புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஆக., 2012


அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்கள்!
தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தலைமையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானங்கள் வருமாறு:
1. ஆட்சியில் இருக்கும் போது இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு காரணமாக இருந்துவிட்டு, ஆட்சியில் இல்லாத போது இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பாதுகாப்பு என்ற போர்வையில் முதலைக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. விற்கும் கடும் கண்டனம்!
2009-ம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது, மத்திய கூட்டணி அரசை தாங்கிப் பிடித்து அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசை வற்புறுத்தாமல், தமிழர்களை ஏமாற்றும் வகையில் காலை சிற்றுண்டி உண்ட பின், உண்ணாவிரதம் மேற்கொண்டு, மதிய உணவு நேரம் வந்தவுடன், “இலங்கையில் போர் முடிந்துவிட்டது” என்ற பொய்யான தகவலைக் கூறி மூன்று மணி நேரத்தில் “சாகும் வரையிலான” தனது உண்ணாவிரத்தை முடித்துக் கொண்டார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்பினை நம்பி, பதுங்கு குழிகளில் இருந்து வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்தது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் மாண்டனர்.
அந்தத் தருணத்தில், இது குறித்து வாய் திறக்காத கருணாநிதி, தற்போது இலங்கை அரசு தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருக்கிறார். இதிலிருந்து, இலங்கையில், கொத்துக் கொத்தாக தமிழர்கள் உயிரிழந்ததற்கு தன்னுடைய உண்ணாவிரதம் தான் காரணம் என்பதை கருணாநிதி மறைமுகமாக ஒப்புக் கொண்டிருப்பது தெளிவாகிறது.
ஆட்சியில் இருந்தால், தன் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவதையும், ஆட்சியில் இல்லாவிட்டால் இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை செலுத்துவது போல நாடகமாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க-வும் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கூட்டம் என்ற போர்வையில் கபட நாடகம் நடத்தியதை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
2. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணுமாறும், கச்சதீவினை மீட்டெடுக்குமாறும், இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை கைவிடுமாறும் மத்திய அரசை வலியுறுத்தல்!
தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே செய்ய முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், கொடுமைப்படுத்துவதையும், சிறைபிடிப்பதையும், அவர்களுடைய படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இதேபோன்று, இலங்கை வாழ் தமிழர்களுக்கான உரிமைகளை அளிக்கவும் இலங்கை அரசு மறுத்து வருகிறது.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்படுவது கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழக் கூடாது என்றும் இலங்கை அரசை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும்.
கச்சதீவை மீட்டெடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, கச்சதீவினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தற்போது வெலிங்டன் இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் பெங்களூரில் பயிற்சி பெற்று வரும் இலங்கை விமானப் படை வீரர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

ad

ad