புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

பலத்த சர்ச்சைகளின்  பின்னர் ஒத்தி வைக்கப்பட்ட கூட்டமைப்பு கூட்டம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுகாலை முதல் மாலைவரையில் தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிபெற்ற தோல்வியடைந்த அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு உரியவர்களையும், மாகாண அமைச்சர்களையும் தெரிவுசெய்யும் வகையில் இடம்பெற்ற இக்கூட்டம் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
நாம் அங்கு நின்றபோது, வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற பல வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களுடன் வாகனங்களில் அங்கு வந்திறங்கியதை காணக்கூடியதாக இருந்தது.
தோல்வியுற்றவர்களில் பெரும்பாலானோர் அந்த போனஸ் ஆசனம் தமக்கே தரப்பட வேண்டுமென மீண்டும் மீண்டும் அங்கு விவாதித்துக் கொண்டிருந்ததையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இந்த வகையில் போனஸ் ஆசனத்தைப் பெற்றுவிட வேண்டுமென்ற நோக்கிலான பலதரப்பட்ட கருத்துக்களும் முன்வைக்கப்பட்ட வண்ணமிருந்தது.
இதில் மூத்த அரசியல் தலைவரான வட மாகாணசபை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒருவர் கூட்டத்தில் கருத்து வெளியிடுகையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்றிற்கான ஒருவராக திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்களை நாம் தெரிவுசெய்வது நல்லதென்றும், ஏனெனில் இதன்மூலம் கூட்டமைப்பிற்குள் ஓர் ஒற்றுமையை நிலைநாட்ட முடியுமெனவும் கூறியதுடன், கூட்டமைப்பில் உள்ள அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வட மாகாணசபையில் இருப்பது எதிர்கால அரசியலுக்கு நல்லதாக இருக்குமென்றும் குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.
அதேவேளை வேறு சிலர் இல்லையில்லை, கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளரான வவுனியா சண் மாஸ்டரின் சகோதரியான திருமதி மினுபானந்தகுமாரி கேதுரட்ணம் அவர்களை தெரிவுசெய்யுமாறு கோரினார்கள். இப்படியாக ஒவ்வொருவரும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தபோது ஒருசிலர் தவணையின் அடிப்படையில் அதாவது வருடத்திற்கு ஒருவர் என்கிற விதத்தில் போனஸ் ஆசனங்களுக்கு உரியவரைத் தெரிவு செய்யலாம் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்கள்.
இதேபோன்று அமைச்சர்கள் தெரிவிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு, பல இழுபறி நிலைமைகள் ஏற்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது. இருப்பினும் கூட்டத்தின் இறுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்கள், எதிர்வரும் சனிக்கிழமை மீண்டும் அனைவரும் ஒன்றுகூடி இதற்கான இறுதி முடிவை எடுப்பதென கூறியதைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுபெற்றது.
கூட்டத்தைத் தொடர்ந்து திரு. இரா.சம்பந்தன் அவர்கள் கொழும்பு பயணமாகவுள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அவர் மீண்டும் யாழ் திரும்பியபின் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், சி.வி விக்னேஸ்வரன், அனந்தி சசிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றுகூடி இதற்கான தீர்மானம் எடுப்பதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad