20 மார்., 2019

பரிஸ் ஸா ஜெர்மனை விட்டு நெய்மர், மப்பே விலகமாட்டார்கள்

தமது நட்சத்திர முன்கள வீரர்களான நெய்மரை அல்லது கிலியான் மப்பேயை இப்பருவகால முடிவில் விற்க வேண்டும் என்பதை பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நெய்மர், கிலியான் மப்பேயைக் கைச்சாத்திடுவதில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் விருப்பத்தை வெளிப்படுத்தியத்துக்கு மத்தியிலேயே மேற்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சம்பியன்ஸ் லீக்கின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டால் பரிஸ் ஸா ஜெர்மைன் வெளியேற்றப்பட்டது முதல் நெய்மர், கிலியான் மப்பேயை கைச்சாத்திட றியல் மட்ரிட் முயல்கிறது.

இந்நிலையிலேயே, பிரான்ஸில் வீரர்களின் ஒப்பந்தத்திலுள்ள விடுவிக்கப்படும் சரத்து அனுமதிக்கப்படாத நிலையில், ஒப்பந்தத்தின் கீழுள்ள நெய்மர், கிலியான் மப்பேயை விற்க வேண்டிய கட்டாயம் பரிஸ் ஸா ஜெர்மைனுக்கு இல்லாதபோதும், நடப்புப் பருவகாலத்தில் பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து விலகமாட்டோம் என நெய்மர், கிலியான் மப்பேயிடமிருந்து உறுதிப்பாடுகளை பரிஸ் ஸா ஜெர்மைன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நிதி முறைமைகளைப் பேணுவதற்காக, பின்கள வீரர்களான தோமஸ் மெனுயர், லேவின் குர்ஸாவா, மத்தியகள வீரரான கிறிஸ்தோபஸ் என்குங்கு ஆகியோரை பரிஸ் ஸா ஜெர்மைன் விற்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கடனடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மத்தியகள வீரரான ஜியோவனி லோ செல்ஸோ, முன்களவீரர் ஜெஸே றொட்றிகாஸ், பின்கள வீரர் கிர்ஸேகோர்ஸ் கிரைசோவியாக்கை முழுமையாக அக்கழகங்களுக்கு விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.