புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2016

ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்: அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்; ஜெயலலிதா உறுதி

சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து 6–வது முறையாக ஜெயலலிதா முதல்–அமைச்சர் பொறுப்பு ஏற்றார்.

அதைத் தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆர்.கே.நகர்
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதற்காக அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு வேன் மூலம் புறப்பட்டார். 5.50 மணிக்கு ஆர்.கே.நகர் தொகுதிக்கு அவர் வந்தார்.
காசிமேடு சூரிய நாராயண செட்டி தெரு எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க தொடங்கினார். சூரிய நாராயண செட்டி தெரு – ஜீவரத்தினம் சாலை சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நெஞ்சில் நிரந்தர இடம்
எனது அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி வாழ் மக்களாகிய உங்களுக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னை 6–வது முறையாக தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர் ஆக்கியதற்காக உங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 2–வது முறையாக தொடர்ச்சியாக என்னை தமிழ்நாட்டின் முதல்–அமைச்சர் ஆக்கியதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஆர்.கே.நகர் தொகுதி மக்களாகிய நீங்கள் எனது நெஞ்சில் என்றென்றும் நிரந்தர இடம் பெற்றிருக்கிறீர்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்
கடந்த வருடம் உங்கள் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த பிறகு, ஓராண்டுக்குள் என் சக்திக்கு உட்பட்ட வரை இந்த தொகுதிக்காக எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வர முடியுமோ அவ்வளவும் செய்திருக்கிறேன். இந்த தொகுதியில் பல வளர்ச்சித்திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். இன்னும் நிறைய உங்களுக்காக செய்ய இருக்கிறேன்.
தேர்தல் நேரத்தில், நடந்து முடிந்த தேர்தலின் போது இங்கே உங்களிடம் வாக்கு கேட்க நான் வந்தபோது உங்களுக்கு பல வாக்குறுதிகளை நான் அளித்திருக்கிறேன். ஒவ்வொன்றாக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டுவருகிறேன். விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி முடிப்பேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.
உறுதி
தமிழ்நாட்டிலேயே ஆர்.கே.நகர் தொகுதி என்றால் அது ஒரு முன் மாதிரியான தொகுதியாக விளங்குகின்ற வகையில் இந்த தொகுதியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல அனைத்து பணிகளையும் நான் மேற்கொள்வேன் என்ற உறுதியை உங்களுக்கு அளித்து, ஒவ்வொரு முறையும் நான் இங்கே வரும்போது நீங்கள் என் மீது பொழிகின்ற அன்பு; எனக்கு அளிக்கின்ற வரவேற்பு என்னை நெகிழ வைத்துவிடுகிறது என்பதைச் சொல்லி, என்றென்றும் உங்கள் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக நான் நடந்து கொள்வேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.
வாக்காளர்களுக்கு வணக்கம்
அதைத் தொடர்ந்து, அன்னை சத்யா நகர், புதுவண்ணாரப்பேட்டை வீரராகவன் சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு, ஏ.இ. கோவில் தெரு, காமராஜர் சாலை, அம்மணி அம்மாள் தோட்டம், சேனியம்மன் கோவில் தெரு, மார்க்கெட் தெரு வழியாக வேனில் வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சாலையில் இருபுறமும் குழுமி நின்ற வாக்காளர்களிடம் வணக்கம் தெரிவித்தும், இரட்டை விரலை காட்டி கையசைத்தும் நன்றி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மாலை 6.40 மணிக்கு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக சென்று வைத்தியநாதன் பாலம் – எண்ணூர் நெடுஞ்சாலை சந்திப்பில் பொதுமக்கள் மத்தியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்து பேசினார்.
நிகழ்ச்சி நிறைவு
பின்னர், அங்கிருந்து கொருக்குப்பேட்டை காரநேசன் நகர் வழியாக சென்று அங்குள்ள முக்கிய சாலையில் திரும்பி வைத்தியநாதன் தெரு, தண்டையார்பேட்டை, பழைய வண்ணார்பேட்டை, கல்லறை சாலை வழியாக எம்.எஸ்.கோவில் தெருவுக்கு மாலை 7.25 மணிக்கு வந்தவுடன் தனது நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிறைவு செய்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1.35 மணி நேரம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர் சென்ற பாதை முழுவதும் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபக்கத்திலும் அலைகடலென மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு நின்று பூக்களை தூவி முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்றனர்.
ஜெயலலிதா மகிழ்ச்சி
மக்கள் கூட்டத்தை பார்த்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த முக மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் காணப்பட்டார். வழி நெடுகிலும் மேள–தாளங்கள் முழங்கின. கட்சி கொடிகளை பிடித்தபடி அ.தி.மு.க.வினர் வாழ்த்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். பல இடங்களில் பெண்கள் ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து, பூரண கும்ப மரியாதை அளித்தனர். இடை இடையே அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடைகளில் நாட்டிய கலைஞர்கள் எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு நடனமாடியபடி இருந்தனர். சிறிய குழந்தைகளுக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வேடமிட்டு மேடையில் நிறுத்தியிருந்தனர்.
வண்ணாரப்பேட்டையில் கிறிஸ்தவ பாதிரியார்கள் பலர் வெள்ளை அங்கியுடன் வந்து ஜெயலலிதாவுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்றனர். ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்ற வெற்றி வாசகம் பல இடங்களில் பேனர்களில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்தன.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் சுவர்களில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
2 குழந்தைகளுக்கு பெயர் வைத்தார்
ஆர்.கே.நகர் தொகுதியில் நன்றி தெரிவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கியதில் இருந்து, அவரது கார் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக சென்றது. எனவே, சாலையின் இருபக்கங்களிலும் கூடியிருந்த மக்கள் அவரை நன்றாக பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். சாலை ஓரங்களில் இருந்த, வீடு, கடைகளில் நின்றவர்களும் மாடியில் ஏறி, அங்கு நின்றபடி கைகளை அசைத்து வாழ்த்து தெரிவித்தனர். மொத்தத்தில், ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அனைவருமே வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வாழ்த்தியதுபோல் இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அமைந்திருந்தது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்காளர்களிடம் நன்றி தெரிவித்தபோது 2 பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். திடீர் நகர் பகுதியில் ஒரு குழந்தைக்கு ‘அபர்ணா’ என்றும், தண்டையார்பேட்டையில் ஒரு குழந்தைக்கு ‘தேவிகா’ என்றும் அவர் பெயர் வைத்தார்.
கடந்த மாதம் (மே) 6–ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். ஒரு மாதத்திற்கு பிறகு அதே தேதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க அவர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad