புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013

நாங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்! வடமாகாண தேர்தல் குறித்து அனந்தி சசிதரன் பேட்டி-விகடன் 
அளவில் பெரிய கொழும்பு வெற்றிலை காரம் குறைவானது. அளவில் சிறிய யாழ்ப்பாண வெற்றிலை மிகவும் காரமானது. கொழும்பு வெற்றிலையை யாழ்ப்பாண வீடுகள் வீழ்த்தி இருக்கிறது என்று கொண்டாடுகிறார்கள் இலங்கைத் தமிழர்கள்.  அதாவது, ராஜபக்ச கூட்டணியின் சின்னம் வெற்றிலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் வீடு. 
இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்திருக்கும் வடமாகாண சபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு மடங்கு இடங்களைக் கைப்பற்றி, வென்றுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. முன்பு தமிழரசுக் கட்சியின் சின்னமாக இருந்த வீடு இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக மாறியுள்ளது.
இதுவரை நடந்த தேர்தல்களில் எந்த ஒரு வேட்பாளரும் பெறாத அளவுக்கு 1,32,255 வாக்குகள் பெற்று முதல்வர் பதவியை வென்றிருக்கிறார் சி.வி.விக்னேஸ்​வரன்.
புலிகளின் தளபதி எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் 87,870 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
அனந்தி தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி!
முள்ளிவாய்க்கால் படு​கொலைக்குப் பிறகு நாங்கள் பேசவே அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தோம். காணாமல் போனவர்கள் தொடர்பாக யாரிடம் முறை​யிடுவது, எங்கே போய் தேடு​வது என்று தெரியாமல் அலைந்து​கொண்டிருந்தோம்.
இறுதிப்போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து வந்தவள் நான். எம் மக்களின் கண்ணீரின் வலிகளும் வேதனைகளும் அறிந்தவள். இந்த வெற்றி நாங்கள் பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இருக்கிறது.
உரிமைகளுக்காக அஹிம்சை முறையில் போராடலாம் என்ற நம்பிக்கையை இந்தத் தேர்தல் வெற்றி எங்கள் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது. மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் அனந்தி.
கேள்வி  - இராணுவ நெருக்கடிகளை மீறி எப்படி வெல்ல முடிந்தது?
பதில்  -  நவநீதம்பிள்ளை வந்தபோது அவரைச் சந்தித்தோம். காணாமல் போனவர்களின் உறவுப் பெண்களைத் திரட்டிச் சென்று அவரைப் பார்த்தோம். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு ஐ.நா. முகம் கொடுக்க வேண்டும் என்று அணுகினோம். ஆயிரக்கணக்கான மக்கள் யாழ் வீதிகளில் திரண்டதைக் கண்ட இராணுவம் அப்போதே என்னைப் புலனாய்வு வளையத்தினுள் கொண்டு வந்தது. எப்படியாவது போட்டியில் இருந்து என்னை அப்புறப்படுத்தி நாட்டைவிட்டே துரத்த வேண்டும் என்று திட்ட மிட்டது.
தென்னிலங்கை ஊடகங்கள் என்னை புலிப் பயங்கரவாதி என்று தொடர்ந்து பிரசாரம் செய்தன. வாக்களிக்கும் மக்களிடம் என்னைப் பற்றி அசிங்கமாக துண்டறிக்கை அளித்தனர். என் வீட்டில் புகுந்த இராணுவத்தினர் என் ஆதரவாளர்களைத் தாக்கி அச்சுறுத்தினர்.
உச்சகட்டமாக தேர்தல் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன், உதயன் பத்திரிகை பெயரில், நான் ஆளும் கட்சியோடு இணைந்து விட்டதாக போலியாக அச்சிட்டு வீதி வீதியாக விநியோகம் செய்தனர்.
எனக்கு 10 சதவிகித வாக்குகள் கிடைக்காமல் போனதற்கு இதுவே காரணம். ஆனாலும் இதை எல்லாம் மீறி எம் மக்கள் என்னை இரண்டாம் இடத்துக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
கேள்வி  - இப்போது பதவிக்கு வந்து விட்டீர்கள். மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை உங்களால் தீர்த்து வைக்க முடியுமா?
பதில்  - போரில் வீட்டுக்கொருவரை இழந்த மக்களுக்கு மறுவாழ்வு தேவை. சர்வதேச சமூகத்திடமும் இலங்கையிடமும் நாங்கள் இதையே கோருகிறோம்.
சரணடைந்து காணாமல் போனவர்கள் கிடைத்தால், சிறைகளில் அடைபட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் மக்கள் தங்களை மறுசீரமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
அடுத்த கட்டமாக நிலங்கள், வீடுகள், அரசியல் உரிமைகள் என நாங்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
போரைத் தொடங்கும்போது 'புலிகளுக்கு இராணுவத் தீர்வு.. மக்களுக்கு அரசியல் தீர்வு’ என்றுதான் போரைத் தொடங்கினார் ராஜபக்ச.
புலிகளுக்கு இராணுவத் தீர்வை வழங்கியவர்கள் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவில்லை. இனியாவது, ஆட்சி செய்வோர் மக்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கேள்வி  -  ஒரு பெண்ணை வடமாகாண முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே, உங்களுக்கு முதல்வர் ஆசை உள்ளதா?
பதில் - நிச்சயமாக இல்லை. ஒரு பெண் என்ற வகையிலும் யுத்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் என்ற வகையிலுமே நான் அரசியலுக்கு வந்தேன்.
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு வரவில்லை.
எமது மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை இயன்ற அளவு பெற்றுக் கொடுக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஒரு வலுவான அரசியல் தளம் அமைந்துள்ள நிலையில் அஹிம்சை வழியில் தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவோம்.

ad

ad