புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2016

நாரந்தனை - கிணற்றினுள் வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது சிறுமி.தங்கை பிழைக்கவில்லை

யாழ்ப்பாணம்-ஊர்காவற்றுறை- நாரந்தனை பகுதியில் கிணற்றினுள் தவறி வீழ்ந்த தங்கையை,தோளில் சுமந்தவாறு அரை மணி நேரமாக கிணற்றினுள் போராடிய 13 வயது
சிறுமியால், தங்கையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் ஊர்காவற்றுறைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாகவும் இந்த சம்பவத்தில் றீகன் ஜெயசானி ( வயது 7) எனும் சிறுமியே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த சிறுமியான ஜெயசானி, அவரின் அக்காவான மேரி ஜெரின்சிகா, மற்றும் இவர்களின் 5 வயது சகோதரன் ஆகியோர் அவர்களின் அம்மம்மாவுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று(27) கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருந்த அக்காவுடன் உயிரிழந்த சிறுமியும் அருகில் குடையைப் பிடித்துக் கொண்டு நின்றுள்ளார். அந்த நேரம் காற்றுப்பலமாக வீசவே குடை பிடித்துக் கொண்டிருந்த தங்கை நிலை தடுமாறி 7 அடி ஆழமான கிணற்றினுள் வீழ்ந்துள்ளார்.
தனது தங்கை கிணற்றில் வீழ்ந்ததை கண்ட அக்கா கிணற்றில் குதித்து தங்கையை தோளில் சுமந்தவாறு கிணற்றின் படியைப் பிடித்து ஏற முயன்றுள்ளார். ஆனால் அவரால் ஏற முடியாது போகவே உதவிக் குரல் எழுப்பியுள்ளார். அவரின் உதவிக்குரல் யாருக்கும் கேட்காததால்,யாரும் அவர்களுக்கு உதவவில்லை.
இதேவேளை தங்கை மயக்கமடைந்துள்ளார், மயக்கமடைந்த தங்கையை தோளில் சுமந்தவாறு கிணற்றின் படியைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தும் உதவிக்குரல் எழுப்பிய நிலையில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போராடியுள்ளார்.
இதேவேளை சோர்ந்த நிலையில் தங்கையைப் பிடித்தவாறு கிணற்றில் இருந்த அக்காவைக் கண்ட, அவர்களின் 5 வயது சகோதரன் அம்மம்மாவிடம் விடயத்தை தெரிவித்துள்ளார்.
விடயத்தை அறிந்த அவர்களின் அம்மம்மா உதவிக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து கிணற்றில் இருந்து இருவரையும் மீட்டபோதும் ஜெயசானி உயிரிழந்தமை தெரியவந்தது.
நீண்டநேர போராட்டத்தினாலும் அக்காவால் தங்கையின் உயிரைக்காப்பாற்ற முடியாமல் போன சம்பவம் அப்பகுதி எங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad