புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

அரசியலில் இருந்து ஒதுங்கிய போது சந்திரிகா இழைத்த மாபெரும் தவறு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இன்று பண்டாரநாயக்கவின் கொள்கைகள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்திருக்கும்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ‘மஹிந்த சிந்தனை’ என்ற பெயரில் கொள்ளையர் திட்டமே முன்னெடுக்கப் பட்டதாகவும் சாடியுள்ளார். சந்திரிகா அம்மையார் இந்த யதார்த்தத்தை காலம் கடந்தே புரிந்து கொண்டிருக்கிறார். அன்று ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பில் அச்சுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சங்க, வெத, குரு, கொவி, கம் கரு என்ற ஐம்பெரும் சமூகங்களை உள்வாங்கியே அமரர் பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிகரானதொரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். இந்தக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிடையில் ஜனநாயக ரீதியில் எவ்வித வேறுபாடுகளும் காணப்படவில்லை.
இவ்விரு கட்சிகளுமே நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வந்தன. இருதரப்பினருமே ஜனநாயக ரீதியிலேயே எதிரும் புதிருமாகச் செயற்பட்டு வந்தனர்.
அமரர் பண்டாரநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும், சந்திரிகா பண்டாரநாயக்கவும் அக்கட்சியை கொள்கை அடிப்படையில் கட்டிக்காத்து வந்தனர். உழைக்கும் வர்க்கம் சுதந்திரக் கட்சியின் பின்னால் அணி திரண்டிருந்தது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பின்னர் ஜனநாயக பாரம்பரியத்தைக் கடைப் பிடித்து அரசியலமைப் புக்கமைவாக அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அவர் ஒதுக்கும் போது விட்ட தவறு காரணமாக சுதந்திரக் கட்சி தலைகீழாக மாறிப்போகும் அவலத்துக்குள் தள்ளி விடப்பட்டுள்ளது.
இப்படியான நிலை ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினர் பல தடவைகள் எச்சரித்த போதும் அதனைக் காதில் போட்டுக்கொள்ளாமல் செயற்பட்டதன் விளைவாக சுதந்திரக் கட்சி இன்று துண்டாடப்பட்டுப் போயுள்ளது.
2005 இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியான கையோடு பண்டாரநாயக்க குடும்பம் சுதந்திரக் கட்சியிலிருந்து ஓரமாக்கப்படும் படலம் ஆரம்பித்தது. முதலில் கொழும்பு ரி.பி. ஜாயா மாவத்தையிலுள்ள சுதந்திரக் கட்சித் தலைமையகத்திலிருந்த அமரர் பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டு மஹிந்தவின் தந்தையின் படம் அந்த இடத்தில் தொங்கவிடப்பட்டது. கட்சியில் பண்டாரநாயக்க கொள்கைகள் படிப்படியாக செயலிழந்து போகும் நிலை ஏற்பட்டது. அதற்குப் பதிலாக மஹிந்த சிந்தனை என்ற ஒரு கொள்கை முன்வைக்கப்பட்டது.
சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல. நாட்டு மக்கள் அனைவரதும் கரங்களில் இருக்க வேண்டிய வேதம்புத்தகம் போல் அதனை இலட்சக்கணக்கில் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டன.
மஹிந்தவின் இந்த சிந்தனையை சிலர்
‘சிலிமா’ மொழிவதைப் போன்று இரவும் பகலும் உச்சரித்து வந்தனர். எங்கு போனாலும் இவர்களது கைகளில் மஹிந்த சிந்தனை தவறாமல் இருக்கும். வாய்களும் மஹிந்த சிந்தனையையே மொழிந்த வண்ணம் இருக்கும்.
கட்சியில் சங்க, வெத, குரு, கொவி, கம்கரு கோஷத்துக்குப் பதிலாக கொள்ளை, கொலை, ஊழல், மோசடி, காடைத்தனம் என்பனவே உச்ச நிலையில் காணப்பட்டன. கட்சியில் நேர்மை மிக்க பலர் செய்வதறியாது தடுமாறிப்போயினர். பொறுமைக்கும் எல்லை இருக்க வேண்டுமல்லவா? சிலர் கட்சிக்குள் எதிர்ப்புக்குரல் எழுப்பத் தொடங்கினர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையை மஹிந்த மேற்கொண்டார்.
2010 தேர்தலுக்குப் பின்னர் மஹிந்தவின் கரங்கள் இரும்புக்கரங்க ளாக மாறத்தொடங்கியது. வெளியே நின்ற சிறுபான்மைக் கட்சிகள் சிலவற்றையும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 18 உறுப்பினர்களை விலைக்கு வாங்கி 2/3 பெரும் பான்மையை ஏற்படுத்தி தொடர்ந்து அதிகாரத்திலிருக்கும் விதத்தில் 18வது திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றிக்கொண்டார்.
உண்மை தெரிந்திருந்தும் சத்தியத்தை கூறாமல் மெளனிகளாக நின்று வாக்களித்ததன் மூலம் பெரும் துரோகத்தைச் செய்தவர்கள் பின்னர் நேற்றுக்காலைதான் விழித்துக் கொண்டவர்கள் போன்று கவலைப்படத் தொடங்கினர். இந்தக் கவலை கூட அரசியல் நோக்கம் கொண்டதென்றே மக்கள் கூறத்தலைப்பட்டனர்.
இதனிடையேதான் இறைவனின் கண் திறந்து அரசியலின் திசையை திருப்பி விட்டான். ஜோதிடரின் கூற்றை நம்பி தேர்தலில் குதித்த மஹிந்தவுக்கு எதிராகப் போட்டியிட அவரது கட்சிச் செயலாளரே களமிறங்கினார். அன்றுதான் மைத்திரி யுகம் ஆரம்பமானது. ஜனவரி 8ல் ஈட்டப்பட்ட வெற்றியின் மூலம் நல்லாட்சி ஆரம்பமானது. தோற்கடிக்கப்பட்ட மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றார்.
இந்த நிலையில்தான் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திரக் கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக அடுத்த வீட்டுக்காரர்களின் உதவியுடன் முதலில் நாட்டைக் காக்கப் புறப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 17இல் மக்கள் அளிக்கும் தீர்ப்பு நாட்டையும், கட்சியையும் காப்பாற்றும் தீர்வாக அமைய வேண்டுமென அவர் நாட்டு மக்களிடம் கோரியிருக்கிறார். கட்சி, நிறம், சின்னம் இவையல்ல இன்றைய முக்கியம். நாடுதான் மிக முக்கியம் என்பதை உணர்ந்து மீண்டுமொருதடவை கொள்ளைக்கூட்டத்தின் கரங்களுக்கு அதிகாரம் போக இடமளிக்கப் படக்கூடாது என்பதில் சந்திரிகா அம்மையார் உறுதியாகவே இருக்கின்றார். உண்மையான சுதந்திரக் கட்சியினர் அவர் பின்னால் அணிதிரண்டிருப்பதையும் காண முடிகிறது.

ad

ad