புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 ஜூன், 2016

மேற்குலகை மீண்டும் குறிவைக்கிறதா ஐ.எஸ்?

உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்று தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களின் கோட்டையாகத்
திகழும் சிரியாவிலும் ஈராக்கிலும் அந்நாடுகளின் அரசுகள் ஒரேநேரத்தில் ஐ.எஸ்கள் மீதான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.
சிரியாவில் ஐ.எஸ்களின் தலைநகராக உள்ள ரக்கா பிராந்தியத்தைக் கைப்பற்றும் சிரியா அர சின் படை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேவேளை, சிரியாவில் இயங்கும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட சிரியா ஜனநாயகப் படை என்ற குர்திஷ் படையும் மறுபுறம் ஐ.எஸ்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
சமகாலத்தில் ஈராக்கிலும் படை நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் ஐ.எஸ்களின் வசமிருக்கும் இரண்டு பெரும் நகர்களுள் ஒன்றான பலூஜாவைக் கைப்பற்றும் படை நகர்வுகள் இன்று இடம்பெறுகின்றன. அமெரிக்க விமானப்படையின் உதவியுடன் ஈராக்கிய படையினர் பலூஜா நகரை இப்போது அண்மித்துள்ளனர். இப்போதுவரை அங்கு கடும் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
அந்த நகரில் சுமார் 50,000 மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்வதற்கு ஐ.எஸ்கள் அனுமதி மறுக்கின்றனர். மீறிச் செல்பவர்கள் ஐ.எஸ்களால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
பலூஜா நகருக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டுள்ளதால் மக்கள் அங்கு பட்டினியால் சாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுவரை பலர் அவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. பலூஜா நகர் விழுமாக இருந்தால் ஐ.எஸ்கள் வசம் எஞ்சி இருக்கப்போவது மொசூல் நகர் மாத்திரம்தான். அதுவும் மீட்கப்பட்டால் ஐ.எஸ்களின் ஆட்டம் ஈராக்கில் முடிவுக்கு வந்துவிடும்.
2014இல் ஈராக்கில் ஐ.எஸ். கைப்பற்றிய அதிகமான இடங்கள் அவர்களிடமிருந்து பறிபோயுள்ளன. கடந்த வருடம்கூட அவர்களின் வசமிருந்த மிகப்பெரிய நகரான ரமதி நகர் ஈராக் படையினரிடம் வீழ்ந்தது. அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறு இவர்கள் ஒருபுறம் தோல்விகளைச் சந்தித்து வருகின்றபோதிலும், மறுபுறம் இவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் தொடரவே செய்கின்றன. தம்மீது தாக்குதல்களை நடத்தும் நாடுகள் மீது இவர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்துவதையும் மிரட்டுவதையும் அவதானிக்கலாம்.
ரஷ்யா, பிரான்ஸ், பெல்ஜியம், துருக்கி மற்றும் சவூதி போன்ற நாடுகள் தாக்குதல்களை எதிர்கொண்டுவிட்டன. அவை மீண்டும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. அந்தவகையில், பிரான்ஸ் இரண்டாவது தடவையும் தாக்குதல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
பிரான்ஸில் கடந்த வருடம் ஐ.எஸ்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலின்போது 130 பேர் கொல்லப்பட்டதை நாம் அறிவோம். அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதன் பாதுகாப்பைப் பலப்படுத்தியது.
இந்நிலையில், பிரான்ஸ் தாக்குதலின் சூத்திரதாரியான அப்துல் சலாம் பெல்ஜியத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். அவரை பிரான்ஸ் பொலிஸார் விசாரித்து வருகின்றனர். அவர் பல இரகசியங்களை வெளியிட்டுள்ளார்.
இவரது மடிக்கணினியைப் பொலிஸார் பரிசோதித்துப் பார்த்தபோது பிரான்ஸில் இடம்பெறவுள்ள உதணூணி 2016 என்ற உதைபந்தாட்ட நிகழ்வின்போது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
அதுமாத்திரமன்றி, அந்த உதைபந்தாட்டத்தின் ஒரு நிகழ்வான ரஷ்யா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான ஆட்டத்தின்போது அதைக் கண்டுகளிக்கவரும் மேற்படி இரு நாடுகளினதும் இரசிகர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
உதணூணி 2016 நிகழ்வானது இந்த மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகி ஒரு மாதம் இடம்பெறவுள்ளது. ஐ.எஸ்களின் தாக்குதலிலிருந்து இரசிகர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு மாதத்துக்குப் பாதுகாப்பு வழங்குவது பிரான்ஸ் அரசுக்குப் பெரிய சவாலாகும். அந்த ஒரு மாத விளையாட்டு நிகழ்வில் ஏதாவது ஒரு நிகழ்வில் அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இதனால், பிரான்ஸ் படையினர் இப்போதிலிருந்தே கடும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அசாதாரண நிலைமையால் சுமார் இரண்டு இலட்சம் இரசிகர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருக்கின்றனர். இதனால், அநேகமாக இந்த நிகழ்வு சோபை இழந்து காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, பிரான்ஸ் செல்லவுள்ள தங்கள் நாட்டுப் பிரஜைகளை அமெரிக்கா எச்சரித்தும் உள்ளது.
பிரான்ஸ் மாத்திரமன்றி, ஐரோப்பா முழுவதும் இன்று ஐ.எஸ்களின் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருக்கின்றது. நோன்பு மாதம் முழுவதும் ஐரோப்பாவின் பல நாடுகளில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்மையில் விடுத்த எச்சரிக்கையும் கவனத்தில்கொள்ளப்படுகின்றது.
தம் மீது தாக்குதல் நடத்திவரும் நாடுகளைப் பழிவாங்குவதற்காகவும் அந்த நாடுகள் தொடர்ந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தாது இருப்பதற்காகவும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் வெற்றிபெற்றால் அவர்கள் நிலமில்லாத போராளிகளாக மாறுவர். இந்த நிலைமையைத் தடுப்பதற்காகவே அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நாடுகளை அவர்கள் மிரட்டி வருகின்றனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்களின் நிலை என்னவென்பதை அறியலாம். அந்த நாடுகளிலிருந்து அவர்கள் முற்றாக விரட்டப்பட்டால் அவர்கள் கால்பதிக்கும் அடுத்த நாடு லிபியாவாகத்தான் இருக்கும். அங்கு அவர்கள் மெல்ல மெல்ல அவர்களை நிலைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால், அது எவ்வளவு தூரம் நிரந்தரம் என்று சொல்ல முடியாது.
எது எப்படியோ, உதணூணி 2016 நிகழ்வின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் முடியுமானவரை அவர்களின் கைவரிசையைக் காட்டுவதற்கு முற்படுவர் என்பது நிச்சயம்.