அழுத பிள்ளைக்கு பால் தர மறுப்பது போல் தமிழக அரசு செந்தூரனுக்கு அநீதி இழைத்துள்ளது. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள முகாம் வாசிகள் அனைவரும் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைத்து செந்தூரன் கடந்த 6 ம் தேதியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
26 நாட்கள் அவர் செய்த தொடர் பட்டினிப் போராட்டத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தவில்லை.
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்து கைதாகினர்.
பல கட்சிகள் சார இயக்கங்கள் பல போராட்டங்கள், பரப்புரைகள் செய்தன.
சென்னை மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டிப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இப்படி பல வகையில் போராடியும், அரசுக்கு நேரில் சென்று மனு கொடுத்தும், இவை எதுவும் தமிழக அரசின் காதுகளுக்கு விழவில்லை.
இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன் செந்தூரனின் அத்தை செந்தூரனை பார்க்க இலங்கையில் இருந்து வந்தார். அவர் செந்தூரனின் உடல் நிலையை பார்த்து கவலை அடைந்தார். செந்தூரனின் பட்டினிப் போராட்டத்தை கைவிடும்படி வேண்டினார்.
ஆனால் செந்தூரன் முடிவாக மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது . பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார். இப்படி ஒரு துயர நிகழ்வும் நடந்தேறியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
நேற்று செந்தூரனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. அவர் மயக்க நிலையை அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சக முகாம் வாசிகள் முகாம் காவல் துறையை கேட்டுக் கொண்டதோடு செந்தூரனை தூக்கிக் கொண்டு போய் ஆய்வாளர் அறையில் போட்டனர். மாலை 5 மணிக்கு இது நடந்தது.
இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கியூ பிரிவு காவல்துறை உயர் அதிகாரி சம்பத் குமாரிடம் செந்தூரனை காப்பாற்றுங்கள் என முறையிட்டனர். அவரும் நிச்சயம் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு அரசின் நோயாளி அவசர ஊர்தி கொண்டுவரப்பட்டது. அப்போது உயிருக்கு போராடி வந்த செந்தூரனுக்கு எந்த முதலுதவியும் செய்யப்படவில்லை. காவல்துறையும் அருகில் இருந்தபடி தேநீர் அருந்தியும், பத்திரிக்கை படித்துக் கொண்டும் அலட்சியம் காட்டினர்.
சக முகாம் வாசிகள், அதிகாரிகளை கேள்விக் கேட்க தொடங்கினர். அதிகாரிகள், செந்தூரனுக்கு பாதிகாப்பு வாகனம் வந்து கொண்டிருகிறது, வந்ததும் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் எனக் கூறினர்.
இரவு 10 மணிவரை செந்தூரனை அழைத்து செல்லவில்லை. 10 மணிக்கு மேல் செந்தூரனை அதிகாரிகள் ஒரு அவதிப்படும் மனிதனாக கூட பார்க்காமல் வாகனத்தில் ஏற்ற இழுத்துச் சென்றனர்.
சரி, அப்போதாவது மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள் என்று பார்த்தால், செந்தூரனின் தளர்ந்து போன உடல் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாது, அவரை பூந்தமல்லியில் உள்ள நீதிபதியின் முன் கொண்டு சென்று, செந்தூரன் தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்தது கியூ பிரிவு காவல்துறை.
இந்நிலையில், சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் திரு வைகோ, இயக்குனர் புகழேந்தி மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் செந்தூரனை காண காத்திருந்தனர். செந்தூரன் அங்கு அழைத்து வரப்படுவார் என எண்ணினர்.
நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி மட்டுமே கிடைத்தது. அப்படி ஒரு அநீதியை செய்தது தமிழக கியூ பிரிவு காவக் துறை.
செந்தூரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்காமல், அவரை நேரே புழல் சிறையில் கொண்டு போய் அடைத்தது.
இதை மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தால், தாய் தமிழகம் என்று நம்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும், உண்ணாநிலையில் இருந்தும், பரப்புரை செய்தும், அரசுக்கு மனுக்கள் கொடுத்தும் அரசு எதற்கும் பதில் அளிக்காமல் பிடிவாதமாக செந்தூரனின் அறவழிப் போராட்டத்தை முடக்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது அராஜகத்தின் உச்சகட்டம் என மனித உரிமை ஆர்வலர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அழுத பிள்ளைக்கு பால் என்ற பழமொழி பொய்த்தது போல் செந்தூரனின் அழுகுரலை ஏற்கவே மறுத்தது தமிழக அரசு.
இப்படியானதொரு அநீதியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் போது, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசு நீதி பெற்றுத் தருவோம், மறுவாழ்வு பெற்றுத் தருவோம் என்று சொல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என்பது தெளிவாக தெரிகிறது.