புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2014

புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி

புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். தியாகி அறக்கொடை நிலையத்திலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று மாலை ஊடகவியலாளரும் கவிஞருமான செல்வக்குமாரின் ஊசல் கவிநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இவ் விழாவுக்கு ஐங்கரநேசன் தலைமை தாங்கி நடாத்தி இருந்தார். அதன் போது தலைமை உரையாற்றும் போதே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு உரையாற்றி இருந்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஒரு இலக்கிய எழுத்தாளனிற்காக குரல்கொடுக்க இலக்கிய எழுத்தாளர்கள் சமூகம் தயாரற்ற சூழலே தமிழர் தேசத்தில் காணப்படுகின்றது.
ஒரு ஆசிரியனுக்கு அநீதி இளைக்கப்பட்டால் நீதி கோரி ஆசிரியர்கள் போராடுகிறார்கள், ஊடகவியலாளனுக்கு நீதி கோரி ஊடகவியலாளர்கள் போராடுகிறார்கள் என அவரவர் துறை சார்ந்தவர்களுக்காக அந்தந்த துறை சார்ந்தவர்கள் போராடுகின்றனர். ஆனால் ஒரு கவிஞனுக்காக ஒரு இலக்கியவாதிக்காக போராட மற்றைய கவிஞர்கள் இலக்கிய வாதிகள் தயாரக இல்லை.
புதுவை இரத்தினதுரை விடுதலைப் புலிகளுக்கு பாட்டு எழுதியவர், புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு அப்பால் புதுவை இரத்தினதுரை ஒரு திறமையான கவிஞன். ஒரு இலக்கியவாதி. அந்த கவிஞனை அந்த இலக்கியவாதியை இறுதி யுத்தத்தின் போது அவரது மனைவி தன் கைகளால் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தார். இன்றுவரை அவர் பற்றிய எந்தவிதமான தகவல்களும் இல்லை.
இந்த கவிஞனுக்காக அந்த இலக்கியவாதிக்காக குரல் கொடுக்க எந்த கவிஞனும் இலக்கியவாதியும் இல்லை.
புதுவை இரத்தினதுரையால் வளர்த்ததுவிடப்பட்ட கவிஞர்கள் ஏரளாம்பேர் இங்கு இருக்கின்றார்கள், அவரது வெளியீடுகளில் தங்களது ஆக்கங்கள் வரவேண்டும் என் போராடி தங்கள் ஆக்கங்களை பதிவு செய்தவர்கள் இருக்கின்றார்கள், ஆனால் எல்லோரும் அவரை மறந்து விட்டார்கள்.
அவரிற்காக ஒருகுரலேனும் ஓங்கி ஒலிக்காமல் போய்விட்டதுதான் வேதனையான விடயம். இவ்வாறான நிலையே ஏனைய இலக்கியகாரர்களிற்கு ஒரு பிரச்சினை ஏற்படுகின்றபோதும் காணப்படுகின்றது.
இந்த தயக்கநிலை ஏன் என்று எனக்கு புரியவில்லை. இலக்கிய சமூகம் இனியாவது தமது துறைசார்ந்தவர்களிற்கு அநீதி இழைக்கப்படும் போது குரல்கொடுக்க முன்வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.