புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்தச் சூழ்நிலையில், 27 வருடங்களாக மக்களின் விடிவுக்காக களமாடிய முன்னாள் போராளி ஒருவர் தனது குமுறல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் கடிதம் ஒன்றின் மூலம் எமக்குத் தெரிவித்த கருத்துக்கள் அப்படியே உங்களுக்காக தட்டச்சு செய்து தரப்படுகின்றது,
முன்னாள் போராளிகளுக்கு ஒரு பகிரங்க மடல்
தங்களது கொள்ளை முன்னெடுப்புக்களை அறிந்து கொண்ட வகையிலும் தங்கள் ஆதங்கத்தை புரிந்து கொண்ட வகையிலும் நானும் தமிழ்த் தாயின் ஒரு பிள்ளை என்ற வகையில் தங்களுக்கு இம்மடல் மூலம் சில கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.
எமது மக்களின் நலனுக்காக போராளிகள் பல தியாகங்களை புரிந்தவர்கள். அர்ப்பணிப்புக்களைச் செய்தவர்கள். ஒவ்வொரு போராளியும் புதைக்கப்படாமல் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் வழி வந்த நீங்களும் விடுதலைப் போராட்டம் முடிவுற்று பல ஆண்டுகள் கடந்தும் எமது மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ முடியவில்லை. என்ற ஆதங்கத்தில் மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற உத்வேகத்தில் இதய சுத்தியுடன் களமிறங்க உத்தேசித்திருந்தால் உங்கள் துணிச்சலையும் மக்கள் மீது கொண்ட அக்கறையையும் நினைத்து மகிழ்கின்றேன்.
ஆனால் ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் எதையும் சாதிக்க முடியாது. என்பதே எனது கருத்து மட்டுமல்ல தமிழ்த் தாய் மக்களில் தொண்ணூறு வீதமான மக்களின் கருத்தும் இதுவே.
எமது தமிழர் மனங்களில் அழியாவரம் பெற்ற எங்கள் கரிகாலன் தலைவனின் சிந்தனையில் உருவாகி எமக்காக உருகி ஒளி தந்த மெழுகுவர்த்திகள் அவர்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் நனவாக்க வேண்டுமென்றால் பொறுமையும், நிதானமும், அரசியல் ஞானமும் முதலில் வேண்டும்.
இன்று தென்னிலங்கை பிரிந்து பிளவுபட்டு ஒற்றுமை இழந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாம் மிகவும் நிதானமாக நடக்க வேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வேறு எந்தக் கட்சிகளோ இதுவரை தமிழ் மக்களுக்கு நிறைவான எந்தவித தேவைகளையும் நிறைவு செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? இவர்கள் என்ன செய்தார்கள்? என்று குற்றப்பத்திரிகை வாசிக்கும் காலம் இதுவல்ல. இது தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொற்காலம்.
ஆகவே, எம் இனிய உடன் பிறப்புக்களே! இன்றுள்ள நிலையில் எமது நலனுக்காக வாழ்ந்து இன்று எல்லோர் உள்ளங்களிலும் ஒளிவீசும் தாயுமானவனால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்த்து தோளோடு தோள் நின்று தலைவனின் எண்ணப்படி தமிழர்களின் ஏகோபித்த ஒற்றுமையை தமிழர்களாகிய நாம் அரசியல்வாதிகளுக்கும் சர்வதேசத்திற்கும் நிலை நிறுத்திக் காட்டுவதே இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகவுள்ளது.
இன்றைய தேர்தலில் எமது ஒற்றுமையை நிலை நிறுத்தி ஒன்றிணைவோம். அடுத்து வரும் தேர்தல் காலங்களில் “பழையன களைதலும், புதியன புகுதலும்” என்பதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல ஏனைய தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சிக்குள் ஊடுருவி நிற்கும் சில பிடிவாதங்கள் எல்லாம் களைந்தெறியப்பட்டு புதுமையும் புதுப்பொலிவும் இளமைத் துடிப்பும் மிக்க திறமைசாலிகளை ஒருங்கிணைத்த கட்சி பேதமற்ற ஒன்றிணைந்த தமிழர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே எல்லோரும் இணைந்து நின்று வெற்றி பெற்று எமது உரிமைகளை வென்றெடுப்போம்.
எம் இனிய போராளிகளே!, கொஞ்சம் சிந்தியுங்கள்… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களுக்கு என்ன செய்தார்கள்? என்று கேட்கிறீர்கள்? அவர்களால் என்ன செய்ய முடியும்,
எம் சனத்தொகையே சொற்பம் தான் அதற்குள் எத்தனை கட்சிகள்? இப்படி பல கட்சிகள் உருவாகி சிதறிச் சீரழித்து நின்றால் உரிமைகளை வெல்வதெப்படி? தலைவரால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கும் அடி பணியாமல் விலை போகாமல் நிமிர்ந்து நிற்பதே மக்களுக்கு அவர்கள் செய்யும் பெரிய உதவி.
தமிழர்களின் குரலாக சர்வதேசத்தில் ஓங்கியொலிக்கும் குரலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தானே.
எம் இனிய உடன் பிறப்புக்களே!  நீங்கள் எமது பெரும் தேசியத் தலைவன் முன் எடுத்துக் கொண்ட சத்தியப்பிரமாணம் உண்மை என்றால் இன்று எம் இனம் உள்ள நிலையில் எமது தலைவனின் தடத்தினை மறந்து விட்டு இப்படிப் பிரிந்து நிற்பதில் அர்த்தமும் இல்லை. உங்களுக்கு வெற்றியும் இல்லை.
நடந்து வந்த பாதையினை திரும்பிப் பாருங்கள். எமது தலைவன் இந்திய வல்லாதிக்கத்தின் பிடியில் இருந்த பொழுது இந்திய அரசால் “உங்களுக்கு சகல வளங்களுடன் கூடிய முதலமைச்சர் பதவிதரலாம். போராட்டத்தை கைவிடு” என்று கேட்கப்பட்டது.
அதற்கு எம் தலைவன் சொன்ன பதில் “நீங்கள் என்னை மட்டுமல்ல எனது மக்களையும், என் தாய் மண்ணையும் அடிமையாக்க நினைக்கிறீர்கள் இதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்” என்று ஆணித்தரமாக கூறிய பதில் நீங்கள் அறியவில்லையா?
அதே தலைவன் போராளிகளிடம் பேசும் போதும் சர்வதேசத்துடன் பேசும் போதும் “தமிழீழம் உருவாகிய பின் நான் நல்லதொரு பொருத்தமான தலைமையின் கீழ் ஒப்படைத்து விட்டு நான் காயப்பட்ட போராளிகளுக்கும், எமது மக்களுக்கு சேவை செய்யும் வேலை மட்டும் செய்வேன்” என்று சொன்னது போராளிகளான உங்களுக்கு தெரியாதா?
வல்லையினிலே வயிற்றினிலே குண்டேந்திய தம்பி திலீபன் நல்லூரான் வீதியிலே பன்னிரு நாள் நோன்பிருந்து கொண்ட இலட்சியம் கொன்றிடாத கொள்கை வீரனாக வாடிக் கருகி போனானே..
சிம்மக் குரலோனின் குரல் ஓய்ந்த போது தேசமே அழுதது… அந்த தளபதி என்ன சொன்னான் “ புலிகள் வாழ வேண்டுமென்றோ, ஆள வேண்டுமென்றோ, ஆசை கொண்டவர்கள் அல்ல… மக்களுக்காக மக்களின் சுதந்திரத்திற்காக உயிரை அர்ப்பணிக்க தயாரானவர்கள்’ என்றாரே.
சாவுக்கு நாட்குறித்து நெஞ்சில் அதை தான் சுமந்து போக விடைகேட்டு நின்ற மில்லர் முதலான கரும்புலிகள் அவர்களின் கடைசி நிமிடங்கள்…
தலைவரால் புடம் போடப்பட்ட கிட்டு மாமா, குமரப்பா, புலேந்தி உள்ளிட்ட தளபதிகள் பிடிபட்டவுடன் விலைபோயிருந்தால் வெளிநாடுகளில் சுகபோகம் அனுபவித்திருக்கலாமே… ஏன் தம்மை அழித்துக் கொண்டார்கள்? அவர்கள் சத்தியத்தை மறவாத போராளிகள்.
திலீபனின் தியாகத்தாலும், தலைவனின் நாமத்தாலும் வாக்கு கேட்டு நிற்கும் முன்னாள் போராளிகள் தயவு செய்து எமது போராட்ட வரலாற்றினையும் புனிதத் தன்மையினையும் களங்கப்படுத்தாதீர்கள்… எமது நியாயமான போராட்டம் ஒருங்கிணைந்த வல்லாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்டு விட்டது. எம் இனம்.
“ அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” நினைவுகள் சுமந்த நீண்ட நெடும் பயணம் போக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. சிந்தித்து செயற்படுங்கள் சிறு மதியுடன் இறுமாப்பு கொள்ளாதீர்கள்.
“தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தனப் பேழை இங்கு கூவிடும் எங்களின் குரல் மொழி கேட்குதா குழியுனுள் வாழ்பவரே” பாடினோம் நாங்களும் பாடினோம். நீங்களும் பாடினீர்கள் தானே மறந்து விட்டீர்களா? ஆடம்பர வாகனங்களும் அதியுயர் வசதிகளும் உங்கள் கண்களை மறைத்து விட்டதா?
அன்பான உடன் பிறப்புக்களே, கடந்த காலங்களின் நினைவுகளை உங்கள் நெஞ்சங்களில் மீட்டிப் பார்த்து இன்றைய சூழ் நிலையில் உங்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீங்களாகவே பகிரங்கமாக விலகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படவிருக்கும் வரலாற்றுக் களங்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இது எனது அன்பான வேண்டுகோள்.
இங்கனம்,
தங்கள் உண்மையுள்ள,
முன்னாள் போராளி.
yokanathan001@gmail.com

ad

ad