புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2013


கர்நாடக சட்டசபை தேர்தல்: 117இடங்களில் காங்கிரஸ் முன்னணி
கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெரிய பட்டினம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் மரணம்
அடைந்ததால் 223 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தலில் 71.29 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், எடியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சி ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது. 
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வெளியான பல்வேறு கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி 110 முதல் 132 இடங்கள் வரை வென்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பிறகு மின்னணு எந்திரங்களில் உள்ள சீல் அகற்றப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டது. 
காலை 8.30 மணிக்கு கட்சிகளின் முன்னிலை விவரம் தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் சம அளவில் முன்னிலை பெற்றன. இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. ஆனால் அடுத்த 30 நிமிடங்களில் அதாவது 9 மணி அளவில் காங்கிரஸ் கட்சி மளமளவென பா.ஜ.க.வையும், மதசார்பற்ற ஜனதா தளத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அதிக தொகுதிகளில் முன்னிலை பெறத்தொடங்கியது. 
100 தொகுதிகளில் முன்னிலை வெளியானபோது காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் முன்னிலை பெற்றிருந்தது. பாரதீய ஜனதா கட்சி 27 இடங்களுடனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களுடனும் பின்தங்கி விட்டன. 
பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கிய எடியூரப்பாவுக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி வாய்ப்பு முன்னிலை இருந்தது. எடியூரப்பா கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பிரித்து இருப்பதை ஓட்டு எண்ணிக்கையில் காண முடிந்தது. 
பாரதீய ஜனதா வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவுவதற்கும் காங்கிரஸ் கட்சி மிக எளிதாக வெற்றி பெறுவதற்கும் எடியூரப்பா கட்சியினர் பிரித்த ஓட்டுக்கள் உதவியாக இருந்தன. 10 மணியளவில் 200 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியானது. 
அப்போது காங்கிரஸ் கட்சி 94 தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியது. ஆனால் பாரதீய ஜனதா மிகப்பெரும் சறுக்கலை சந்தித்தது. 10 மணி வரை 2-வது இடத்தில் இருந்த பா.ஜ.க. 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 44 இடங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது. பா.ஜ.க.வுக்கு 41 இடங்களே கிடைத்திருந்தன. 
11 மணி நிலவரப்படி காங்கிரஸ் 117 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களிலும், பாஜக 35 இடங்களிலும், எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 
முடிவு அறிவிக்கப்பட்ட புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சகுந்தலா ஷெட்டி 2672 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

ad

ad