பாமக அங்கீகாரத்தை ரத்துச்செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த வாரகி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இந்த மனுவில், பாமக தொடர்ந்து சாதி வன்முறையை தூண்டும் வகையிலும், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது,
பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு ஆகியோர் தொடர்ந்து சாதி மோதலை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இதனால், இருபிரிவினர் இடையே அண்மையில் சாதி மோதல் ஏற்பட்டது. அண்மையில் மாமல்லபுரத்தில் நடந்த விழாவிலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் மனுதாரர் வாரகி தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே நடந்த வன்முறைச் சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ள மனுதாரர், இதனால் வட மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அகில இந்திய தேர்தல் ஆணையம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காஞ்சி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள், பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜெ.குரு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் வராகி கேட்டுக்கொண்டுள்ளார்,