சுழல்’ வீரர்களை களமிறக்க வாய்ப்பு உண்டு. 
அனுபவ சங்ககரா:
சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை இழந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பெரியளவில் ஜொலிக்கவில்லை. கேப்டன் மாத்யூஸ், ‘சீனியர்’ சங்ககரா உள்ளிட்டோர் உள்ளூர் மண்ணில் அசத்தலாம். இதில் அனுபவ வீரர் சங்ககரா நிலைத்துவிட்டால், இந்தியாவுக்கு சிக்கல்தான். கவுசல் சில்வா, திரிமான்னே, உபுல் தரங்கா, சண்டிமால் என ‘பேட்டிங்’ பலமாக உள்ளது. 
சொந்த மண்:
சுழற்பந்துவீச்சாளர்கள் ஹெராத், திருவான் பெரேரா, தரிண்டு கவுசல் விக்கெட் வீழ்த்தலாம். சொந்த மண் இவர்களுக்கு சாதகம். ‘வேகத்தில்’ நுவன் பிரதீப் உள்ளபோதும், காயத்தில் உள்ள சமீரா பங்கேற்பது சந்தேகம். உள்ளூரில் இலங்கை அணியை வீழ்த்துவது கடினம் என்பதால், இந்திய அணிக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.

35
இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 35 டெஸ்டில் மோதி உள்ளன. இதில் இந்தியா 14, இலங்கை 6 போட்டிகளில் வென்றன. 15 போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன. 

மழை வருமா 
இன்று போட்டி நடக்கவுள்ள காலேயின் வானிலையை பொறுத்தவரை இன்று மழை வர 56 சதவீத வாய்ப்பு உள்ளது. மற்றபடி, அடுத்தடுத்த நாட்களில் மழையால் போட்டியில் பாதிப்பு ஏற்படலாம். 

22
டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி, இதுவரை 6 முறை இலங்கை சென்றுள்ளது. இதில் 3 முறை (1985, 2001, 2008) இலங்கை அணி கோப்பை வென்றது. இரண்டு முறை (1997, 2010) தொடர் சமன் ஆனது. ஒரே ஒரு முறை (1993) இந்திய அணி தொடரை வென்றது. இம்முறை விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அசத்தும் பட்சத்தில், 22 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றலாம்.

இதுவரை
காலே மைதானத்தில் இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இந்திய அணி ஒன்றில் வென்றது. மற்ற இரண்டிலும் தோல்வியை தழுவியது. 
* இங்கு கடைசியாக நடந்த 3 டெஸ்டில் இலங்கை அணி ஒன்றில் மட்டுமே வென்றது. 

நினைவில் நிற்குமா 
இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘ முதல் முறையாக ஒரு முழுத்தொடருக்கு அணியை வழிநடத்துகிறேன். இதில் நினைவில் நிற்கக்கூடிய அளவில் செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளது. பல திட்டங்கள் வைத்துள்ளேன். சரியான நேரத்தில் இதை செயல்படுத்துவேன்,’’ என்றார். 

உலக கோப்பை வருத்தம் 
இத்தொடரின் 2வது போட்டியுடன் இலங்கையின் சங்ககரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறார். இவர் கூறுகையில்,‘‘ என் கிரிக்கெட் வாழ்வில் அதிக வெற்றி, தோல்வியை பார்த்திருக்கிறேன். இவை அனைத்தும் நல்ல அனுபவமாக அமைந்தது. உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் கோப்பை வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம். இதற்கு இரண்டு முறை (2007,11) வாய்ப்பு கிடைத்தும் வெல்ல முடியவில்லை,’’ என்றார். 

சங்ககராவுக்காக வெற்றி 
இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் கூறுகையில்,‘‘ ஜாம்பவான் பிராட்மேனை நான் பார்த்தது இல்லை. ஆனால், சக வீரர் சங்ககராவின் ஆட்டத்தை ரசித்துள்ளேன். இவரிடமிருந்து அதிகமாக கற்றுக்கொண்டோம். இத்தொடரை கைப்பற்றி, சங்ககராவை வெற்றியுடன் வழியனுப்பி வைப்போம்,’’ என்றார். 

ad

ad