புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமா இந்தியா?
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த நகர்வுகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.திருத்தப்பட்ட  2வது தீர்மான வரைபுப்படி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளுக்கு இலங்கை முகம் கொடுப்பதற்கான சூழல் உருவாகும் சாத்தியங்கள் தென்படுகின்றன.
இந்த வாரம் நடக்கவுள்ள இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பின் போது எவ்வாறு நடந்து கொள்வது என்று பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே முடிவு செய்து விட்டதாகவே தகவல்கள் கூறுகின்றன.
ஏனென்றால் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் அதை ஆதரிப்பது, எதிர்ப்பது, வாக்களிக்காமல் நடுநிலை வகிப்பது, வாக்களிப்பு நேரத்தில் சபையில் இல்லாமல் இருப்பது என்று 47 உறுப்பு நாடுகளுக்கும் நான்கு தெரிவுகள் தான் உள்ளன.
இந்த நான்கு தெரிவுகளில் எதையேனும் ஒன்றைத் தெரிவுசெய்து கொள்வது ஒன்றும் உறுப்பு நாடுகளுக்கு அவ்வளவு கடினமான காரியமில்லை.
ஏற்கனவே தீர்மான வரைபைப் பற்றிக் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் நிலைப்பாட்டில் ஒரு தொகுதி நாடுகள் இருக்கின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் அவ்வாறு தீர்மானத்தை ஆதரிக்கத் தயாராக உள்ளன.
அதுபோலவே ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா, வியட்னாம் போன்ற நாடுகள் தீர்மான வரைபு நீர்த்துப்போன ஒன்றாக இருந்தாலும் கூட எதிர்த்தே வாக்களிக்கப் போகின்றன.
எனவே இவ்வாறு இரண்டு பக்கத்திலும் இல்லாத பொதுப்படையான நாடுகளின் நிலைப்பாடு குறித்த கேள்விதான் இதுவரை ஜெனிவாவில் முக்கியத்துவம் பெற்று வந்துள்ளது.
இந்தியா, ஜப்பான, தென்னாபிரிக்கா உள்ளிட்ட இத்தகைய நாடுகளை வளைத்துப் போடுவதற்காக இரண்டு தரப்புகளுமே ஜெனிவாவிலும் தனிப்பட்ட ரீதியிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்கா தமது தீர்மான வரைபு குறித்து விளக்கமளிக்கவும் அதற்கு ஆதரவு தேடவும் ஜெனிவாவில் மூன்று இணைக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இதன்மூலம் கிட்டத்தட்ட பெரும்பாலான நாடுகள் தமது நிலைப்பாட்டை எடுப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா நடத்திய 3வது இணைக் கலந்துரையாடலை அடுத்து தீர்மான வரைபை பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றுவதற்கான ஆதரவை அமெரிக்கா உறுதிப்படுத்திக் கொண்டு விட்டதாகவே தகவல்கள் கூறுகின்றன.
எனினும் இறுதியான தீர்மான வரைபு எவ்வாறிருக்கும் என்பதைப் பொறுத்து மேலும் பல நாடுகளின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கருத்தும் உள்ளது.
இந்தநிலையில் இந்தமுறை தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென்ற கேள்வி பெரும்பாலும் எழவில்லை என்றே கூறலாம்.
அதுபோலவே இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டங்களும் கூட இந்தமுறை தமிழ்நாட்டில் நடக்கவில்லை.
கடந்த ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட போது தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.
பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு அரசியல் ரீதியாக புதுடில்லிக்கு அழுத்தம் கொடுப்பதில் தமிழ்நாடு வெற்றியும் கண்டிருந்தது.
அதாவது இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையையே வளைத்துப் பார்க்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் செல்வாக்கு இருப்பதாக ஏனைய மாநிலங்கள் பொறாமைப்படும் நிலை மட்டுமன்றி பொருமுகின்ற நிலையும் காணப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு இந்தத் தீர்மான விவகாரத்தில் இந்தியாவும் அவ்வளவாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாடும் அவ்வளவாக அழுத்தம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
தமிழகக் கட்சிகளில் சில இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டுமென்று அறிக்கை விட்டதோடும் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றியதோடும் நின்றுகொண்டன.
அடுத்த மாதம் 24ம் திகதி தமிழ்நாட்டில் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் ஆரவாரங்களில் ஈடுபட்டுள்ளதால் கட்சிகள் இதனை மறந்து விட்டதாகக் கருத முடியாது.
ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் பலமான ஒரு மாநிலக் கட்சியின் கூட்டணி கிடைத்திருந்தால் இந்த விவகாரம் இன்னும் சூடு பிடித்திருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆநாதரவாக விடப்பட்டுவிட்ட நிலையில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை வைத்து வாக்குக் கேட்கும் நிலை பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது.
எவரும் எதிர்த்துப் பிரசாரம் செய்யாது போனாலும் கூட காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத நிலையே உள்ளது.
அதேவேளை தேர்தல் ஆரவாரங்களுக்குள் தமிழகம் அகப்படாமல் போயிருந்தால் கூட இந்தமுறை புதுடில்லியின் முடிவு குறித்து தமிழகம் அதிக அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றே தெரிகிறது.
அது தேர்தல் என்ற காரணியைப் புறந்தள்ளி விட்டுப் பார்க்கக்கூடிய விடயமாகும்.
உள்நாட்டு அரசியல் நலன்கருதி எடுக்கத் தூண்டும் முடிவுக்கு அப்பாற்பட்ட விவகாரம் இது. அதாவது இந்தியா இந்தத் தீர்மான வரைபை நிராகரிக்க முடியாத ஒரு நிலையை அமெரிக்கா உருவாக்கியுள்ளதே அந்தக் காரணி.
இலங்கை விவகாரத்தில் இந்தியா எவற்றைக் கோருகிறதோ அவற்றையும் மிகத் தந்திரமாக அமெரிக்கா இந்த வரைபில் உள்ளடக்கி விட்டுள்ளது.
இந்தியாவுக்கு இப்போது சவாலான உள்ளவிடயம் தனக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் இலங்கை மீறிச் செயற்படுகிறது என்பதே குறிப்பாக அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது.
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவினது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதனை எத்தனையோ முறை இலங்கையிடம் இந்தியா வலியுறுத்திக் கூறியும் அந்த வாக்குறுதியை கொழும்பு நிறைவேற்றவே இல்லை.
ஒரு பக்கத்தில் இந்த வாக்குறுதியை இலங்கை நிறைவேற்றவில்லை என்று இந்தியா ஆத்திரம் கொண்டாலும் இன்னொரு பக்கத்தில் அயல்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று தனக்குத் தானே போட்டுக்கொண்ட வட்டத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் தான் இந்தியா இருக்கிறது.
வெளிப்படையாகச் சொல்லப்போனால் இலங்கை மீது கோபம் கொள்ளவோ, அழுத்தங்களைப் பிரயோகிக்கவோ முடியாத நிலையில் ஒரு கையறு நிலையில் இருந்து வந்தது இந்தியா.
இப்படியான சூழலில் அமெரிக்கத் தீர்மான வரைபு அதிகாரப் பகிர்வையும் 13வது திருத்தச்சட்டத்தினது முழுமையான நடைமுறைப்படுத்தலையும் வலியுறுத்தி நிற்கிறது.
13வது திருத்தச்சட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபை காத்திரமான முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது தீர்மான வரைபு.
இப்படியான நிலையில் இலங்கை விவகாரத்தில் இந்தியாவினது தன்மானத்துக்கு சிக்கலைக் கொடுத்து வந்த பிரச்சினைக்கு அமெரிக்கா, ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் ஊடாக தீர்வுகாண வழியமைத்துக் கொடுக்க முன்வந்துள்ள போது இந்தியாவினால் அதைத் தட்டிக்கழிக்க முடியாது.
அவ்வாறு தட்டிக்கழிக்க முனைந்தால் இந்தியா இந்த விவகாரங்களில் கூறும் தமது நிலைப்பாடு உண்மையானது தானா? என்ற கேள்வியை உருவாக்கிவிடும்.
ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்ற தீர்மான வரைபின் பகுதிகளை இந்தியா விரும்பாது போனாலும் கூட அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்றவற்றில் இலங்கை அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்கு இந்தத் தீர்மானம் உதவும் என்று இந்தியா நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவினது ஆதரவைப் பெறுவதற்கு புதுடில்லியின் வாலைப் பிடித்துக்கொண்டு அலைவதை விட இராஜதந்திர காய் நகர்த்தல்களின் மூலம் இந்தியத் தரப்பை மடக்கி போட்டுள்ளது அமெரிக்கா. இப்போது இந்தியாவினால் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பதை விட வேறொரு தெரிவு இல்லை.
அந்த முடிவை இந்தியா எடுத்துவிட்டதாகவே புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளக அரசியல் அழுத்தங்களின் காரணமாக மட்டும் இந்தியா இந்த முடிவுக்கு வரவில்லை.
இலங்கை சார்ந்த அதன் வெளிவிவகாரக் கொள்கையின்படியும் இதே முடிவைத் தான் இந்தியாவினால் எடுக்க முடியும். ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவினது நிலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சூசகமாகத் தெரிவித்திருந்தார்.
பின்னர் வரைபு கிடைத்ததும் அது பற்றி முடிவு செய்யப்படும் என்றது இந்தியா. வரைபு கையில் கிடைத்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இந்தியாவின் பக்கத்திலிருந்து எந்த அதிகாரபூர்வ பதிலையும் காணவில்லை.
ஜெனிவாவில் நடந்த இணைக் கலந்துரையாடல்களில் கூட இந்தியா திருத்தங்களை முன்வைக்கவில்லை. அதில் இணை நிலை அதிகாரிகளே பங்கேற்றதுடன் தீர்மான வரைபு குறித்து வெளிப்படையான கருத்துகளையும் அவர்கள் வெளியிடவில்லை.
இதுவே இந்தியாவின் நிலையைத் தெளிவாக்கிவிட்டது.
அதாவது அமெரிக்காவினது தீர்மான வரைபை ஆதரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையே அது உணர்த்தியது.
ஆனால் சில வேளைகளில் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் இந்தியா பின்கதவால் முயற்சிக்கலாம்.
ஆனாலும் முன்னரைப்போல இந்த முறை தீர்மான வரைபைத் திருத்தாவிடின் ஆதரவாக வாக்களிக்க முடியாது, நடுநிலை வகிக்க நேரிடும் என்று மட்டும் அமெரிக்காவுடன் பேரம் பேச முடியாது.
அதனால் பெரும்பாலும் இந்தியா இதனை நீர்த்துப்போகச் செய்ய  முனையாது என்றே எதிர்பார்க்கலாம்.
ஹரிகரன்

ad

ad