17 மே, 2014

முள் தைக்கின்ற மலர்கள் !
(சர்மிளா தர்மசீலன்)
பிஞ்சுக் கை வியர்வை சிந்தினால்
அமிழ்ந்து மூச்சுத் திணறும் பூமி .
வலி ஒலி கேட்கிறது

மலர்கள் நேசிக்கின்ற விரல்களில் .
வேலை செய்யும்போது
ஐயோ பாவமென்று சொல்லுகிறது கண்ணீர் .
குருவிதலை பாறாங்கல் சுமப்பது பார்த்து
அழுகிறான் சாமியும் .
விளையாட்டு வயது சாக்கடையில் குளித்து
பாழாகிறது அழுகி அழுகி .
சின்ன மலர் பிஞ்சாகும் முன்னரே
சிதைத்து விடுகிறது வறுமை வண்டு .
வெள்ளை மனங்களில் இருள் ஊற்றி
மூழ்கடிக்கப்படுகிறது சூரியன் .
ஒரு சிறுவன் அவன் ஒரு தேசம் ஓர் உலகம்
குட்டையாக்கிச் சாகடிக்கிறார்கள் ஒரு புள்ளிக்குள் .
விடியும் போதே கண்ணீரலை இழுத்துச் செல்கிறது
வேலைச் சுமை சுமப்பதற்கு .
மழைத் துளிகள் தீத்துளிகளாகின்றன
ஏழ்மையால் .
கருவறையில் வசிக்கும்போதே
வேலைக்குப் பெயர் பதிகிறது வறுமை .
உலகம் முட்கள் அறிமுகம் செய்கிறது
சின்னப் பூக்களுக்கு .
சிப்பிகளிடம் செல்லாத வைரக்கற்கள்
சம்மட்டியிடம் வாங்குகின்றன அடிகள் .
விண்மீன்களாக்காது விட்டாலும் பருவாயில்லை
ஆக்குங்கள் மின்மினிகளாக கண்மணிகளாக .
புத்தகம் சுமக்கும் வயதில்
வியர்வை விற்பது பார்த்து ஒப்பாரி வைக்கிறது பள்ளிக்கூடம் !
உயிர் பறித்த பின்தான்
உலவ விடுகிறார்கள் உடலை மட்டும் .
நாளைய உலகு சிறுவன் கையிலாம்
அவன் இன்று ஏங்குகிறான் ஒரு பிடிச் சோற்றுக்காக .
பட்டை தீட்டப் படாத இந்த வைரங்களை
வீசுகிறார்கள் குப்பையில் .
நாளைய குற்றவாளி ஒரு சிறுவனெனில்
இந்த உலகு செல்லும் நரகுக்கு .
சிறுவன் புன்னகையில் தெரிகின்றன
கோயில் ஆலயம் மசூதிகள் .
ஒரு சிறுவன் வேதனை
ஊழி நெருப்பைவிடக் கொடிது கொடிது .
ஒரு சிறுவன் மகிழ்ச்சி
கோடிப் பூஞ்சோலைகளைவிடப் பெரிது பெரிது .