புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2015

சந்திரசிறி அதிக பணத்தை செலவு செய்துவிடுவார் என்றே செலவை நாம் பொறுப்பேற்றோம்; குருகுலராசா விளக்கம்



news
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் செய்தபோது தேசிய பாடசாலைகளின் புனரமைப்பிற்கு அரசியல் தாக்கத்தினாலேயே  வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி பயன்படுத்தப்பட்டது என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராஜா தெரிவித்தார்.
 
வடக்கு மாகாண சபையின் 23ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் சர்வேஸ்வரனின் வாய்மொழி வினாவிற்கு கல்வி அமைச்சர் பதில் வழங்கி இருந்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது தேசிய பாடசாலைகளின் புனரமைப்புக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி செலவு செய்யப்பட்டிருந்தது.
 
எனவே தேசியப் பாடசாலைகளுக்கு வடக்கு மாகாண அமைச்சு செலவு செய்தமை தொடர்பில் விளக்கம் தரவேண்டும் என கல்வி அமைச்சரை உறுப்பினர் சர்வேஸ்வரன் கடந்த அமர்வில் கேட்டிருந்தார்.
 
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
முன்னாள் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டபோது தேசிய பாடசாலைகளான யாழ். இந்துக்கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றில் புதிய கட்டடம் அமைத்தல், உள்ளக வீதி அமைப்பு, வர்ணம் பூசுதல் , பாடசாலையை மெருகூட்டல் என்பனவற்றுக்கு வடக்கு கல்வி அமைச்சினால் நிதி செலவு செய்யப்பட்டது. 
 
இதற்காக 8.87 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருந்தது. எனவே இவ்வாறான செயற்பாட்டிற்கு கல்வி அமைச்சு அனுமதித்து இருக்காது விட்டால் ஆளுநர் குறித்த வேலைத்திட்டங்களை எடுத்து அதிக செலவில் செயற்படுத்தி இருப்பார்.
 
எனவே அதனைக் கருத்திற்கொண்டே நாம் குறித்த வேலைத்திட்டங்களை செயற்படுத்தினோம். அத்துடன் இது ஒரு அரசியல் தாக்கமே. 
 
மேலும் தேசிய பாடசாலை மாணவர்களையும் மாகாண செயற்பாடுகளுக்குள் அழைத்து போட்டிகள் மற்றும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். 
 
நாம் அவர்களை பிரித்து விடவில்லை. எனவே பாடசாலை மெருகூட்டப்பட்டால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் நன்மைஏற்படும் என்பதாலும் நாங்கள் செலவு செய்யக் காரணம் என்றார். 
 
இதற்குப்பதிலளித்த உறுப்பினர் சர்வேஸ்வரன்,
 
நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற மோசடிகளை விசாரிக்க மாகாண சபையால் முடியாது என்றும் மத்திய அரசே விசாரணைகளை நடத்த முடியும் என்று கூறுகின்ற வேளை எவ்வாறு தேசிய பாடசாலைகளுக்கு மாகாண அரசு நிதி ஒதுக்க முடியும்?
 
அத்துடன் தேசிய பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்களை நியமிப்பது மத்திய அரசு.அவ்வாறு இருக்கும் போது எதற்கு மாகாண அமைச்சு நிதி வழங்க வேண்டும்?
 
இவ்வாறான பிரச்சினைகள் பாடசாலைகளில் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வது மக்கள் பிரதிநிதிகளின் கடமை .ஆனால் அவர்களை குஷிப்படுத்துவதற்கு புனரமைப்புச் செய்வது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
 

ad

ad