புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013




              தேர்தல் நெருங்கும் காலங்களில் எல்லாம் தேசிய அரசியலிலும் சரி, மாநில அரசியலிலும் சரி மூன்றாவது அணி என்ற நாடகம் நடத்தப்படுவதைப் பார்க்கலாம். ஆனால் தேர்தல் கூட்டணிகள் முடி வாகும் நேரத்தில் இந்த நாடக கோஷ்டிகள் கம்பெனியை கலைத்துவிட்டு ஏதாவது ஒரு பெரிய கட்சியில் துண்டுபோட்டு இடம் பிடிப்பதற்காக அலைமோதும் காட்சியையும் கூடவே பார்க்கலாம். திரும்பத் திரும்ப இதுதான் நடந்துகொண்டிருக் கிறது.

அண்மையில் பா.ஜ.க.வை மையமாக வைத்து தமிழகத்தில் இப்படி ஒரு நாடகம் அரங்கேற்றப் படுகிறது.
தமிழருவி மணியன் போன்றவர்கள் காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு கூட்டணியை தமிழகத்தில் நிறுவுவதற் காக உதிரிக் கட்சிகளிடையே வெல்டிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார் கள். எஞ்சின் இல்லாத ஒரு வண்டியின் நான்கு சக்கரங்களையும் பழுது பார்த்து ஓட்ட முயற்சிப்பது போன்றது இந்தப் பணி.

பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை இணைத்து ஒரு மூன்றாவது அணியை உருவாக்கலாம் என்பதுதான் இந்தக் கனவு. அந்த தன்னம்பிக்கையில்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் கள் தமிழகத்தில் ஒரு எதிர்பாராத கூட்டணி அமையப்போகிறது என்று சொல்லி வருகிறார்கள். அப்படியானால் பா.ம.க.வின் நிலை? இன்று பா.ம.க.வும் பா.ஜ.க.வும் பல நிலைகளில் கொள்கை ரீதியாக இணங்கிப்போகின்றன. ஆடிட்டர் ரமேஷ் கொலையை ஒட்டி பா.ஜ.க. நடத்திய பந்த்தை பா.ம.க. வெளிப்படையாக ஆத ரித்தது. பா.ம.க. ஏற்கனவே திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை கீறல் விழுந்த ரிக்கார்டாக திரும்பத்  திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு பா.ம.க.வை சைலண்ட் பார்ட்னராக வைத்துக் கொண்டு மற்ற கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இப்போது பா.ம.க.வை கூட்டணியின் ஒரு அங்கமாக நிறுத்தினால் விஜயகாந்த் இந்தக் கூட்டணியில் எந்த ஆர்வமும் காட்டமாட்டார். ஏனென்றால் திராவிடக் கட்சிகளைவிட பா.ம.க. உள்ளூர தீவிரமாக வெறுப்பது தே.மு.தி.க.வைத்தான். ஏனென்றால் வடமாவட்டங்களில் வன்னியர் ஓட்டுகளை கணிசமாக தன் பக்கம் கொண்டுவந்தவர் விஜயகாந்த். ஒருவிதத்தில் பா.ம.கவின் உண்மையான அரசியல் எதிரி தே.மு.தி.க.தான். ஆனால் இதை மறைத்துக்கொண்டு தி.மு.க., அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்தால் அதில் இணைந்துகொள்ளலாம் என்பது ராமதாசின் கணக்காக இருக்கக்கூடும். அதற்காகத்தான் விஜயகாந்த் மீது போடப்படும் அவதூறு வழக்குகளை கண்டிக்கும் இந்தத் திடீர் கரிசனம்.

ஆனால் விஜயகாந்த்திற்கு ஒரு நீண்டகால தொலைநோக்குத் திட்டம் இருக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்று பலவீனமடையும் காலத்தில் அதற்கு மாற்றாக வரக்கூடிய ஒரே கட்சியாக தே.மு.தி.க.வே இருக்கும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்த நம்பிக்கையில் ஓரளவு உண்மை இருக்கிறது. சாதி அடையாளமுள்ள கட்சிகளின் தலையெழுத்தும் வாக்கு வங்கியும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டது. அது பலவீனமடைய வாய்ப் புள்ளதே தவிர வளர்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் தே.மு.தி.க. போன்ற ஒரு பொதுஅடையாளமுள்ள மைய நீரோட் டக் கட்சிக்கு தனது வாக்குவங்கியை விரிவுபடுத்துவதற்காக எல்லா சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற பிறகு விஜயகாந்த் அந்தக் கூட்டணியை உடனடி யாக முறித்தது வெறுமனே கோபத்தினால் அல்ல. மாறாக தனது தனித்த அடையாளத்தை அவர் பாதுகாக்கவேண்டும் என்பதில் தெளி வாக இருக்கிறார். எதிர் அரசியல் செய்வதே தனது வளர்ச்சிக்கு நல் லது என்பதில் அவர் திட்டவட்டமாக இருக்கிறார். மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்று தெரிந்தும் தனது வேட்பாளரை அவர் நிறுத்தியதும் அந்த அடிப்படையில்தான். 

இந்த உதிரிக் கட்சி மண் குதிரைகளை நம்பி விஜயகாந்த் ஆற்றில் இறங்கக்கூடியவர் அல்ல. அ.தி.மு.க.வுடன் கூட்டணியை முறித்த பிறகு தே.மு.தி.க. தனியாக எதிர்கொண்ட உள்ளூராட்சித் தேர்தல்களில் கடும் இழப்புகளையே சந்தித்தது. எனவே பாராளுமன்றத் தேர்தலில் ஒரு சில இடங்களைப் பெற்று தேசிய அளவில் தனது பிரதிநிதித்துவத்தை உருவாக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க அல்லது தி.மு.க. இருக்கும் கூட்டணியுடன்தான் போகவேண்டும் என்று விஜயகாந்த்திற்கு நன்றாகத் தெரியும். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாமல் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. சார்ந்த ஒரு மூன்றாவது அணி உருவானால் அதை தேர்வு செய்யும் தற் கொலைப் பாதையை ஒருபோதும் அவர் தேர்ந்தெடுக்க மாட்டார். 

ஒரு பேச்சுக்கு பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணியுடன் மூன்றாவது அணி அமைகிறது என்றே வைத்துக் கொள்வோம். ம.தி.மு.கவின் இரண்டு சதவிகித ஓட்டுக்கள், பா.ஜ.க.வின் இரண்டு சதவிகித ஓட்டுகள், தே.மு.தி.மு.க.வின் எட்டு சதவிகித ஓட்டுகள் சேர்ந்து தேர்தல் முடிவுகளில் அடிப்படை மாற்றங்கள் எதையும் கொண்டுவரப்போவதில்லை. ஒரு தொகுதியில்கூட இந்தக் கூட்டணி வெற்றி பெறாது. 

பிறகு ஏன் இந்த மூன்றாவது அணி குறித்த சலசலப்பு? முதலாவதாக இது வழக்கமாக பாடப்படும் ஒரு லாவணி. பெரிய கட்சிகளிடம் இருந்து அழைப்பு வரும் வரை அல் லது அவற்றுடன் பேரம் பேசு வதற்காக செய்யப்படும் லாவணி. ஓரளவு ஓட்டுக்களைப் பிரிக் கக்கூடிய ஒரு  மூன்றாவது அணி உருவானால் எந்தெந்த தொகுதிகளில் தமக்கு இழப்பு ஏற்படும் அல்லது பிரதான எதிரிக்கு சாதகமாக அமையும் என தி.மு.க., அதி.மு.க இரண்டுமே யோசிக்கும். அப்போது இந்த கற்பனையான மூன்றாவது அணிக்குள் இருக் கும் கட்சிகளை பங்கு போட் டுக்கொள்ளும் வேலைகள் ஆரம்பமாகும். எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே போய் அந்தக் கட்சிகள் அமர்ந்து கொள்ளும்.

பா.ஜ.க.வினர் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் ஏதோ தனிப்பட்ட ஒரு செல்வாக்கு இருப்பதுபோன்ற ஒரு தோற் றத்தை உருவாக்குகின்றனர். தமிழக அரசியலில் இதைவிட ஒரு அபத்த காட்சியை காண முடியாது. குஜராத்தை தாண்டி வடமாநிலங்களில்கூட நரேந் திர மோடி மாநில தேர்தல் பிரச்சாரங்களில் எந்த செல் வாக்கையும் பெற முடிய வில்லை. ஊடகங்களில் இட்டுக் கட்டப்படும் மோடியின் வளர்ச்சிப் பிம்பங்களை தமிழக நகர்ப்புற வர்க்கத்தின் சிறிய பகுதி வேண்டுமானால் ஒரு வேளை நம்பலாம். அவர்களில் பெரும்பாலானோர் வாக்குச் சாவடிக்கு வந்து ஓட்டளிப் பவர்கள் அல்ல. தமிழக கிரா மப்புறங்களில் மோடி என்ற நபருக்கு எந்த அடையாளமும் இல்லை. மேலும் மோடியின் மதவாத அடையாளத் தை தமிழகம் அவ்வ ளவு எளிதில் ஜீரணிக் காது. இளம்தாமரை மாநாடு போன்ற விஷ யங்களால் மோடியை தமிழகத்திற்குள் இறக்கு மதி செய்யும் ஒரு பரி தாபகரமான முயற்சி யும் நடைபெற்று வருகிறது.

வரும் நாடாளு மன்ற தேர்தலில் அ.தி. மு.க. பெரிய அளவில் இடங்களைப் பெற்று மூன்றாவது அணி ஆட்சியமைக்கக் கூடிய ஒரு சூழல் உருவானால் ஜெயலலிதா பிரதம ராகிவிடலாம் என தமிழ் ஊடகங்கள் தொ டர்ந்து ஒரு செய்தியை பரப்பி வருகின்றன. ஜெயலலிதாவிற்கு மகிழ்ச்சியூட்டும் செய்திகளைத் தொடர்ந்து தினமும் சொல்ல வேண்டும் என்ற கடமையுணர்ச்சியைத் தவிர இதில் வேறு எந்த உண்மையும் இல்லை. மக்கள் அப்படிப்பட்ட ஒரு மகத்தான வெற்றியைத் தரும் அளவுக்கு அ.தி.மு.க ஆட்சி சாதனைகள் எதையும் உருவாக்கிவிடவில்லை. 

முலாயம்சிங் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி, இடது சாரிகள், லல்லுபிரசாத் யாதவ், ஜெயலலிதா, கருணாநிதி என ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமான கட்சிகளும் ஆளுமைகளும் இணைந்து ஒரு மூன்றாவது அணியை அமைப்பதை கற்னை செய்வதுகூட கடினமாக உள்ளது.  மாநில அளவில் உண்மையில் மூன்றாவது அணி போன்ற தற்காலிகக் கூட்டணிகள் அமைந்தால் கூட தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் அல்லது  பா.ஜ.கவுடன் இணைந்து தங்களுக்கான அதிகாரப் பங்கீட்டை இந்தக் கட்சிகள் கோருமே ஒழிய தங்களுக்குள் இவர்கள் இணைந்து செயல்படுவது சாத்தியமே அல்ல. பா.ஜ.க.வா அல்லது காங்கிரஸா என்கிற ஒரு சூழல் உருவானால் அப்போது ஜெயலலிதா பா.ஜ.க.வை ஆதரிக்க முன் வருவார். அதுகூட தேர்தலுக்கு பிந்தைய ஒரு நிலையாகத்தான் இருக்கும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் பேரம் பேசும் திறனே அடுத்த ஆட்சியை இந்தியாவில் அமைக்கப் போகிறது.

தமிழகத்தில் செல்லாகாசாகிவிட்ட காங்கிரஸை தி.மு.க. தவிர்க்கவிய லாமல் ஆதரிக்க வேண்டிய ஒரு அரசியல் சூழல் உருவாகி வருகிறது. தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என்கிற அணி ஒரு புறமும் அ.தி.மு.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் ஆகியவை இன்னொரு புறமும் நிற்பதற்கான வாய்ப்புகளே அதிகம். பா.ம.க. இரண்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் திடீரென கூட்டு சேருமா என்று கேட் டால் அதன் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் ஒரு புன்னகையை யே பதிலாக தர வேண்டியிருக்கும். பா.ஜ.க. பெரும்பாலும் அ.தி.மு.கவுடன் ஒட்டிக்கொள்ள போராடும். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டது தொடர்பான ஜெயலலிதாவின் எரிச்சலையும் மீறி இப்போ தைக்கு தனது இயற்கையான கூட்டாளியாக அது அ.தி.மு.க.வையே கருதும். அப்படி ஒரு சூழல் உருவானால் இடது சாரிகள் தி.மு.க. அணிக்குப் போக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பா.ம.க., தி.மு.க.வுடன் இணைந்தால் விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க. அணிக்குப் போகலாம்.

தமிழக அரசியல் என்பது மிகவும் விசித்திரமானது. மது விலக்கு உட்பட தமிழக அரசின் பல்வேறு கொள்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தும் வைகோ ஜெயலலிதாவை பிடிவாதமாக ஆதரிக்கிறார். காந்தியவாதியான தமிழருவி மணியன் வகுப்புவாதியான நரேந்திரமோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் ஆதரவான அரசியல் செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காங்கிரசின் சதிகளாலும் துரோகத்தாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட கட்சி தி.மு.க. ஆனால் அது தொடர்ந்து காங்கிரஸை சார்ந்திருக்கவேண்டிய அரசியல் சூழல் உருவாகிறது. 

தமிழகத்தில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லாத பா.ஜ.க.வை யும் மோடியையும்  பிரதானமாக வைத்து தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிடுகின்றன. பரபரப்பான விவாதங்களை நடத்துகின்றன. இது இல்லாத ஒன்றை இருப்பது போன்ற தோற்றம் உருவாக்கும் முயற்சி. தோற்றமே உண்மையாகிவிடாதா என்ற கற்பனை. தேர்தல் வரைக்குமான ஊடகங்களின் பொழுதுபோக்குதான் இந்த மூன்றாவது அணி. பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகங்களை வகுக்கும்போது இந்த மூன்றாவது அணி குறித்த அத்தனை கற்பனைப் பேச்சுக்களும் சீட்டுக் கட்டுகளைப் போல கலைந்துவிடும்.

ad

ad