புதன், ஏப்ரல் 27, 2016

மே தினக் கூட்டங்களுக்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு

இம்முறை மே தினக் கூட்டங்களுக்குச் செல்வதற்காக இதுவரை 3,500 பஸ்கள் முன்கூட்டியே பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை போக்குவரத்துச்
சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
மே தினத்துக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விசேட சலுகைக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இ.போ.ச. பஸ்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென கூறியுள்ள அவர, தூரத்தின் அடிப்படையில் கட்டணங்கள் அறவிடப்படுமெனவும் தெரிவித்தார்.
இத்னபடி, 100 கி.மீ க்கு 6,000 ரூபா, 100 தொடக்கம் 250 கி.மீ க்கு 12,500 ரூபா, 250 தொடக்கம் 500 கி.மீ க்கு 17,500 ரூபா, 500 தொடக்கம் 750 கி.மீ க்கு 27,500 ரூபா, 750 கி.மீ க்கு மேல் ரூபா 27,500.
அத்துடன், இரவு நேரத்துக்காக ஒவ்வொரு பஸ்ஸுக்கும் மேலதிகமாக ரூபா 800 அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே தினக் கூட்டத்துக்கு இ.போ.ச. பஸ்களில் செல்ல விரும்பும் அரசியல் கட்சிகளிடம் உரிய கட்டணத்தை அறவிட்டபின், இந்தச் சேவையை வழங்குமாறு தான் சகல பிராந்திய டிப்போ அதிகாரிகளுக்கும் சுற்றுநிருபமொன்றின் மூலம் அறிவித்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
பஸ்களை முன்கூட்டியே பதிவுசெய்துள்ள அரசியல் கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்