புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014

தல்லையப்பற்று முருகமூர்த்தி தேவஸ்தானம்


சங்கர மூர்த்தி முருகமூர்த்தி தேவஸ்தானம்

இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம் உள்ளது. அங்கே பல அறிஞர்களும் சைவப் பெருங்குடி மக்களும் வாழ்கின்ற இக்கிராமத்தில் இவ் சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி வேல் பெருமாள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ளார். இவ் ஆலயத்தின் தொன்மையை வரலாற்றை அடுத்து நோக்குவோமாக இருந்தால் புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தில் தல்லையப்பற்று என்று 1800 – 1900 வரையான காலப்பகுதியில் தீவகத்தில் ஒரு நிர்வாக அலகாக இருந்தததாக சொல்லப்படுகிறது.
இவ் ஆலயம் யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள பதிவேடுகளின் படி 1892
ஆம் ஆண்டு தீவக மணியகாரர் மகள் இராமாசிப்பிள்ளை அவர்களால் சுண்ணாம்புக் கட்டடத்தில் வேலை மூலவராகக் கொண்டு மடாலயமாய்க் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ் ஆலயம் கச்சேரியில் 1892 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு 1805 என்ற பதிவு எண்ணையும் கொண்டுள்ளது. ஆகவே இது முதலாவது குடமுழுக்கின் போது பதியப்பட்டாலும் இவ் ஆலயம் 1892 இற்கு முன்பே தோன்றியதாகக் கருதப்பட வேண்டியதாகவுள்ளது.
அத்துடன் இத்தல்லையப்பற்று முருகன் ஆலயம் இரு ஆலயங்களின் கூட்டு ஆலயமாக விளங்குகின்றது. புங்குடுதீவு புதையல் ஆதிவிநாயகர் ஆலயம் கவனிப்பாரின்றி விடப்பட்ட அவ் ஆலயத்தின் ஆதிவிநாயகர் விக்கிரகத்தை எடுத்து வந்து புங்குடுதீவு தல்லையப்பற்று முருகன் ஆலயத்தின் மகாமண்டபத்தில் பாலஸ்தாபனம் செய்து பூசிக்கப்படுகின்றார். தற்பொழுது இவ் ஆலயம் இரு ஆலயங்களின் கூட்டு ஆலயமாக விளங்குகின்றது.
இவ் ஆலயத்தில் அமைந்துள்ள வேல் ஞானசக்தி வடிவானது வேண்டுவார் வரங்களை அள்ளி வழங்குவது. அந்தப்பகுதியில் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. தல்லையப்பற்று சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி முருகன் ஆலய வேல் பெருமானும் புதையல் ஆதிவிநாயகரும் ஒன்று சேர்ந்து அருள்பாலிக்க இவ்வட்டாரத்து மக்களில் பலர் கல்விஇ கேள்விக்குப் பெயர் பெற்ற மகான்களாக உருவாகினர்.
இத்தல்லையப்பற்று சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி முருகன் தேவஸ்தானத்தில் 1892 இலும் பின்னர் 1928 இலும்இ மீண்டும் 1957 இலும் 1972 இலும்இ 1985 இலும்இ கும்பாபிஷகம் நடைபெற்றுள்ளது. பின்னர் 1991 இன் இடப்பெயர்வின் பின்னர் இவ் ஆலயத்தில் இறுதியாக 2005 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக மகோற்சவம் நடைபெறாமல் அலங்காரத் திருவிழாக்களே வருடாந்தம் நடைபெற்று வந்தது.
தற்போது செயற்றிறன் மிக்கதும் தலைமைத்துவக் கட்டமைப்பு மிக்கதுமான கௌரவ திரு.சு.நித்தியானந்தன் தலைமையிலான மிகச்சிறப்பான குழுமம் சுமார் இருபத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் முருகப்பெருமானது பழைய கட்டுத்தேரினிலே எம்பெருமானாகிய புங்குடுதீவு கிழக்கு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி முருகப்பெருமானுக்கு இந்த ஆண்டு தேர்த்திருவிழாவைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கின்றது.
அத்துடன் அன்னதான சபை மூலம் மகோற்சவ தினங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில் வெளிநாடுகளிலுள்ள இவ்வூர் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்பார்க்கப்படுகிறது. புங்குடுதீவு தல்லையப்பற்று சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி வேல்பெருமான் தேரினிலே பவனி வந்து எங்கள் குறைகளெல்லாம் தீர்த்து நாட்டிலே நிரந்தரமான அமைதியும் சுபீட்சமும் நிலைக்க அவருடைய பாதார விந்தங்களை வேண்டுவோமாக.

ad

ad