புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின


பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.
தேர்தலை சீர்குலைக்க சதி
இந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
இந்த நிலையில் ராஜ
ஸ்தான் மாநிலத்தில், தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், எல்லையில் பெரிய அளவில் வெடிபொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் டெல்லி சிறப்பு படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
4 தீவிரவாதிகள் கைது
அதன்பேரில் டெல்லி சிறப்பு போலீஸ் படையினர் நேற்று முன்தினம் ராஜஸ்தான் விரைந்து, அங்கு தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ் (வயது 25) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் சிக்கினார்கள். பாராளுமன்ற தேர்தலையொட்டி அவர்கள் சதிவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாக விசாரணையில் தெரியவந்து உள்ளது.
இவர்களில் ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ் பாகிஸ்தானை சேர்ந்தவர். அங்கு தீவிரவாத பயிற்சி பெற்றவர். மும்பை ஜாவேரி பஜாரில் கடந்த 2011-ம் ஆண்டு, ஜூலை மாதம் 12-ந் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் உள்பட நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான இவர் போலீசாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர் ஆவார்.
மிக பயங்கர தீவிரவாதி
இதுதொடர்பாக டெல்லியில் சிறப்பு படை போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மிக பயங்கரமான தீவிரவாதி ஜியா உர் ரகுமான், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஆதரவில் செயல்பட்டவர். அவரும், தற்போது தலைமறைவாக உள்ள அவருடைய கூட்டாளிகளும் நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தனர். ஜியா உர் ரகுமான் அஜ்மீர் ரெயில் நிலையத்துக்கு வெளியே சனிக்கிழமை காலையில் கைது செய்யப்பட்டார். மும்பை பாந்திராவில் இருந்து ரெயிலில் வந்து இறங்கியபோது அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து செல்போன்கள் உள்பட சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
(இவர் இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவன் யாசின் பட்கலின் நெருங்கிய கூட்டாளி என்றும், வாரணாசி, மும்பை, புனே, ஐதராபாத், புத்தகயா, பாட்னா குண்டுவெடிப்புகளில் தொடர்பு உடையவர் என்றும், இவரது தலைக்கு தேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ. ரூ.10 லட்சம் விலை வைத்திருந்தது எனவும் தகவல்கள் கூறுகின்றன.)
வெடிபொருட்கள் பறிமுதல்
ஜியா உர் ரகுமானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரது கூட்டாளிகளான ஜெய்ப்பூரை சேர்ந்த முகமது மெஹ்ருப் (21), முகமது வாக்கர் அசார் என்ற ஹனீப் (21), ஜோத்பூரை சேர்ந்த சாக்குயிப் அன்சாரி என்ற காலித் (25) ஆகிய 3 பேரும் ராஜஸ்தான் போலீசாரின் உதவியுடன் அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது மெஹ்ருப் ஜெய்ப்பூர், ஜகத்புரா வி.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர். முகமது வாக்கர் அசார் என்ற ஹனீப், ஜெய்ப்பூர் சீதப்புரா ஜி.ஐ.டி.யில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். சாக்குயிப் அன்சாரி கம்ப்யூட்டர் மையம், அச்சகம் நடத்துகிறார்.
நாங்கள் அவர்களது வீடுகளில் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், எலெக்டிரானிக் சர்கியூட்டுகள், டைமர்கள், லேப்டாப், செல்போன்கள், பென் டிரைவ் ஆகியவற்றை கைப்பற்றினோம். (ஜோத்பூரில் சாக்குயிப் அன்சாரி என்ற காலித் வீட்டில் இருந்து மட்டுமே 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின.)
மோடி மீது குறியா?
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறிவைத்து இவர்கள் சதித்திட்டம் தீட்டியவர்களா? என்று கேட்கிறீர்கள். தற்போதைய விசாரணை அந்த கோணத்தில் செல்லவில்லை.
பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல்வாதிகள் மீதோ, தேர்தல் பிரசார கூட்டங்களிலோ தாக்குதல்கள் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனரா என்று கேட்டால், தேர்தல்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் தாக்குதல்கள் நடத்துவதற்கான இலக்குகளாக இருந்திருக்கலாம். இப்போது விசாரணையின் ஆரம்பக்கட்டம்தான். அதுபற்றி இப்போது யூகித்து கூற விரும்பவில்லை.
குறிப்பிட்ட ஒரு நாசவேலையில் ஈடுபடுவதற்காக ராஜஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக அஜ்மீருக்கு வந்ததாக விசாரணையின்போது ஜியா உர் ரகுமான் கூறினார். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி கொண்டு சென்றனர்
ஐ.இ.டி. என்னும் அதிநவீன வெடிகுண்டு மற்றும் பிற வெடிகுண்டுகளில் நிபுணரான ஜியா உர் ரகுமான், டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. அவரிடம் தற்போது போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மற்ற மூவரும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதால், மாநிலத்தில் ‘உஷார்’ நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருந்தினர்கள் வருகையின்போது உஷாராக இருக்கும்படி ஓட்டல்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உள்துறை மந்திரி ஷிண்டே
இதற்கிடையே மும்பையில் மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ் பாகிஸ்தான் தீவிரவாதி ஆவார். பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய அவரை பிடிக்கும் முயற்சியில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டு வந்தோம். அவரது கைது மிக முக்கியமான நடவடிக்கை. இது போலீசுக்கு மிகப்பெரிய வெற்றியும் ஆகும். பல்வேறு தீவிரவாத தொடர்புகள் குறித்த தகவல்கள் இனி வெளிவரும். இன்னும் 2, 3 தீவிரவாதிகளை பிடிக்க நடவடிக்கை தொடர்கிறது” என கூறினார்.
பாதுகாப்பு
தேர்தலின்போது தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் சந்தித்தது பற்றிய கேள்விக்கும் ஷிண்டே பதில் அளித்தார்.
அப்போது அவர், “அவர்களிடம், பா.ஜனதா தலைவர்களுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை என்று சொன்னேன். பாட்னாவில் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின்னர், அவரது பாதுகாப்பை நானே பலப்படுத்தி விட்டேன். மோடிக்கு மிரட்டல் இல்லை. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பாரதீய ஜனதாவாக இருந்தாலும், சோஷலிச கட்சியாக இருந்தாலும், பகுஜன் சமாஜ் அல்லது காங்கிரசாக இருந்தாலும், அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி இருக்கிறோம்” என்று கூறினார்.

ad

ad