கிளிநொச்சி நகரின் அணிகலனாக விளங்கும் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது.
முதன் முறையாக இந்த
ஆலயத்தில் இம்முறைதான் மூன்று தேர்களில் முருகப்பெருமான் பரிவாரங்கள் புடைசூழ தேரேறி பக்தர்களுக்கு அருளாட்சி புரியும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.இருப்பினும், கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு கிளிநொச்சியில் நீண்ட பாரம் பரியம் உள்ளபோதும் நிரந்தரமாக ஒரு சித்திரத்தேர் இன்னமும் இல்லாதது என்பது பக்தர்களின் பெருங்குறையாகவுள்ளது.
தேர் செய்வதற்கு மூன்று தடவைகள் முயற்சித்த போதும் அதற்கான ஆயத்தங்கள் செய்வதற்கு மரங்கள் வாங்கியிருந்த போதும் அவை போர் காரணமாக எரியூட்டப்பட்டதால் தேர்த்திருப்பணியில் தடங்கல் ஏற்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது கிளிநொச்சி கந்தசாமி கோவிலில் இராஜகோபுர திருப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகரின் மையத்தில் இருப்பதாலும் இராணுவ முகாம்கள் இன்னல்கள் இன்றுவரை இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு தடங்கலாக இருந்து வருகிறது.
கோவிலின் இடது புறத்தில் முன்பு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்கிய கட்டிடத்தில் மிக நெருக்கமாக இராணுவமுகாம் இப்போதும் காணப்படுகிறது.
கிளிநொச்சியை இலக்கு வைத்து இலங்கைப் படைகளால் நடாத்தப்பட்ட எல்லாப் போர்களாலும் கிளிநொச்சி கந்தப்பெருமான் கோவிலும் மக்களோடு மக்களாக பல இழப்புக்களையும் பாதிப்புக்களையும் சந்தித்துள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.