புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2012


கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்
கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில முன்னாள் போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்று வருகிறேன்.
எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால் சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.
அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.
மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது.
மாமா என்னும் பெயரின் பின்னாலிருக்கும் மகத்துவத்தை நேற்றைய நாள் உணர்ந்து கொண்டேன்.
11 குழந்தைகளுடனும் அவர்களின் பெற்றோருடனும் ஒரு சுற்றுலா சென்றிருந்தோம்.
கதைகள் கன பேசி பின் கையில் தூங்கிப் போன சிறுமி,
எனக்கருகிலேயே உட்கார்ந்திருந்த சிறுவன்,
வாழ்க்கையில் முதன் முதலாக புகையிரதப் பாதையையும், புகையிரதத்தையும் கண்ட அவனின் ஆச்சரியம் கலந்த உணர்ச்சிகள்,
கோயிலுக்குச் செல்லும் வீதியில் அமைந்திருந்த சிறு சிறு கடைகளை கடந்த போது அவர்களின் ஏக்கமான பார்வைகள்,
குழந்தைகளின் 10 ரூபா பெறுமதியான விளையாட்டுப் பொருளையே வாங்கிக் கொடுக்க முடியாது தவித்த, ஆளுக்கு இரண்டு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்றதும், மாமா எனக்கு அது .. இல்லை இல்லை இது என்று தெரிவு செய்ய தடுமாறிய அவர்களின் குதூகலம் கலந்த மனநிலை,
மாமா இன்னும் ஒன்று வாங்கித் தாங்களேன் என்ற போது இல்லை என்று சொல்ல முடியாது தடுமாறிய நான், என்னைத் தடுத்த குழந்தைகளின் பெற்றோர்,
எத்தனை கண்ணாடி இருக்கி ஒண்ணையும் வாங்கித்தாறாவு இல்லை அம்மா என்று மட்டக்களப்புத் தமிழில் தன் தாயைப்பற்றி குறைகூறிய குழந்தை,
கோயிலில் அவர்களது பக்தி, அப்பா ஆமிக்காரனிடம் இருந்து வரணும் என்று கல்லுக் கடவுளிடம் வரம் கேட்ட குழந்தை,
அதைக் கண்டு அழுத தாய்,
அரைமணி நேரத்தில் உணவு தருகிறேன் என்று கூறி ஒன்றரை மணித்தியாங்களின் பின் உணவு தந்த ஹோட்டல் முதலாளி,
அதுவரை கொளுத்தும் வெய்யிலில் பொறுமை காத்த குழந்தைகள்,
கடற்கரையில் இறங்கியதும் அவர்களின் கூச்சமும் அவர்களின் ஓட்டமும், குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாத தாய்மார்.
2009ம் ஆண்டு கடலில் காவியமான அப்பாவுக்காய் வீட்டில் இருந்தே இரண்டு கப்பல்கள் செய்து வந்து கடலில் விட்ட மூன்று வயதுச் சிறுவன்,
அலைக்குப் பயந்து என் கழுத்தை கட்டிக்கொணட சிறுமி. என்னுடன் மண்வீடு கட்டியபடியே கடலுடன் நட்பாகிப் போன அக் குழந்தை,
பின்பு என்னுடன் கழுத்தளவு நீரில் நின்றபடியே �அம்மா இங்க பாரு.. இங்க பாரு� என்று கத்திய அவளின் குதூகலம்.
கடலைவிட்டு வெளியேற விரும்பாத சிறுவர்கள்,
மதிய உணவினை சிந்தாது சிதறாது அமர்ந்திருந்து உண்ட அவர்களின் பக்குவம்,
ஜஸ்கிறீம் கடையில் எதை வாங்குவது என்று தடுமாறிய அவர்களின் மனது,
தடுமாறிய குழந்தைகளுக்கு விலையான ஜஸ்கிறீம்களை காட்டிய கடைக்காரர்,
இரகசியமாய் இரண்டாம் ஜஸ்கிறீம் கேட்ட குழந்தைகள்.
ஊரில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய், கடற்கரையில் 2 கிலோ நூறு ரூபாய் என்றதும் வாங்கிக்கொண்ட பெற்றோர்.
மாலை வீடு திரும்பிய போது கடற்குளிப்பின் அசதியல் தூங்கி வளிந்த குழந்தைகள்,
பெரியோரின் நகைச்சுவைப் பேச்சு, மன அழுத்தங்களை மறந்து ஒரு நாளை களித்த அவர்களின் மகிழ்ச்சி,
விடைபெறும்போது �அண்ணா நன்றி� என்று வாய்க்கு வாய் கூறிய பெற்றோர்.
கண்கலங்கி நின்ற பெற்றோர். மாமா �பெயித்து வாறன்� என்று மண்ணின் மொழியில் விடைபெற்ற குழந்தைகள்
என்று நேற்றையை நாள் எத்தனையோ வருடங்களின் பின் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது.
சில குறிப்புகள்:
தன்னை அறிந்தவர்கள் யாரும் இந்தச் சுற்றுலாவில் இருந்தால் அதனால் தனக்கும் தன் குழந்தைக்கும் மேலும் சிக்கல்கள் வரலாம் என்று எனது அழைப்பை அன்பாய் மறுத்த ஒரு பெண்.
பெற்றோர்கள், சகோதரர்கள், தங்கையின் கணவன் என்று தனது குடும்பத்தில் இருந்து ஐவரை இழந்த பெண் கடலில் இறங்க காட்டிய பயம்.
தன் குழந்தையின் கையை இறுகப் பற்றியபடியே காலளவு நீரில் தன் தங்கையின் கையை பற்றியவாறு குழந்தையை குளிக்க அனுமதித்தார் அவர்.
இடுப்புக்குக் கீழ் இயங்கமுடியாத கணவரை குழந்தைபோல் பராமரித்த அவரது மனைவி,
அவர் தனது கணவரை இயற்கை உபாதைகளை கழிக்க அழைத்துச் சென்ற போது தனது குழந்தைகளை பார்த்துக்கொள் என்று 9 வயதுச்சிறுமியிடம் கூறிய போது அவள் காட்டி பெறுப்புணர்ச்சி.
மூன்று குழந்தைகளையும் மாறி மாறி கடலில் குளிப்பாட்டிய அந்தத் தாய்.
ஓய்வே இல்லாது குடும்பத்துக்காய் உழைக்கும் அவரது மனம்.
பயணம் முழுவதையும் ஒழுங்குபண்ணித் தந்து சாரதியாய், எதையும் முகம் சுளிக்காது சிரித்த முகத்துடன் செய்து தந்த மனிதரும் அவரது ஆளுமையும்.
இப்படி பல பலஅனுபவங்களுடன் கடந்து போன நேற்றைய நாளை மிகவும் மிகவும் இனியது
சாதாரணமானவனின் மனது.

ad

ad