புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2016

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் 9 தீர்மானங்கள் - படங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 01.06.2016 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில்,  சென்னை, தலைமைக் கழகம் தாயகத்தில்  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தீர்மானம் 1

தமிழக சட்டமன்றத்திற்கான 15 ஆவது பொதுத் தேர்தலில், தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான நல்லாட்சி அமைந்திடத் தமிழக மக்களின் மேலான ஆதரவை நாடி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. 

தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய மறுமலர்ச்சி திமுக, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்த மக்கள் நலக் கூட்டணி, ஊழல் இல்லாத, மது இல்லாத, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட்ட தமிழகம் அமைந்திடப் பிரகடனம் வெளியிட்டது. அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து அளித்திட ‘கூட்டணி ஆட்சி’ என்ற கோட்பாட்டையும் முன்வைத்தது. 

திட்டவட்டமான செயல்திட்டங்களை முன்வைத்து மக்கள் ஆதரவை வேண்டி நின்ற மாற்று அரசியல் அணிக்கு மகத்தான ஆதரவு எழுந்ததை, மதுரையில் ஜனவரி 26, 2016 இல் நடைபெற்ற மாற்று அரசியல் எழுச்சி மாநாடும், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாற்று அரசியல் விழிப்புணர்வுப் பொதுக்கூட்டங்களும் பறைசாற்றின. 

இதே இலட்சியங்களில் பயணித்த தேமுதிக, தமாகா ஆகிய இரண்டு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் உடன்பாடு கண்டன. தமிழகத்தில் 47 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தி வரும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு வலுவான அணியாக தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி உருவானது. நடுநிலையாளர்கள் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்று பலமான மாற்று சக்தியாக எழுச்சி பெற்றது.

ஆனால், 47 ஆண்டுக்காலம் தமிழகத்தை மேய்ச்சல் நிலமாக மாற்றி ஊழல் ஆட்சி நடத்தி, இயற்கை வளங்களைச் சுரண்டிக் கொழுத்து, இரு துருவ அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வந்த திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஊழலில் திரட்டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயைத் தேர்தல் களத்தில் வாரி இறைத்தன. இந்திய ஜனநாயகம் வெட்கித் தலை குனியக் கூடிய அளவுக்கு, வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணத்தை அள்ளித்தந்து வாக்கு அறுவடை செய்தன. சட்டமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டவையே தவிர தமிழக மக்கள் மனம் விரும்பி அவர்களுக்கு வாக்கு அளிக்கவில்லை. 

இந்தச் சூழலிலும் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா மாற்று அரசியல் அணிக்கு 26 இலட்சத்து 18 ஆயிரத்து 250 வாக்குகள் (6.4%) அளித்துள்ள தமிழக மக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தீர்மானம் 2

தமிழக அரசியலில் இரு துருவ அரசியலுக்கு முடிவு கட்ட, சட்டமன்றத் தேர்தல் களத்தில் மக்கள் சக்தியை மட்டுமே நம்பி, நிராயுதபாணியாக தேர்தலைச் சந்தித்த மாற்று அரசியல் அணியின் வெற்றிக்காகப் பசிநோக்காமல் கண்துஞ்சாமல் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிய தேமுதிக - மறுமலர்ச்சி திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஆறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 3

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பேரவலமாக தமிழக சட்டமன்றத் தேர்தலில்  திட்டமிட்ட வகையில் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதைத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது. சிறுதாñர் பங்களாவுக்குள் கண்டெய்னர்கள் மூலமாகப் பணம் கொண்டு செல்லப்பட்டது என்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் குற்றச்சாட்டு குறித்து எந்தவித நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த பணத்தை திமுக, அதிமுக கட்சிகள் மக்களுக்கு சர்வசாதாரணமாக சுண்டல் வழங்குவது போன்று விநியோகம் செய்ததை தடுக்கத் தவறிய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தீர்மானம் 4

தமிழ்நாட்டில் வேரூன்றி உள்ள இரு துருவ ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட முயற்சித்த தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா மாற்று அரசியல் அணி சட்டமன்றத் தேர்தலில்  சந்தித்த தோல்வி தற்காலிகமானது. தமிழக அரசியல் மறுமலர்ச்சிக்கான பயணம் இன்னும் தொடர வேண்டிய நிலைமைதான் நீடிக்கிறது. பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டவும், ஊழல் கறை படிந்துள்ள அரசியல் களத்தைத் தூய்மைப்படுத்தவும், தேமுதிக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கரம் கோர்த்து  மக்கள் பணிகளைத் தொடர்வது என இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 5

தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது வரவேற்கக் கூடியது எனினும், தமிழக அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடனையும் தமிழக அரசே திரும்பச் செலுத்த ஆவன செய்தால்தான் விவசாயிகள் கடன் வலையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும் என்பதை இக்கூட்டம் தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுவதுடன், அதற்கு உரிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தீர்மானம் 6

படிப்படியாக மதுவிலக்கு என்று அறிவித்து முதற்கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதாகவும், மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் அதிகம் விற்பனையாகும் நேரம் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரைதான். எனவே மது விற்பனை நேரத்தை நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும் முழு மதுவிலக்கு என்பதற்கான கால நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 7

மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு மட்டும் இரத்து செய்வதற்கு மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நாடு முழுவதும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு +2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவ நுழைவுத் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம், மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பது மட்டுமின்றி, சமூக நீதி கொள்கைக்கும் எதிராக செயல்படுகிறது. 

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டால், கிராமப்புற ஏழை மாணவர்கள், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிட முடியாது. பொது நுழைவுத் தேர்வு இரத்து செய்யப்பட்டதால்தான் 2007 அம் ஆண்டில் இருந்து இதுவரை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும், ஒடுக்கப்பட்ட, மலைவாழ் இன மற்றும் பிற்பட்ட சமூக மாணவர்களும் பயன் பெற்று வந்துள்ளனர். எனவே மத்திய அரசு மருத்துவக் கல்விக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்தும் முடிவை முற்றாகக் கைவிட வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8

ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், 2015, ஏப்ரல் 7 ஆம் தேதி ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்புக் காவல்துறையினரால் மிகக் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். இது குறித்து விசாரணை நடத்திட ஆந்திர மாநில அரசு 2015, ஏப்ரல் 20 ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தது. ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையின்போது, ஆந்திர மாநில சிறப்புப் புலனாய்வுக்குழு இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் போதிய சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லை என்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலாது என்று கூறி உள்ளது. 

இருபது தமிழர்கள் படுகொலை குறித்து விசாரணை நடத்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், 2015, மே 28 ஆம் தேதி இருபது பேர் படுகொலை குறித்து உண்மைகள் வெளிவர வேண்டும், சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டினை ஆந்திர அரசு வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டது.

ஆனால் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவைச் செயல்படுத்த ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் 2015, ஜூன் 4 இல் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த ஓராண்டுகாலமாக இந்தத் தடை நீடிக்கின்றது. இந்தத் தடையை நீக்குவதற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள ஆந்திர மாநில அரசு நியமித்துள்ள சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணையின் மூலம் உரிய நீதி கிடைக்காது என்பதற்கு சான்றுதான், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் ஆந்திர மாநில சிறப்புப் புலனாய்வுக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கை ஆகும். 

எனவே, இருபது தமிழர்கள் படுகொலை குறித்து உண்மையான விசாரணை நடத்தி கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு மத்திய புலனாய்வுக்குழு (சிபிஐ) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் இதுவரை காட்டி வந்துள்ள அலட்சியப்போக்கைத் திருத்திக் கொண்டு, நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலை யிலும், மத்திய அரசு பெட்ரோல் - டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது. கடந்த மாதத்தில் இரண்டு முறையாக பெட்ரோல் விலை 1.89 காசுகளும், டீசல் 4.20 காசுகளும் உயர்த்தப்பட்டன. தற்போது இன்று (ஜூன் 1) முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.58 காசுகளும், டீசல் விலை 2.26 காசுகளும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால், விலைவாசி மேலும் கட்டுக்கு அடங்காமல் உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே 12.36 சதவிகிதமாக இருந்த சேவை வரி, மத்திய பட்ஜெட்டின் போது 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் கூடுதலாக வேளாண் வளர்ச்சி வரியாக 0.5 சதவிகிதம் சேர்த்து 14.5 சதவிகிதம் ஆனது. தற்போது தூய்மை இந்தியா திட்டத்திற்காக மேலும் 0.5 சதவிகிதம் சேர்த்து இன்று முதல் சேவை வரி 15 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. இந்தச் சுமை சாதாரண நடுத்தர மக்களையும் வெகுவாகப் பாதிக்கும். இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலையை தொடர்ச்சியாக மத்திய அரசு உயர்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

ad

ad