16 செப்., 2015

தமிழக அரசுப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்த பெண் உயிர் தப்பிய அதிசயம்! (வீடியோ

தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம்
கேரளாவில் நடந்துள்ளது. 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் பேருந்துகளின் உள்ளே பயணிகள் குடைபிடிப்பதும், ஓட்டைகளில் இருந்து பயணிகள் கீழே விழுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்த அவல நிலை நீடித்து வரும் நிலையில் கேரளாவிலும் தமிழக பேருந்தில் இருந்து பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

கேளர மாநிலம் காயங்குளத்தை சேர்ந்தவர் ஸ்வாதி. இவர் கொட்டாரக்கரையில் இருந்து தென்காசி சென்ற தமிழக போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தில் நேற்று ஏறியுள்ளார். பேருந்து புனலூர் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து புறப்பட்டுள்ளது. அப்போது, பேருந்தின் உள்ளே பின் பக்கத்தில் ஸ்வாதி நின்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தின் மரப்பலகை உடைந்து ஸ்வாதி கீழே விழுந்துள்ளார்.

பின் பக்க டயருக்கு அருகே ஸ்வாதி விழுந்ததால் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனைப் பார்த்து சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக ஸ்வாதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஸ்வாதி மாலையிலேயே வீடு திரும்பினார்.
 
இந்நிலையில், புனலூர் காவல் நிலையத்தில் ஸ்வாதி புகார் செய்தார். அதில், பாதுகாப்பற்ற நிலையில் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த தகவல் அறிந்ததும் நெல்லை போக்குவரத்து கழக கோட்ட பொது மேலாளர் கஜேந்திரன் முதல் கட்ட விசாரணை நடத்தினார். அப்போது, தென்காசி டெப்போவில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் விபத்து நேரிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, டெப்போவில் பணியாற்றி வரும் இரண்டு டெக்னீசியன்கள், சூப்பர் வைசர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து உத்தவிட்டார்.

இந்த விபத்து குறித்து கஜேந்திரன் கூறுகையில், 24 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். தகுதி குறைபாடு உள்ள பேருந்துகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பணியில் அலட்சியமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பேருந்தில் இருந்து கீழே விழுந்த அந்த பெண், ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி என்று தெரியவந்தது.