புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

   

கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள்

 பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கில் புலிச்சந்தேக நபர்கள் செயற்பாடு
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும்
‘அப்பன்’ என்றழைக்கப்படும் நவரட்ணம் நவநீதன் ஆகிய எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகவே வடக்கில் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றதேயொழிய அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்தும் நோக்கம் இல்லையென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தினகரனுக்குத் தெரிவித்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த கோபி மற்றும் அப்பன் ஆகியோர் வடக்கில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான சதித் திட்டங்களை வகுத்து வருவது தொடர்பிலான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. இதனடிப்படையிலேயே, இவ்விருவரையும் உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
சுமார் முப்பது வருடகாலமாக பயங்கரவாதிகளால் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையை மீண்டும் தோற்றுவிப்பதே இவர்களது பிரதான குறிக்கோளாகவுள்ளது. மோதல் காலத்தில் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருந்த இவர்கள் நாட்டில்
நிலவும் சமாதானத்தை பயன்படுத்தி மீண்டும் வடக்கிற்கு திரும்பியிருக்க வேண்டுமென்று சந்தேகமும் பாதுகாப்பு தரப்பினருக்கு எழுந்துள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்யா விட்டால் எதிர்காலத்தில் நாடும் நாட்டு மக்களும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். எனவே, இதனை புரிந்து கொண்டவர்களாக வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கோபி மற்றும் அப்பனை கைதுசெய்வதற்கான ஒத்துழைப்பை எமக்கு தர வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்படி, எல்.ரி.ரி.ஈ. சந்தேகநபர்கள் குறித்துத் தகவல்களைத் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுமெனக் கூறிய பொலிஸ் பேச்சாளர் சரியான விவரங்களை வழங்கியவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
கோபி சுமார் 31 வயது மதிக்கத்தக்கவர். ஆறடி உயரமுடைய இவர் கருமையானவர். அவரது இடது பக்க உதட்டுக்கு மேலே ஒரு காயம் ஏற்பட்டதற்கான தழும்பு உள்ளது. மேலும் 38 வயதான அப்பன் 5 அடி 2 அங்குல உயரமும் கருமை நிறமும் கொண்டவர் ஆவார். இவர் பற்றிய தகவல்களை 011-2451636 என்ற தொலை பேசி இலக்கத்துக்கு அல்லது 011- 2321838 என்ற தொலைநகல் இலக்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ad

ad