புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 டிச., 2022

கத்தாரில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? BBC

www.pungudutivuswiss.com
கத்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்றுவரும் நிலையில், கத்தாரின் மனித உரிமை நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மைதானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் கட்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் கத்தாரின் ஆளும் வர்க்கங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களின் நிலை என்ன?

பிபிசியின் பாலினம் மற்றும் அடையாள நிருபர் மேகா மோகன், விடுமுறை இல்லாத நீண்ட நேரப் பணி குறித்து இரண்டு பணிப்பெண்களுடன் பேசினார்.

கத்தாரி செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த அவரது முதலாளி உறங்கச் சென்ற பிறகு, இரவு தாமதமாக கிளாடிஸை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் தொடர்பு கொண்டேன்.

சுருக்கமான அந்த ஆன்லைன் உரையாடலில் அவர் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை வேலை செய்வதாக என்னிடம் கூறினார். வீட்டை சுத்தம் செய்வது, உணவு தயாரிக்க உதவுவது, குழந்தைகளை கவனித்துக் கொள்வது ஆகியவை அவரது வேலைகள்.

அவர்கள் உணவில் எஞ்சியிருப்பதையே அவர் சாப்பிடுகிறார். வேலைக்கு சேர்ந்து 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போதுவரை ஒரு நாள் கூட விடுமுறை இல்லை என்று கிளாடிஸ் கூறினார்.

“என் முதலாளி பைத்தியம், தினமும் என்னிடம் கத்துவார்” என பிலிப்பைன்ஸை சேர்ந்த கிளாடிஸ் தன்னுடைய முதலாளியைப் பற்றி கூறினார்.

கத்தார்

2022 உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை கத்தார் பெறுவதற்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் முதலாளியின் அனுமதியின்றி வேலையை மாற்றவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ முடியாது. பெரும்பாலான வளைகுடா நாடுகளில் இன்னும் இந்த நிலை உள்ளது.

பின்னர், கத்தார் சில சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. ஆனால் அவை எல்லா நேரங்களிலும் நடைமுறையில் பயன்படுத்தப்படுவதில்லை.

உதாரணமாக, கிளாடிஸின் முதலாளி அவரது கடவுச்சீட்டை வாங்கி வைத்துள்ளார். இங்கிருந்து வெளியேறுவதற்காக அதைக் கேட்டால், அவருக்கு அது கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

மற்ற சில வெளிநாட்டு பணிப்பெண்களைப் போல அல்லாமல் குறைந்த பட்சம் தொலைபேசியை வைத்திருக்க அனுமதிக்கப்படுவதால் கிளாடிஸ் தன்னை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறார். மேலும், அவர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படவில்லை. ஆனால், கத்தாரில் உள்ள பணிப்பெண்கள் இதை அதிகம் எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார்.

அவர் தற்போதைய வேலையிலேயே இருக்க விரும்புவதற்கு இன்னொரு காரணம், இந்த வயதில் சிறந்த வேலையைப் பெறுவது தனக்கு சாத்தியமில்லை என்று நினைக்கிறார். அவர் ஒரு மாதத்திற்கு 1,500 ரியால்கள் சம்பாதிப்பதோடு, அதை முழுவதுமாக குடும்பத்துக்கு அனுப்ப அவரால் முடிகிறது.

கத்தாரின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு தரவுகளின்படி, கத்தாரில் 1,60,000 வீட்டுப் பணியாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர்கள் சட்டத்தை கத்தார் அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம் வேலை நேரத்தை ஒரு நாளுக்கு 10 மணிநேரமாக கட்டுப்படுத்துகிறது. மேலும் தினசரி இடைவேளைகள், வாராந்திர விடுமுறை மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள் வழங்குவதையும் உறுதிசெய்கிறது.

குறைந்தபட்ச ஊதியம் மற்றும் முதலாளியின் அனுமதி பெறாமல் வேலைகளை மாற்ற அல்லது நாட்டை விட்டு வெளியேறும் உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கும் சட்டத்தை 2020ஆம் ஆண்டு கத்தார் அறிமுகப்படுத்தியது.

ஆனால், இந்தச் சட்டங்கள் எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், வேலைப்பளு, ஓய்வு இல்லாமை, தவறாக மற்றும் இழிவாக நடத்தப்படுவது இன்னும் தொடர்வதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

“பலர் மோசமான பணிச்சூழல் குறித்து அமைதியாக இருக்கிறார்கள். ஏனெனில் தங்களின் குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பது அவர்களின் முன்னுரிமையாக உள்ளது” என்கிறார் மைக்ரேன்ட் இன்டர்நேஷனல் அமைப்பைச் சேர்ந்த ஜோனா கான்செப்ஷன்.

கத்தார் வீட்டுப் பணியாளர்கள்

ஆனால் வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் சுதந்திரமாக பேசும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பதாகவும், தாங்கள் தவறாக நடத்தப்படுவது குறித்து அவர்கள் அடிக்கடி பேசுவதாகவும் அவர் கூறுகிறார். ஒரு பெண், தனது முதலாளி கோபமாக இருக்கும்போது தனது தலையை ஒரு கழிப்பறை தொட்டிக்குள் தள்ளுவார் என்றும், உணவு மற்றும் தண்ணீரைத் தர மறுப்பார் என்றும் கூறினார்.

அல்தியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கத்தாரில் பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையை மிகவும் வித்தியாசமாக விவரிக்கிறார். அல் தானி அரச குடும்பத்தில் பணிபுரியும் அவர், அரச இல்லத்தின் அடித்தளத்தில் இருந்து பிபிசிக்கு வீடியோ அழைப்பு விடுத்தார்.

பிலிப்பைன்ஸில் தன்னால் வாங்க முடியாத ஐபோன், உடைகள், நகைகள் மற்றும் காலணிகள் போன்றவற்றை அரச குடும்பத்தினர் தனக்கு வழங்கியதாக அல்தியா கூறுகிறார்.

கிளாடிஸை போலவே, பிலிப்பைன்ஸில் போதுமான அளவு சம்பாதிக்க முடியாததால் அல்தியா இங்கு வந்திருக்கிறார்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, அல்தியாவின் குடியிருப்பில் ஒரு பெரிய அறையைப் பகிர்ந்து கொள்ளும் சக பிலிப்பைன்ஸ் வீட்டுப் பணியாளர்கள், அழைப்பில் சேர்ந்தார்கள்.

அவர்களுக்கு சொந்தமாக படுக்கையறைகள் மற்றும் ஒரு தனிப்பட்ட சமையலறை உள்ளது. அல்தியா டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக்கில் பார்க்கும் உணவுக்காக அல்லது யாராவது காப்பாற்றும்படி கெஞ்சும் பணிப்பெண்கள் இவர்களைப் போல அதிர்ஷ்டசாலிகள் அல்ல.

"அந்த வீடியோக்களை நான் ஆன்லைனில் பார்க்கிறேன், அதனால்தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு கற்பனைக் கதை போல எனக்கு உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

எனினும், இந்த அரண்மைகளில் வேலை செய்வது மிகவும் கடினம் என்கிறார் அல்தியா.

குடும்பத்திற்கு காலை உணவை தயார் செய்வதோடு அவர்களின் வேலை காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. முதலாளி குடும்பத்தினர் சாப்பிட்ட பிறகே அல்தியா சாப்பிடுகிறார்.

பின்னர் பாத்திரங்களை சுத்தம் செய்துவிட்டு, அறைகளை சுத்தம் செய்து மதிய உணவுக்கான இடங்களை தயார் செய்கிறார்கள்.

"இது இலகுவான வேலை. ஏனென்றால் நிறைய பேர் உள்ளனர்" என்று அல்தியா கூறுகிறார்.

பணிப்பெண்கள் பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை தங்களுடைய குடியிருப்பில் ஓய்வெடுத்து, இரவு உணவிற்குத் தயாராகிறார்கள். இரவு உணவு முடிந்ததும், அல்தியா வேலை முடித்துவிடும். அவர் விரும்பினால் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேறலாம்.

அரச குடும்பம் அவரது கடவுச்சீட்டை வாங்கவில்லை. ஆனால் அல்தியா வார இறுதி நாட்கள் உட்பட விடுமுறை இன்றி தினமும் வேலை செய்கிறார்.

வளைகுடாவில் உள்ள பெரிய பிரமுகர்களின் இல்லங்களில் பிலிப்பைன்ஸ் பணியாளர்களை பணியமர்த்தும் மேரி கிரேஸ் மோரல்ஸ், அரண்மனை வேலை என்பது பொறாமைக்குரிய வேலை என்று கூறுகிறார்.

"பல சலுகைகள் உள்ளன. குடும்பம் தாராளமனதுடன் உள்ளார்கள். பெண்கள் அரண்மனையில் இருக்கும்போது உடல் பருமனாகிறார்கள். குடும்பம் அவர்களுக்கு நன்றாக உணவளிக்கிறது" என்கிறார் மேரி கிரேஸ் மோரல்ஸ்.

ad

ad