advertisement
டெல்லியில் வருகிற 14-ம் தேதி, பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
பா.ஜ.க அரசில் அங்கம் வகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அ.தி.மு.க உள்ளது' என்கின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, அன்று காலை 10 மணிக்கே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
இவ்வளவு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன?' என்ற கேள்வியை நேற்று எழுப்பியிருந்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இதற்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக மோடியை சந்திக்க டெல்லிக்குச் செல்கிறார் ஜெயலலிதா.
டெல்லிக்குச் செல்வதன் முக்கிய நோக்கமே, பா.ஜ.க அரசில் அங்கம் வகிப்பதைப் பற்றி விவாதிக்கத்தான் என்கிறார் பா.ஜ.கவின் மூத்த நிர்வாகி ஒருவர்.
அவரே தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் 37 எம்.பிக்களுடன் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக அ.தி.மு.க அங்கம் வகிக்கிறது. மேல் சபையிலும் அ.தி.மு.கவின் தயவு மத்திய அரசுக்குத் தேவைப்படுகிறது.
தவிர, பா.ஜ.க அரசு கொண்டு வரவிருக்கிற பல மசோதாக்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், தமிழக அரசின் மீதுள்ள இரண்டரை லட்சம் கோடி கடன் சுமை, அரசை வழி நடத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்களை உருவாக்கிவிட்டது.
சட்டமன்றத் தேர்தலில் கொடுக்கப்பட்ட இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற கட்டாயமும் அ.தி.மு.க தலைமைக்கு இருக்கிறது. இவற்றைத் தீர்க்க வேண்டுமானால், மத்திய அரசின் தயவு இல்லாமல் நிறைவேற்ற முடியாது.
ஏற்கெனவே, மத்திய அரசில் துணை சபாநாயகர் பதவியை வகித்து வருகிறார் தம்பிதுரை. அதே சமயம் கூட்டணியில் இணைவதைப் பற்றி எந்தப் பிடியும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது தொடர்பாக, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இது அரசியல் அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
சட்டமன்றத் தேர்தலில்கூட, பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க சீட் வழங்கலாம் என பா.ஜ.கவின் ஒருபிரிவினர் பேசி வந்தனர். இதனால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது என்பதால் அ.தி.மு.க தலைமை செவிசாய்க்கவில்லை.
இப்போது மத்திய அரசில் அங்கம் வகிப்பது சரியானதாக இருக்கும் என்ற முடிவுக்கு முதல்வர் வந்துவிட்டார் என்றார் விரிவாக.