புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன்

vithiyatharan
வீரகேசரி-உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்களைப் பார்த்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு
அனுப்புகிறேன். “என் எழுத்தாயுதம்” நூலில் வெளிவந்த படங்கள் யாரையும் இது தொடர்பாக சுதந்திரமாகக் கருத்துச் சொல்லவும், தம்மை அடையாளப்படுத்துவும் வழிவகுக்க மாட்டா வென்பதை வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மனதுக்குள் ஒப்புக் கொள்வீர்கள். எமது மக்களுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் எப்போதும் சரியாகத்தான் நடந்துள்ளார்கள். இந்தியர்களைப் போலவோ, சிங்களவர்களைப் போலவோ, ஏன் மலையக மக்களைப் போலவோ அன்றி வித்தியாசமாகச் சிந்திப்பவர்கள். அவர்கள் எப்போதுமே மேற்குறிப்பிட்டவர்கள் பாணியில் நடந்ததில்லை.
இந்தியாவில் நேரு- இந்திரா- ராஜீவ்-சோனியா- ராகுல் என்றும், தமிழகத்தில் கருணாநிதி-ஸ்ராலின்- அழகிரி- கனிமொழி எனவும், மலையகத்தில் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான், செந்தில் தொண்டமான் பாணியிலும், சிங்களவர்களில் டீ.எஸ்.‚ டட்லி மற்றும் பண்டா-சிறிமா-அனுரா- சந்திரிக்கா அத்துடன் பீ.ஏ.ராஜபக்ஷா, மகிந்த, பசில், சமல், நாமல், நிருபமா என்னும் குடும்ப ஆட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளிக்கும் போக்கு உண்டு. ஆனால் எமது மக்கள் பிரபுத்துவத் தலைமைகளான இராமநாதன், அருணாசலம் ஆகியோருக்குப் பின் தமது தலைவராக அவரது சந்ததியினரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்று அரசியலுக்குள் ஐ.தே.க.வினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சுவாமிநாதன் இவர்களின் பூட்டன் என்றாலும் அவரும் எமது மக்களால் தெரிவு செய்யப்பட்வரல்ல. இராதமநாதனுக்குப் பின் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தையே ஏற்றுக் கொண்டார்கள். அவருக்குப் பின் அவரது மகன் குமார் பொன்னம்பலத்தை ஏற்கவில்லை. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தத் தமிழினம் ஒரு கிறிஸ்தவரான அதுவும் மலேசியாவில் பிறந்த தந்தை செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரஹாசனை ஏற்கவில்லை. அமிர்தலிங்கத்தை ஏற்றனர். அமிர்தலிங்கத்துக்குப் பின் அவரது மகன் பகீரதன் ஒரு ஆயுதக்குழுவுக்குத் தலைமை தாங்கியிருந்தாலும் கூட பிரபாகரனையே ஏற்றனர். பிரபாகரனுக்குப் பின் நிச்சயமாக சாள்ஸ் உயிரோடு இருந்திருந்தாலும் அவரது மகன் என்ற ஒரு தகுதிக்காக ஏற்றிருக்கமாட்டார்கள். அவர்கள் எப்போதும் செயற்பாட்டையே எதிர்பார்ப்பவர்கள் எனவே அவர்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவன் இல்லையே என்ற விளம்பரத்துக்காக இத்தனை இலட்சம் ரூபா செலவழித்து நீங்களோ உங்கள் பின்னணியில் நின்று அழகன் போன்ற அற்புதமான போராளிகளைக் கொச்சைப்படுத்துவோரோ கவலைப்படத் தேவையில்லை. மக்களை அவர்களின் போக்கில் தீர்மானிக்க விட்டாலே தமிழருக்கு விடிவு கிடைக்கும். இத்தனை இலட்சத்தைச் செலவு செய்து அபிப்பிராயம் கேட்கும் தங்களை விடவும் தமிழ்க்கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, சு.க, விஜயகாந்த் கட்சி, சிறீ ரெலோ ஆகியோருக்கு கூடுதலாக அரசியல் தெரியும்.
உதாரணமாக சில விடயங்களைக் கவனிப்போம். சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியதும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் அரசியற் பணிக்காக அனுப்ப ஏற்பாடாகியிருந்தது. நீங்கள் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தீர்கள். புலிகளை வரவேற்கத் திரண்ட மக்களை மறிக்க மிருசுவிலில் படையினர் தடைகளைப் போட்டனர். அந்தத் தடைகளை உடைத்தெறிந்து காலால் ஓடியே முகமாலைக்குச் சென்றனர் எம்மக்கள். இந்நிலையில் புலிகளின் தளபதிகள் பானு, தீபன் ஆகியோரிடம் வந்த இராணுவக் கேணல் ஒருவர் 40,000க்கு மேற்பட்ட மக்கள் இங்கு கூடியிருக்கின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. விரைவாக உங்கள் உறுப்பினர்களை அனுப்புங்கள் என்று வேண்டிக் கொண்டார். அங்கு வந்த புலிகளின் உறுப்பினர்களை மக்கள் தோளிலே தூக்கிக் கொண்டாடினர். வழியெங்கும் பூரண கும்பம் வைத்து வரவேற்பு, நல்லூரில் கூட்டம் என்று பார்த்தால் மொத்தமாக ஒரு லட்சம் மக்கள் ஏதோவொரு வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார்கள். இத்தனைக்கும் யாழ்ப்பாணத்தில் 1996 இலிருந்து பல நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயிருந்தனர். பாலியல் வன்முறைகள், சிறிய சந்தேகங்களுக்குக் கூடக் கடத்தல், சித்திரவதை என்று பெரும் அவலப்பட்டிருக்கிறார்கள். ஆயினும் நிராயுதபாணிகளாக வந்த புலிகளை ஆயுதம் தாங்கிய படையினர் பார்த்துக் கொண்டிருக்க அழைத்துச் சென்றனர். மன்னாரிலும் புலிகளின் வருகையை அனுமதிக்க படையினர் தாமதிக்கிறார்கள் என்று உணர்ந்ததும் அவர்களைத் தள்ளிவிட்டு புலிகளின் பகுதிக்குள் வந்து அரசியற் போராளிகளைத் தூக்கிச் சென்றனர். மட்டக்களப்பிலும் கிட்டத்தட்ட இதே போன்ற வரவேற்புத்தான்.
புலிகளின் ஆயுதங்களுக்கு பயப்படவில்லை. இந்த யதார்த்தத்தை உணராத சிறீரங்கா போன்ற ஊடகவியலாளர்கள் நாமலுடனும், றுசாங்கன் போன்றோர் டக்ளசுடனும் சேர்ந்து கொண்டு புலிகள் மக்கள் மனதில் இருந்து அழிந்து விட்டார்கள் எனத் தப்புக்கணக்குப் போட்டனர்.
முகாம் வாழ்க்கை, சீரில்லா மீள் குடியேற்றம், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்தமை போன்ற விரக்தி நிலைமைகளும் மக்களின் தீர்மானங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை. தேர்தல்களில் தமது பங்கைச் சரியாகவே செய்தனர். இதற்காக தமிழர் விடுதலைக் கூட்டமைப்பை, சுமந்திரன் போன்றோரை எல்லாம் ஏற்றுக் கொண்டதாக அர்ததமில்லை, ஏன் அனந்தியைக் கூட தமது வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. அவருக்கு ஒரு உணர்வின் அடிப்படையில் வாக்களித்திருந்தார்களேயொழிய வேறெதுவும் காரணமல்ல. அப்படி வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருப்பார்கள்.
ஒரு கட்சித் தலைவராக இருந்து வவுனியாவில் ஆளும் கூட்டணிக்குத் தலைமை தாங்கிய சிறீ ரெலோ கட்சியின் தலைவரையே தூக்கியெறிந்தவர்கள் எம் மக்கள். ஏன் சுமந்திரன் தேர்தலில் போட்டியிட்டுப் பார்க்கட்டும். கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் விருப்பு வாக்கு பெற்றோரில் கடைசி இடத்துக்குத்தான் அவர் போவார். அவர் தனது அரசியல் எதிரியெனக் கருதி அரசியல் குழுவிலேற்ற முயற்சிக்கும் அனந்தி தனியே யாழ். மாவட்டத்தில் எடுத்த வாக்குககளின் கால் பகுதியேனும் கிளிநொச்சி-யாழ்ப்பாண மாவட்டங்களில் பெறமுடியாது என நிச்சயம் சொல்லலாம். இத்தனை வருட அரசியல் அனுபவத்தைக் கொண்ட ஆனந்த சங்கரியே அவரது கட்சியின் சார்பில் மாகாணசபைக்குப் போட்டியிட்ட இருவரின் விருப்பு வாக்குகளுக்கு கிட்டவும் போகமுடியாத நிலையிலிருந்ததை உணர வேண்டும். ஏன் யாழ் மேயர் பதவியைக் கூட அவருக்குக் கொடுக்க மக்கள் விரும்பவில்லை.
ருசாங்கன், சோ.ப, செங்கை ஆழியான், மற்றும் மல்லிகை டொமினிக் ஜீவா போன்ற பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் பெற்ற கசப்பான அனுபவங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இந்தநிலை விரைவில் சிறீரங்காவுக்கும் ஏற்படும். அவர் யானையில் ஏறினால் என்ன? அன்னத்தில் பறந்தால் என்ன? மகிந்தவுக்கு எதிரான வாக்குகள் மூலம் தெரிவாகிவிட்டு அவர் மூன்றாம் முறை பதவியேற்க வழிவகுக்கும் சட்ட மூலத்தை ஆதரித்ததை, நாமலுக்கும் அவரது தந்தைக்கும் அதிக விசுவாசியார் என்பதை நிரூபிக்க றிசாட் பதியுதீனுடன் போட்ட சண்டையை மக்கள் மறக்கமாட்டார்கள்.
ஒன்றில் பளபளப்பான மொட்டைக்கு ஆசைப்பட வேண்டும். அல்லது அலங்காரக் குடுமிக்கு விருப்பப்பட வேண்டும். பத்திரிகையாளனாகவும் நானே, அரசியல்வாதியாகவும் நானே என்று ரங்கா வழியில் போனால் கசப்பான அனுபவங்கள் தான் தங்களுக்கும் ஏற்படும்.
நீங்கள் தனியாகப் போட்டியிட்டு கொஞ்ச வாக்குகளைப் பிரித்தால் விகிதாசாரப் பிரதிநிதத்துவ முறையின் கீழ் விஜயகலா பெறும் வாக்குகள் அவரது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளப்போதும். இந்த உதவியைத்தான் கடந்த பொதுத் தேர்தலில் சிவாஜிலிங்கம் போன்றோர் செய்தார்கள். இதே உதவியைத்தான் ரணிலும் தங்களிடம் எதிர்பார்க்கின்றார். இன்னுமொரு விடயம் திருமலை, அம்பாறை மாவட்டங்களில் இருந்து ஒரேயொரு தமிழர் தான் தெரிவாக முடியும். இங்கு மாவட்டங்களிலும் ஒவ்வொருமுறைதமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. அந்த நிலைமை மீண்டும் ஏற்பட தாங்கள் துணை போகவேண்டாம்.
18ம் அரசியல் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாகக் கையை உயர்த்திவிட்டு “மின்னல்” நிகழ்ச்சியில் மற்றவர்களைக் கேள்வி கேட்கும் ரங்காவின் வரிசையில் தாங்களும் இடம்பெறவேண்டாம். வேண்டுமானால் இப்போது இணையத்தளம் நடத்துவது போல் புதிதாக ஒரு பத்திரிகையைத் தொடங்குங்கள். இப்போதுள்ள பத்திரிகைகள் ஏதோ ஒரு வகையில் சுய தணிக்கைக் குட்பட்டவைகளே. அப்படியில்லாமல் பக்கச்சார்பின்றி தனித்துவமாக எல்லோரது கருத்துக்களையும் வெளிப்படுத்துங்கள். அதுதான் காலத்தின் தேவை.
பிரபாகரனையும், அன்ரன் பாலசிங்கத்தையும், முன்னாள் போராளிகளையும் விட்டுவிடுங்கள். கூவிக்கூவி அவர்களை விற்காதீர்கள். அவர்கள் நாறிப் போகும் பண்டமல்ல. தங்களுக்கு இதுவரை யார் உதவினார்கள் என்பது முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல் கைதிகளுக்கும் தெரியும். அதுபோல் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சிறீரங்கா யாழ்ப்பாணத்துக்கும், நீங்கள் சிறீகோத்தாவுக்கும் ஏன் சென்றீர்கள் என்பதும் இரகசியமான விடயங்களல்ல.
-பகலவன்-

ad

ad