புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் நவி; இலங்கை அரசு குற்றச்சாட்டு 
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மலர் வளையம் வைத்து அஞ்சலி
செலுத்தவிருந்தார்.
 
இந்தத் திட்டத்தை அவர் இலங்கை அரசுக்குத் தெரியாமல் மறைத்திருந்தார். எனினும் அந்தத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் அவர் அஞ்சலி செலுத்த விரும்பியிருந்தால், அதற்குப் பொதுவான ஒரு இடத்தைத் தெரிவு செய்திருக்கலாம். 
 
இது ஒரு தலைப்பட்சமானது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் லண்டனில் தெரிவித்துள்ளார் இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து நவநீதம் பிள்ளை கொழும்பில் வெளியிட்ட கருத்துகள், முற்றிலும் நியாயமற்ற தவறான பக்கசார்புடையவை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்று முன்தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 
 
நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் தொனி மற்றும் பொருள் என்பன நடுநிலைமைக் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பீரிஸ் குறிப்பிட்டார்.
 
கம்போடியாவிலும், யூகோஸ்லாவியாவிலும் போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் செய்யமுடியாத புனரமைப்புப் பணிகளை இலங்கை அரசு நான்கே ஆண்டுகளில் செய்திருப்பதாகவும், அதை நவநீதம்பிள்ளை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான நோக்குடனேயே இலங்கை அரசு, நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவருக்கு எந்த இடத்துக்கும் செல்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
ஆயினும், வடக்கில் இராணுவத்தின் பங்கு தொடர்பாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும், இலங்கைப் படையினர் அழையா விருந்தாளியாக, தேவையின்றித் தலையீடு செய்வதாகவும், ஒடுக்குமுறைகளைக் கையாள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது தவறானது எனவும் பீரிஸ் மேலும் கூறினார்.
 
இலங்கை எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாகக் குற்றம்சாட்டிய நவநீதம்பிள்ளை அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாகக் கூறிய குற்றச்சாட்டுக்கும், அவர் ஆதாரங்களைத் தரவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
 
நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் மிரட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் தரப்பட்டால் விசாரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ad

ad