16 செப்., 2015

ஆதிசக்தி, அந்தோனியார்புரம் அணிகளுக்கு வெற்றி

பருத்தித்தறை உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வடமாகாண ரீதியாக நடத்தும் உதைபந்தாட்டத் தொடரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆட்டங்களில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் மன்னார் அந்தோனியார்புரம் விளையாட்டுக்கழகம் என்பன வெற்றி பெற்றுள்ளன.
ஆதிசக்தி எதிர் விண்மீன்
முதலாவாக இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வெட்டித்துறை ஆதிசக்தி விளையாட்டுக் கழகமும் பலாலி விண்மீன் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் ஆரம்பமாகி 4 ஆவது நிமிடமே பலாலி விண்மீன் வீரர் கெனடி முதலாவது கோலினை அடித்து விண்மீனின் கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார். கிட்டத்தட்ட 30 நிமிட போராட்டத்தின் பின்னர் பதில் கோலைப் பதிவுசெய்தது ஆதிசக்தி. இதனால் 1:1 என்ற சமநிலையுடன் முதல்பாதி முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாதியில் சமநிலைத்தன்மை மாற்றம் பெறுவதாக இல்லை. ஆட்டம் முடிவடைய 3 நிமிடங்கள் மீதமிருக்க ஆதிசக்தியின் குகன் மற்றொரு கோலை விளாச 2:1 என்று ஆதிசக்தி வெற்றியீட்டியது. ஆட்ட நாயகனாகத் கெளரிதாசன் தெரிவு செய்யப்பட்டார்.
அந்தோனியார்புரம் எதிர் கண்ணகை
அந்தோனியார்புரம் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மயிலிட்டி கண்ணகை விளையாட்டுக் கழகம் மோதியது. பதின்ம நிமிடத்தில் எமில் ரனின் உதவியால் அந்தோனியார் புரத்தின் கோல் கணக்கு ஆரம்பமானது. அதேநிலைமையே ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவுவரை நீடித்தது.
அந்தோனியார்புரத்தின் ஆதிக்கம் இரண்டாம் பாதியில் இரட்டிப்பு வேகமடைந்தது. 23ஆவது 24ஆவது 26ஆவது மற்றும் 30ஆவது நிமி டங்களில் விஜயகுமார், ஜேசுதாஸ், குயின்ரன் மற்றும் எமில்டன் ஆகியோர் கோல்களைப் பதிவுசெய்ய முடிவில் அந்தோனியார்புரம் வி.கழகம் 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக எமில்டன் தெரிவானார்.