புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2014




திர்பார்த்ததை அடைந்துவிட்டது பா.ஜ.க. தலைநகரில் உற்சாகத்துக்கு குறைவேயில்லை. அதனால்தான், தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முதல்நாளே லட்டு தயாரிக்கும் வேலை, திருமலை திருப்பதியை விடவும் தீவிரமாக நடந்து

கொண்டிருந் தது டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில். கருத்துக் கணிப்புகள் சாதகமாக வந்ததையடுத்து, வியாழனன்றே கட்சித் தொண்டர்கள் ஒரு லட்சம் இனிப்புகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெள்ளியன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததுடன், பா.ஜ.க.வே மேஜிக் நம்பரான 272ஐ நெருங்க, லட்டு விநியோகத்தை உற்சாகமாகத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க தொண்டர்கள்.

ஒன்பது கட்ட தேர்தல்கள் முடிந்தவுடன் வெளியான கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமையவே, டெல்லியில் பா.ஜ.க தலைவர்கள் அப்போதே கூடி அமைச்சரவை அமைப்பது பற்றி ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக நம்மிடம் பேசிய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர், ""நான் சொல்லப்போறது இந்தியாவுக்கே தெரிந்த ரகசியம்தான். மோடி பிரதமரானாலும் அவரை இயக்கப்போறது எங்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான். அதனால பா.ஜ.க.வின் சீனியர் தலைவர்கள் எங்ககிட்ட ஆலோசனை கேட்டிருக்காங்க. ஒரு எம்.பி உள்ள கட்சியாக இருந்தாலும் ஆதரவு கொடுத்தால் வாங்கிக்குங்கன்னு எங்க ஆர்.எஸ்.எஸ் தலைமை சொல்லி யிருக்கிறது'' என்றார்.



அதே நாளில், டெல்லி பாஜ.க வட்டாரத்தில் பேசியபோது, ""பா.ஜ.க.வுக்கு 220 சீட்டுகள் வரை கிடைக்கும் என்பதுதான் எங்கள் எதிர்பார்ப்பு. ஆனா கருத்துக் கணிப்புகளில் கூடுதலான இடங்கள் கிடைக்கும்னு வந்ததுமே நாங்க தெம்பாயிட்டோம். ஒருவேளை, எண்ணிக்கை குறைவாக இருந்துவிட் டால், மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறவும் நாங்கள் தயார்தான். ஒடிசாவின் நவீன் பட்நாயக், உங்க தமிழகத்து ஜெயலலிதா, மேற்குவங்கத்து மம்தா பானர்ஜி இவங்க பெயரெல்லாம் பரிசீலனையில் இருந்தது. எங்களைப் பொறுத்தவரைக்கும் ஆட்சிக்கு டார்ச்சர் கொடுக்காத பார்ட்னர்கள்தான் வேண்டும். அதிலே கவனமா இருக்கோம். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள கட்சிகளின் கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தருவதா சொல்லியிருக்குது. அதுபோல, தானாக முன்வரும் கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்போம்'' என்றனர். முடிவுகள் வெளியானபோது, வெளிக்கட்சிகளின் தயவு தேவையில்லை என்ற நிலையையும்தாண்டி, கூட்டணிக் கட்சிகளின் தயவும் தேவையின்றி பா.ஜ.க.வுக்கே தனி மெஜாரிட்டி அளவிற்கான சீட் வந்ததும் பா.ஜ.க.வினரும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் உற்சாக மடைந்தனர்.

பா.ஜ.க.வின்  அமைச்சரவை குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதிக கவனம் செலுத்தியது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் எம்.ஜி. வைத்யா வெளிப்படையாகவே, ""மோடி பிரதமரானதும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370-வது சட்டப் பிரிவை நீக்குவது, பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும்'' என்று பேட்டியளித்தார். ஆர்.எஸ். எஸ்.ஸின் இத்தகைய நிபந்தனைகளால் பா.ஜ.க தன்னுடைய கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமே, அது அமையப்போகும் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என மீடியாக்கள் கேட்டபோது, ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தயக்கமின்றி பதில் வந்தது.

ஆர்.எஸ்.எஸ். கொள்கை விளக்க எழுத்தாளரான சுதிர் பதக், ""இப்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையும், பா.ஜ.க. தலைமையும்  ஒரே சம வயதுடையவர்கள்.  மோடியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியதே ஆர்.எஸ்.எஸ்.தான். அதனால் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் எது அடிப்படை லட்சியமோ அது நிறைவேற்றப்படும்'' என்றார். 

புதன்கிழமையன்று (மே 14) பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், முன்னாள் தலைவர் நிதின்கட்காரி, அருண்ஜெட்லி உள்ளிட்டோர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் நடத்திய ஆலோசனையில் யார், யாருக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது, சீனியர்களுக்கு என்ன போஸ்டிங் தருவது, மோடி பிரதமரானதும் குஜராத்தில் யாரை முதல்வராக்கு வது என்பது பற்றியெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.ஸிடமிருந்து ராஜ்நாத் சிங்குக்கு வந்த தகவலில், மோடியின் சம வயதிலும் அவருக்கு குறைவான வயதிலும் உள்ளவர்களுக்குத்தான் அமைச்சரவையில் வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. மோடியின் விருப்பப்படிதான் இந்தத் தகவலை ஆர்.எஸ். எஸ். தெரிவித்துள்ளது என பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சீனியர்களைப் புறக்கணித்தால் சிக்கல்கள் உருவாகுமே என்ற ஆலோசனையும் கட்சிக்குள் நடந்தது. பிரதமர் வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு இவற்றில் தன்னுடைய அதிருப்தியை பலமாக வெளிப்படுத்திய அத்வானியை எப்படி சமாளிப்பது என விவாதிக்கப்பட்ட போது, அவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியைக் கொடுத்துவிடலாம் என பேசப்பட்டபோது, ஒருங்கிணைப்பாளர் பதவியை கூட்டணிக் கட்சிக்குத் தருவதுதான் வழக்கம் என்றும், இம்முறை அதனை தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தருவதாக உறுதியளிக்கப் பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் சொல்லியுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சோனியாதானே தலைமை வகித்தார், அதுபோல நம்ம கூட் டணிக்கு அத்வானியை ஒருங்கிணைப்பாளராக்க லாம் என்றபோது, அது ஆட்சிக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அத்வானிக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் தேசிய ஆலோசனைக் கவுன்சிலை வலிமைப்படுத்தி, மாநில முதல் வர்களையெல்லாம் அதில் முழுமையாகப் பங்கேற்கும்படி செய்து, அதற்குத் தலைவராக அத்வானியை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் பதவியைக் கொடுத்து கௌரவப்படுத்தலாம் என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது. மற்றொரு சீனியரான முரளி மனோகர் ஜோஷி வழக்கமாகப் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் இம்முறை மோடி களமிறங்கியதால் கான்பூரில் போட்டியிட்டார் ஜோஷி. இது அவருக்கு அதிருப்தியை உண் டாக்கியிருந்தது. அந்த அதிருப்தியைப் போக்கும் விதத்தில், அவருக்கும் ஏதேனும் முக்கிய பொறுப்பு தரவேண்டும் என ஆலோசிக்கப் பட்டது.

இதனிடையே, பா.ஜ.க. நிர்வாகிகள் மீது கட்சியின் சீனியர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்ற செய்தி பா.ஜ.க. தலைமையை கவலையடையச் செய்தது. டெல்லியில் ராஜ்நாத்சிங்கையும் நிதின்கட்காரியையும் சந்தித்துப் பேசிய சுஷ்மா, காந்தி நகரில் மோடியை சந்திக்க வரவில்லை. அதனால் அவரை எப்படி சரிப்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டது. முக்கியமான 5 இலாகாக்களை சுஷ்மாவிடம் கொடுத்து, அதில் அவருக்கு விருப்பமானதைத் தேர்வு செய்யச் சொல்லலாமா எனவும் விவாதம் நடந்துள்ளது.  சுஷ்மாவோ, "எதுவாக இருந்தாலும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தைக் கூட்டித்தானே முடிவெடுக்க வேண்டும். இவர்களாக எப்படித் தீர்மானிக்கலாம்' என அதிருப்தியை வெளியிட்ட அவரை சமாதானப்படுத்தி பிரதமரான மோடிக்குத்தான் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளது என சொல்ல வைத்தார். 

இத்தகைய உள்கட்சிக் குழப்பங்கள் ஒருபக்கம் இருந்தாலும், ஆட்சி நிர்வாகம் பற்றிய ஆலோசனைகள் பா.ஜ.க. நிர்வாகிகளால் வேகம் எடுத்தபடியே இருந்தன. உள்துறையை தேசிய பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு எனப் பல பிரிவுகளாகப் பிரித்துக் கையாள்வது எனவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, அமைச்சரவை அமைப்பதில் இத்தனை தீவிரம் காட்டிய ஒரே கட்சி பா.ஜ.க.தான் என்றும், சுதந்திர இந்தியாவில் இப்படி நடந்ததே இல்லை என்றும் டெல்லி அரசியல் நோக்கர்கள் நம்மிடம் கூறினர்.
தேர்தல் முடிவுகள் வரத்தொடங்கியதும் இந்த எண்ணங்கள், குழப்பங்கள் எல்லாமே மாறத் தொடங்கின. உள்கட்சிக்குள்ளான அதிருப்திகளும் குறைந்து வெற்றிக் கொண்டாட்டங்களில் பா.ஜ.க.வினர் முழுமையாக மூழ்கிவிட்டனர். 

இடைவிடாத ஊடகப் பிரச்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவி, இளம் வாக்காளர்களின் ஆதரவு இவற்றுடன் நினைத்த இலக்கை சாதித்த மகிழ்ச்சியும் பெருமிதமும் பா.ஜ.க. தரப்பில் ஜொலிக்கிறது.

-நமது நிருபர்


 டீ மாஸ்டர்- ப்ரைம் மினிஸ்டர்!

இந்தியாவின் புதிய பிரதமராக மே 21-ந் தேதி பதவியேற்க இருக்கும் நரேந்திரமோடி, குஜராத்தில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்து, டீக்கடையில் பணியாற்றி, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகி அதன்பின், பா.ஜ.க.வில் படிப்படியாக முக்கிய பொறுப்புகளுக்கு வந்து, தன்னைவிட சீனியர்களை ஓரங்கட்டி, 2001-ல் குஜராத்தின் முதல்வரானார். அதன்பின் மூன்று தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று முதல்வர் பொறுப்பை வகித்து வந்தார். குஜராத் மாநில வளர்ச்சியின் அடையாளம் என மோடியை பா.ஜ.க. முன்னிறுத்திய அதே நிலையில், 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில் மோடி அரசு இருந்தது பற்றி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பின. இந்த நிலையில்தான், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட மோடி தலைமையில் தேர்தல் களத்தைச் சந்தித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது பா.ஜ.க. இந்தியாவில் 1984 தேர்தலில் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பிடித்த பிறகு, 2014-ல்தான் தனிப்பெரும்பான்மையுடனான ஆட்சி மத்தியில் அமைகிறது. ராஜீவ் இறந்த நாளான மே 21-ந் தேதியன்று பிரதமராகிறார் மோடி.

ad

ad