புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

வடக்கு சுற்றுலாத்துறையினை கவனிக்காத மத்திய அரசு

வடக்கு சுற்றுலாத்துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.   காரைநகர்  சுற்றுலாத்துறை  பயிற்சி அதிகாரசபை மையத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியலுக்கு வர முன்னமே வடகிழக்கு மாகாணங்களில் விருந்தோம்பல் வியாபாரத்தில், சுற்றுலாத்துறையில் பாரிய குறைகள் இருப்பதை நான் அவதானித்திருந்தேன். அதாவது பல கருத்தரங்கங்களுக்கு நான் அந்தக் காலகட்டங்களில் அழைக்கப்பட்டிருந்தேன்.   வடகிழக்கு மாகாணங்களில் ஏசியா பௌண்டேஷன், யுஎஸ் எயிட் போன்ற பல நிறுவனங்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்தக் கருத்தரங்கங்கள் பொதுவாகச் சுற்றுலாத் துறை சார்  உணவகங்களிலேயே நடைபெற்றன.   அந்த உணவகங்களில் வேலை செய்த அனைவரும் பெரும்பான்மை இன சமூகத்துச் சகோதர சகோதரிகளாகவே இருந்தார்கள்.      அதாவது தமிழ் பேசும் மக்கள் வாழ் நிலங்களில் நிலைகொண்டிருந்த உணவகங்களைப் பார்த்துப் பராமரித்தோர், மேலாண்மை செய்தோர், நிர்வகித்தோர் யாவரும் உள்ளூர் மக்கள் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டேன்.   நான் குடியிருந்த அறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொலைக்காட்சிச் சேவைகள் மட்டுமே காட்டப்பட்டன. அதில் தமிழ் வரிசைகள் இல்லை. பெரும்பான்மை மொழிச் சேவைகளே காட்டப்பட்டன.   ஆகவே பேச்சோடு பேச்சாக நிர்வாகத்தினரிடம் இதற்கான காரணத்தைக் கேட்டேன். அவர்கள் தந்த பதில் என்னைத் திடுக்கிட வைத்தது. உங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் சுற்றுலாத் துறையில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் இல்லை.      விருந்தோம்பும் பண்பு என்பது பொதுவாக எமது இலங்கை மக்களின் இரத்தத்தில் ஊறியிருக்கும் ஒரு குண இயல்பாகும். தமிழரோ சிங்கள மக்களோ தமது வீடுகளுக்கு வரும் அதிதிகளிடம் ஏதாவது குடித்துவிட்டு செல்கின்றீர்களா என்று கேட்டு ஒரு கப் தேநீரையோ காப்பியையோ, மோராகாரத்தையோ நீட்டத் தவறுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.     சுற்றுலாத்துறை சம்பந்தமாக எம்மக்களுக்கு சில பல சிக்கலான கேள்விகள் இருக்கின்றன. சுற்றுலாத்துறை எமது பாரம்பரிய விழுமியங்களை நாசமாக்கிப் போடுமோ என்பது. அடுத்தது வெளியில் இருந்து வருபவர்கள் எம் வளங்களை வாரியெடுத்துச் சென்று விடுவார்களோ போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.     ஆகவே பொருளாதார, கலாசார, சூழல்சார்ந்த, வேலைவாய்ப்பு சார்ந்த பல பாதிப்புக்களை எமது மக்கள் மனதில் கொண்டே சுற்றுலா வேண்டுமா சுற்றுப்புறம் பாழடைய வேண்டுமா என்றெல்லாம் கேள்வி எழுப்புகின்றார்கள்.   எமது மக்களின் கேள்விகளும் பயங்களும் அத்திவாரமற்றவை என்று எம்மால் உத்தரவாதம் கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.   எங்களுடைய பிரச்சனைகள் மற்றைய மாகாணங்களுக்குரிய பிரச்சனைகளில் இருந்து மாறுபட்டவை. மத்திய அரசாங்கம் இதைப் புரிந்து நடந்து கொள்ள முன்வர வேண்டும். எமது மக்களுக்கு நன்மைகள் போய் அடையும் வண்ணமே சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.    சமூக கலாசார பாரம்பரிய விழுமியங்களுக்குப் பாதிப்பு இல்லாமலே சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தாய்லாந்தின் பத்தாயாவாக எமது வடமாகாணத்தை மாற்ற முடியும் என்று சிந்திப்போர் பணம் ஒன்றையே தமது மனமதில் மறைத்து வைத்துச் செயல்படுகின்றார்கள். எமக்கு அது ஒத்துவராது.   கடைசியாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைச் சுருக்கமாகக் கூறி வைக்கின்றேன். இதை நான் முன்னர் ஒரு முறையும் என் பேச்சொன்றில் குறிப்பிட்டிருக்கின்றேன்.   நாட்டுக்கென ஒரு திட்டம் இருக்கலாம். அதே நேரத்தில் வடமாகாணத்திற்கென ஒரு மேலெழுந்தவாரியான உள்ளூர் சார்பான முழுமையான திட்டமொன்று வகுக்கப்பட ளவேண்டும். நிலைபெறக் கூடிய அபிவிருத்தியை, சுற்றுச் சூழலை மனதில் வைத்து இது வகுக்கப்பட வேண்டும்.   உள்ளூர் மக்களுக்கு எவ்வாறு சுற்றுலாவின் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கலாம் என்பதே எமது அடிப்படைக் கரிசனையாக இருக்க வேண்டும். உள்ளூர் வளங்களைப் பாவித்து உருட்டிப் பிரட்டி வெளியார்களுக்கு நன்மைகளைப் பெற்றுச் செல்லும் யுக்திகள் எமது வளமான எதிர்காலத்தை வழங்காதென்பதை நாங்கள் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.   எமது சுற்றுலாத் துறை பலவருட காலமாக மத்திய அரசாங்கத்தால் கவனிப்பாரற்றுக் கிடந்துள்ளது. இனியாவது புதிய அரசாங்கத்தின் கீழ் நாம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கம் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.   நாம் எம்மட்டில் அபிவிருத்திக்கு வேண்டியனவற்றை ஏற்படுத்திக் கொடுக்க சகலதையுஞ் செய்ய முன்வருவோம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=167963821720224066#sthash.DlYRElP3.dpuf

ad

ad