புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 செப்., 2013



பட்ஜெட் பஞ்சாயத்து!

           "இந்த சினிமா நூற்றாண்டு விழாவுக்கான பட்ஜெட் 35 கோடி ரூபாய்' என விழாத் தலைவரான "ஃபிலிம் சேம்பர்' கல்யாண் அறிவித்தார்.

தமிழக அரசு சார்பில் பத்துகோடி, நிகழ்ச்சி ஒளிபரப்பு உரிமை மூலம் ஜெயா டி.வி. தரப்பில் 5 கோடி, பி.வி.பி. நிறுவனம் தெலுங்கு, மலையாள, கன்னட ஒளி பரப்பிற்காக 12 கோடி என 27
கோடி வரவு. அத்துடன் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடத்த அனுமதித்த "ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா'வின் உதவியோடு நன்கொடை வசூலும் நடத்தப்பட்டது. ஆனால் வரவுக்கேற்ற செலவு செய்யப்படவில்லை... என்கிற எதிர்க்குரல் எழுப்புகிறது தமிழ் சினிமா அமைப்புகள்.

கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்களிடம் "இது அரசு இணைந்து நடத்தும் விழா' எனச் சொன்னதால் அவர்கள் ஊதியம் பெறவில்லை. ஃபிலிம் சேம்பர் வளாகத்திற்கு வந்தவர்களை கார் மூலம் விழா நடந்த நேரு ஸ்டேடியத்திற்கு அழைத்து சென்றனர். இந்தச் செலவு, மேடை போட்ட செலவு, வெளிமாநில நட்சத்திரங்களை தங்க வைத்த செலவு, பார்ட்டி செலவு, விஸ்காப்ட் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு தரப்பட்ட தொகை... இதுதான் செலவு.


அழைப்பிதழ் கசப்பு!

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு அழைப்பிதழ், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கார் பாஸ்... என தனித்தனியாக அச்சடித்ததில் ஏகப்பட்ட குளறுபடி. முதல்நாள் நிகழ்ச்சியில் அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் சங்கத் தலைவர் கேயாருடன் சண்டைக்குப் போய் ரசாபாசமானது. இதே கதிதான் எல்லா சினிமா அமைப்புகளுக்கும்.


விருந்தும் வேணாம்...
வில்லங்கமும் வேணாம்!

"விழா சிறப்பாக நடக்க உழைத் தவர்களுக்கு உற்சாக விருந்து' எனச் சொல்லி பிரபல ஸ்டார் ஓட்டலில்       2000 பேர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தில் கலந்து கொள்ள ஒவ்வொரு சினிமா அமைப் பிற்கும் பாஸ் கொடுக்கப்பட்டது. தயா ரிப்பாளர் சங்கத்திற்கு 75 பாஸ் அனுப்பி வைத்தது சேம்பர். ஆனால் அதை திருப்பி அனுப்பி விட்டனர். "விழாவுக்கு போதிய அழைப்பிதழ் தரலேன்னு கோபமா இருக்கிற தயாரிப் பாளர்களுக்கு விருந்துக்கும் போதிய அழைப்பு இல்லேன்னா பிரச்சினை தான் வரும்... என்பதால் விருந்தும் வேணாம், அதனால வர்ற வில்லங்கமும் வேணாம்' என மறுத்து விட்டனர்.

அலைக்கழிப்பு!

பாதுகாப்பு காரணங்களுக்காக வெகு தொலைவிலேயே கார்கள் நிறுத்தப்பட்டதால் சினிமா பிரபலங்கள் நடந்தே அரங்கிற்கு வந்தனர். அமீர் உள்ளிட்ட சில பிரபலங்கள் விழா அரங் கிற்குள் நுழைவதற்குள் பெரும் கெடு பிடியை சந்தித்தனர். மொத்தமே 16 அழைப்பிதழ்கள்தான் பத்திரிகை உள்ளிட்ட மீடியாவுக்கு தரப்பட்டது.

ரஜினி வந்தபோது ஒரே ஆர வாரம். மேடையில் முன்வரிசையில் போய் அமர்ந்தார் ரஜினி. "சி.எம். மற்றும் சினிமா அமைப்புகளின் தலைவர்களுக்கு மட்டும்தான் முன்வரிசை!' என அதிகாரிகள் சொல்ல... எழுந்து நான்காவது வரிசையில் போய் அமர்ந்து கொண்டார் ரஜினி.

4 மணிக்கு ஜெ. வந்தார். மேடையில் இருந்தவர்கள் ஜெ.வுக்கு வணக்கம் சொன்னார் கள். நாலாவது வரிசையில் இருந்த ரஜினி விஷ் பண்ண வரவில்லை. ஜெ. வந்தபிறகுதான் கமல் வந்தார். இருவரும் வணக்கம் வைத்துக் கொண்டனர். இரண்டாவது வரிசையில் அமர்ந்தார் கமல். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்த விஜய்யும் மூன்று முறை இடம் மாற்றி உட்கார வைக்கப்பட்டார். இதனால் நொந்து போனார் விஜய்.

சினிமாவின் பலதுறை கலைஞர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு விருதுகளை வழங்கினார் ஜெயலலிதா. இந்த லிஸ்ட்டிலும் ரஜினி பெயர் 22-வது இடத்தில் இருந்தது. 

விருதுகள் பெற்றவர்கள் ஜெயலலிதாவோடு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள மேடைக்கு அழைக்கப்பட்டனர். எல்லோரும் மேடைக்குச் செல்ல, ஜெ.வுக்கு பின்னால் எல்லோரையும் நிற்கச் சொன்னார்கள். அப்போது, கமலும் இளையராஜாவும் ஒரு ஓரத்திற்கு தள்ளப்பட்டார்கள். ரஜினியோ எங்கே நிற்பது என தெரியாமல் தவிக்க, முன் வரிசையில் உட்காரவோ நிற்கவோ இடம் இல்லை. ரஜினி தவிப்பதை கண்டு யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. அதனால், கடைசி வரிசைக்கு தள்ளப்பட்டார் ரஜினி. 

மேடை நிகழ்ச்சி முடிந்து கலைநிகழ்ச்சி துவங்கியது. 

முன்வரிசையில் அவருக்காகப் போடப் பட்டிருந்த இருக்கையில் ஜெ., அமர்ந்தார். ஓரிரு நிமிடம் கழிந்திருக்கும். ஜெ. வரிசையிலேயே உட்கார்ந்திருந்த ரஜினியிடமும் கமலிடமும் வந்த ஒரு அதிகாரி, "நீங்கள் பின் வரிசைக்குச் செல்லவும்' என்று சொல்ல, அதிர்ச்சியடைந் தவர்களாக சட்டென்று எழுந்து பின் வரிசைக்கு சென்றனர்.

புயலை மட்டும் காணோம்!

சாதாரணமானவர்களாக இருந்து சரித்திரம் படைத்த சினிமா பிரபலங்களின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டது. அதில் கலைஞர் போட்டோவும் காண்பிக்கப்பட்டது.

அடுத்து முக்கியமான படங்களின் கிளிப்பிங்ஸ் தொகுத்து காண்பிக்கப்பட்டது. இதில் விஜயகாந்த், விஜய், குஷ்பு... என பாரபட்ச மில்லாமல், காட்டினாலும் கூட வைகைப்புயல் வடிவேலு மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தார்.

இளையராஜா இசைத்த "சினிமா ஆந்தம்' பாடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது. பிரமாண்டமான முரசு நடனத்தை வரலட்சுமி சரத்குமார் ஆடினார். அந்தப் பாடலைப் பார்த்துவிட்டு ஜெ. கிளம்பிவிட்டார்.

ரஜினியின் "கமல்' பேச்சு!

ரஜினியின் பேச்சில் கமல் குறித்தே அதிகம் இருந்தது. "கமல் அண்ணன்', "கமல் வாழும் மேதை' என்றெல்லாம் தொடர்ந்து கமல் பற்றியே பேசினார் ரஜினி. 

இட்லி விக்கினா தண்ணி!

பாகவதர் கெட்-அப்பில் விவேக் நடத்திய கலைநிகழ்ச்சியில் ஜெ. புராணம்தான். அம்மா உணவகம், மலிவு விலை இட்லி, இட்லி சாப்பிடும் போது விக்கிக்கிட்டா அம்மா குடிநீர்' எனச் சொன்னார் விவேக்.

கார்த்தி-காஜல் டான்ஸ் நிகழ்ச்சியும் நடந் தது.

ப .சி, தாகம்!

மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த வி.ஐ.பி.கள் மட்டுமே வாட்டர் பாட் டில் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலரியில் அமரச் சென்ற வர்களிடமிருந்து வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

நிகழ்ச்சி இரவு சுமார் 11 மணி வரை நீடித்தது. இதனால் எட்டு மணி நேரமாக அரங்கிற்குள் டீ, பிஸ்கெட், தண்ணீர் போன்ற எதுவுமே இல்லாமல் அவதிப்பட்டனர்.

அதிகாரிகள் அச்சம்!

விழா நடத்த அரசு பத்து கோடி ரூபாயை சேம்பருக்கு கொடையாக கொடுத்திருக்கிறது. அதோடு விழாப் பணிகளில் அரசின் டி.ஆர்.ஓ. 10 பேர்கள் ஈடுபட்டிருக் கிறார்கள். அரசும் இணைந்து நடத்திய விழா. அதனால் சரியான கணக்குக் கேட்டு யாராவது நாளை நீதிமன்றம் போனால்... அதிகாரிகள் சேம்பரிடம் கணக்குக் கேட்டு நெருக்குவார்கள். அதுபோல் சினிமா அமைப்புகளும் சேம்பரிடம் கணக்கு கேட்டு நெருக்கலாம் என்கிற பேச்சு நிலவுகிறது.

வீட்டுக்கு வீடு போலீஸ்!

"அய்யய்யோ... என்னங்க... நம்ம வீட்டுக்கு போலீஸார் வந்து உங்களைப் பத்தி விசாரிக்கிறாங்க' என சினிமா புள்ளி களுக்கு அவர்களின் வீடுகளிலிருந்து போன். இதனால் பதறிப் போன புள்ளிகள் விஷயம் தெரிந் ததும்தான் நிம்மதி பெருமூச்சு விட் டார்கள். இறுதிநாள் நிகழ்ச்சிக்கு நான்கு மாநில முதல்வர்களும், ஜனாதிபதியும் விருந்தினர்கள். இதனால் ரொம்ப உன்னிப்பாக பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டது போலீஸ். இந்த இறுதிநாள் நிகழ்ச்சியைப் பார்க்க பாஸ் கேட்டு ஃபிலிம் சேம்பரில் கடிதம் கொடுத்திருந்தார்கள். பாஸ் கேட்டிருந்தவர்களின் முகவரிப்படி அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று சொந்த ஊர் எது? என்பது முதல் நேத்து சார் எங்க இருந்தாரு?' என்பதுவரை என்கொயரி பண்ணியிருக்கிறார்கள்.

க்ளைமாக்ஸ்!

இந்திய சினிமாவின் நூற்றாண்டை பெருமையாக கொண்டாடுகிறோம் என்றார்கள். ஆனால், ""இந்திய சினிமாவிற்கு புகழ் சேர்த்தது தென்னிந்திய சினிமாதான். அந்த தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்கள் யாரும் பெருமைப்பட்டுக் கொள்கிற மாதிரியோ சந்தோஷப்பட்டுக் கொள்கிற மாதிரியோ விழா நடக்கவில்லை. சினிமாவுக்கு பெருமை சேர்த்த கலைஞர்கள் அனைவரும் இந்த நூற் றாண்டு விழாவில் ஆனந்தமாக இல்லை. எல்லோருமே, "தங் களை அவமானப்படுத்திவிட்டார்கள்' என்றே புழுங்குகின்றனர்!'' என்கிறார்கள் தமிழ்ச் சினிமாவின் பிரபலங்கள்.

தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் ரஜினி, ""விழாவிற்கு நான் சென்றிருக்கக் கூடாது.  ஃபிலிம் சேம்பர் அழைத்ததே என்பதற்காகத்தான் போயிருந்தேன். ரொம்ப ரொம்ப அவமானப்படுத்தி விட்டார்கள். ஒவ்வொரு கலைஞனும் இந்த விழாவில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறான்'' என்று தனது மனக்குமுறல்களை வெளிப் படுத்தியதாக கோலிவுட்டில் பரவியுள்ளது.

மொத்தத்தில், ""தீபாவளியின் உற்சாகத்தோடு நடந்திருக்க வேண்டிய இந்த நூற்றாண்டு விழா, ஜெயா டி.வி.யின் தீபாவளி நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட விழா போல் ஆகிவிட்டது!'' என்கிற மனக்குமுறலும் சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க எதிரொலிக்கின்றன.               

ad

ad