16 செப்., 2015

சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை)

லக கால்பந்து காதலர்களின்  தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து  ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்பை ஸ்பெயினின் பார்சிலோனா அணியின் வசம் உள்ளது.

இந்த ஆண்டு கோப்பையை வெல்லத் தகுதியுள்ள அணிகளாக கால்பந்து நிபுணர்கள் கருதும் அணிகள் பற்றி ஒரு அலசல்

பார்சிலோனா (ஸ்பெயின்)

    
நடப்பு சாம்பியன் அந்தஸ்தோடு களமிறங்கும் பார்சிலோனா அணி கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே பலரின் கருத்து. மெஸ்ஸி, நெய்மர், சுவாரஸ் என்ற இந்த மும்மூர்திகள் தான் இந்த அணியின் பெரும்பலம். கடந்த ஆண்டு இவர்கள் மூவர் மட்டுமே இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோல்கள் அடித்ததுவே இதற்கு சான்று. எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்ட கேப்டன் இனியஸ்டா, எப்படிப்பட்ட வீரரையும் தடுத்து பந்தைப் பறிக்கும் ஆற்றல் கொண்ட மச்சாரானோ என நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கின்றனர் . போட்டியன்று ஏதாவது அதிர்ஷ்டம் நடந்தால் மட்டுமே இவ்வணியை வெல்ல முடியும். அணியின் இப்போதைய ஒரே பலவீனம் இவ்வணியின் பின்கள வீரர்கள் தான். அதிக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும்ஜெரார்ட்  பிக்கு, டேனி ஏல்வியஸ் போன்ற வீரர்கள் அடிக்கடி நடுவர்களால் எச்சரிக்கை செய்யப்படுபவர்கள். முக்கியமான கட்டத்தில் அவர்கள் வெளியற்றப்பட்டால் அது அணிக்கு பெரும் பின்னடைவாக மாறிவிடக்கூடும்.

ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்)


'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ரியல் மாட்ரிட் அணிக்கு பெரும் சவால்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு பார்சிலோனா அணியிடம் அனைத்து கோப்பைகளையும் கோட்டை விட்டதால் பயிற்சியாளர் ஆன்சலோட்டி நீக்கப்பட்டு ரஃபா பெனிட்ஸ் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றார். 
கால்பந்தின் உயரிய விருதான பல்லான் டி ஓர் (தங்கபந்து )  விருது வென்ற கிரிஸ்டியானோ ரொனால்டோ, இளமையும் திறமையும் கலந்து கலக்கும் ராட்ரிக்யூஸ், குரூஸ், உலகின் மிகவும் காஸ்ட்லியான வீரரான காரத் பேல் ஆகியோர் கைகொடுத்தால் பார்சிலோனாவிற்கு பெரும் சவால் அளிக்கக்கூடும். அதேசமயம் அணியின் நீண்ட நாள் கேப்டனும், உலகின் தலைசிறந்த கோல்கீப்பராகவும் வலம் வந்த இகர் காசில்லஸ் போர்ட்டோ அணியில் இணைந்தது ரியல் மாட்ரிட்டுக்கு பின்னடைவே. நட்சத்திர வீரர்கள் யாரேனும் அடிபட்டுவிட்டால் அணி திண்டாடுவது சமீப காலங்களாகவே வெளிப்பட்டு வருகிறது. 10 சாம்பியன்ஸ் கோப்பைகளை வென்ற ஒரே அணியான ரியல் மாட்ரிட் பார்சிலோனாவிடம் இருந்து  கைப்பற்ற நிச்சயம் போராடும்.

பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)
மேற்கண்ட இரு ஸ்பெயின்  அணிகளுக்கும் எல்லா வகையிலும் ஈடு கொடுக்கும் அணி பேயர்ன் மூனிச். முல்லர், ரிபரி, ராபன், லாம், லெவண்டோஸ்கி, கோட்சே என அணியில் திறமை மிகுந்த வீரர்களுக்கு பஞ்சமில்லை. உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி அணியின் பாதி வீரர்கள் இந்த அணிக்கு விளையாடுவது மிகப் பெரிய பலம். உலகக்கோப்பையின் சிறந்த கோல்கீப்பரான நூயர் இருந்தாலும் இவர்களின் தடுப்பாட்டக்காரர்கள் சொதப்புவதாலேயே கடந்த இரு முறையும் அதிக கோல்கள் வாங்கி அரை இறுதியோடு வெளியேற நேரிட்டது. இந்த முறையும் இப்பிரச்சனை சரிசெய்யப்பட்டதாய் தெரியவில்லை. முன்கள ஆட்டத்தில் காட்டும் அக்கறையை தடுப்பாட்டத்திலும் காட்டினால் இம்முறை கண்டிப்பாக இறுதிப்போட்டியை எட்டக்கூடும். நடுகள வீரர்களான டக்லஸ் கோஸ்டா, சிலியைச் சார்ந்த விடால் ஆகியோரின் வருகை அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து)

இரண்டு மாதம் முன்புவரை இவ்வணி காலறிதியைத் தாண்டும் என்று கூட யாரும் கூறியிருக்க மாட்டார்கள். பிரிமியர் லீக் தொடரில்  தொடர்ந்து 5 போட்டிகளாக ஒரு கோல் கூட வாங்காமல் பட்டயைக் கிளப்பி வருகின்றனர். கேப்டன் கெம்பனி, மங்கலா ஆகியோரின் அரணை எந்த வீரராலும் இது வரை உடைக்க முடியவில்லை. டோரே, நவாஸ், சில்வா ஆகியோரும் பார்முக்குத் திரும்பிவிட்டதால் இவ்வணியின் வெற்றிப் பயணத்தை யாரலும் தடுக்க முடியவில்லை. இந்த ஆண்டு மட்டும் புதிய வீரர்களுக்காக சுமார் 130 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்துள்ளது இவ்வணி. உலகின் அனைத்து பெரிய அணிகளும் வளைத்துப்போட போட்டி போட்ட இளம் வீரர்களான ஸ்டெர்லிங்,  டி புரூய்ன் ஆகியோரை இவர்கள் வாங்கியிருப்பது அணியை மேலும் பலமாக்கியுள்ளது.  ஆனாலும் அணியின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் அர்ஜென்டினாவைச் சார்ந்த அகுவேரோ தான். கோல் மெஷின் என்று வருணிக்கப்படும் இவரையே அதிகம் சார்ந்துள்ளது இவ்வணி. இவருக்கு அடிக்கடி அடிபட்டு விடுவது அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும். இவர் உடல்நிலை ஒத்துழைத்து மற்றவர்களும் சிறப்பாக விளையாடினால் இம்முறை கோப்பையை வென்று சரித்திரம் படைக்கலாம்.    
    
இவ்வணிகள் மட்டுமல்லாமல் அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின் ), பாரிஸ் செயிட் ஜெர்மெய்ன் (பிரான்சு), செல்ஸி (இங்கிலாந்து), ஜுவென்டஸ் (இத்தாலி) ஆகிய அணிகளும் கடும் போட்டியில் உள்ளன.  அதுமட்டுமின்றி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில்அடிப்பது யார்? என்பதில்  மெஸ்ஸி, ரொனால்டோ இடையே நடக்கும் கோல் போடும் போட்டி  தொடரை இன்னும்விறுவிறுப்பாக்கும். 

கடந்த ஆண்டு சுமார் 150 கோடி மக்களால் கண்டு களிக்கப்பட்ட இந்த சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் அணியே ஐரோப்பாவின் முடிசூடா மன்னனாக ஓரண்டு காலம் இருக்கும். அந்த அரசன் யார்? எந்த நாட்டைச் சார்ந்த அணி வெல்லப் போகிறது? யார் அதிக கோல்கள் போட்டு முதலிடம் பிடிக்கப் போகிறார்? பொருத்திருப்போம் அடுத்த மே மாதம் வரை. அதுவரை நமக்கு நல்ல பொழுதுபோக்கு தர காத்துக் கொண்டிருக்கின்றன இத்தொடரின் ஒவ்வொரு போட்டிகளும்