புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

மலையகம் என்ற ஒரு சமுதாயம், இலங்கையில் இருக்கின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டிய கடமையிலிருந்து மலையக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தவறி விட்டனர்.
 இது வேதனைக்குரிய ஒரு விடயமென்று கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளருமான கே.ரி.குருசாமி தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஜனநாயக இளைஞர் இணையம் ‘மலையகம் எங்கள் எதிர்காலம்’ என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பிரைட்டன் ரெஸ்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் தலைமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த ஒரு வாரகாலமாக இலங்கை விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு உட்பட பலதரப்பட்ட மக்களின் மனித உரிமைகள் சம்பந்தமான விடயங்களை அறிந்து கொண்டார். அவருடன் சிங்கள, முஸ்லிம் மற்றும் வடகிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இது உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்ற விடயமே, ஆனால் 200 வருடங்களாக இந்த நாட்டில் வாழ்கின்ற 15 இலட்சம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எந்த ஒரு அரசியல் தலைமையோ, புத்திஜீவிகளின் குழுக்களோ அவரை சந்திக்க தவறியுள்ளமை வேதனை அளிக்கிறது.
இந்த நாட்டில் பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகி, இன்றும் அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் மலையக மக்கள் வாழ்கின்றனர். வடகிழக்கு மக்களின் சனத்தொகையை ஒத்தளவில் ஜனத்தொகையினை கொண்ட இம் மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதனை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்துவதற்கு கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் சார்ந்த மலையக அரசியல் தலைமைகள் நவநீதம்பிள்ளை அம்மையாரை சந்தித்து, தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினால் தமக்கு பாதுகாப்பு அச்சம் ஏற்படலாம் என்று கருதி அவருடனான சந்திப்பை சில வேளைகளில் தவிர்த்திருக்கக் கூடும். ஆனால், அரசாங்கத்தின் அனுமதியுடன் ஒரு 15 நிமிடம் அளவிலான தேநீர் விருந்துபசாரம் ஒன்றினை அவருடன் ஏற்பாடு செய்திருப்பின், மலையகம் என்ற சமூகம் இந்த நாட்டில் உள்ளதென்பது அவருக்கு தெரியவந்திருக்கக்கூடும்.
நவநீதம்பிள்ளை அம்மையார் இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு பகுதியிலும் மலையகம் பற்றிய எவ்வித தகவலும் உள்ளடக்கப்படவில்லை. இது கவலையளிக்கின்ற விடயமாக உள்ளது. இதற்கு வெறுமனே அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் கூற முடியாது. நம் சமுதாயத்தில் புத்திஜீவிகள் உள்ளனர். அவர்களேனும் இவ்விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தி இருக்க வேண்டும். உண்மையில் ஏனைய சமூகங்களை போன்ற முறையான கட்டமைப்பு எம் மலையக சமுதாயத்தில் இல்லாததன் விளைவே இதுவாகும்.
மலையக சமூகம் சார் விடயங்கள் சர்வதேசத்தின் பாற் செல்வதற்கு வடக்கு, கிழக்கில் போல யுத்தம் செய்ய வேண்டாம். இன்றைய காலத்திற்கு ஏற்ப சிறந்த சமூக கட்டமைப்பு இருந்தாலே போதுமானது.
மேலும், கடந்த 30ஆம் திகதி அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 100ஆவது ஜனன தினமாகும். அதனை நினைவு கூர்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். மலையக சமூகம் என்பது இந்நாட்டில் உள்ளது என்பதனை தேசியத்திற்கு வெளிப்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ஆனால் அவரின் மறைவிற்கு பின்னர் அவர் உருவாக்கிய அமைப்பு சமூகத்திற்கு தேவையான தலைமைத்துவத்தினை வழங்குகின்றதா? என்பது சந்தேகமான விடயமே ஆகும்.
ஆனால், மனோகணேசன் அந்த கட்டமைப்பில் இயக்குகிறார். வெறுமனே அரசியல், தேர்தல் வெற்றி என்ற நோக்கம் மட்டும் அல்லாது மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலேயே அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
மக்களின் எதிர்காலத்தை வளமாக்க வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை தேவை. அதனையே ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனின் தலைமையில் செய்கிறது. அவர் சமூகம் சார் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
அத்தோடு ஜனநாயக இளைஞர் இணையம் படித்த இளைஞர்களை உள்ளீர்த்துதான் திட்டம் இடுகின்ற கட்டமைப்பினை எதிர்காலத்தில் உருவாக்கும்.
வாக்களிக்கின்ற சமூகம், நேர்மையான அக்கறையுள்ள தலைமைகளினால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதன் மூலம், மேற்கூறிய கட்டமைப்பை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.
மேலும், இன்று கொழும்பில் இயங்குகின்ற அரசியல் சாராத மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவை 8 வருடங்கள் சிறப்பாக நடைபெறுகின்றமைக்கு சிறந்த கட்டமைப்பே காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad