28 டிச., 2013

சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய 75,000 பழங்கள் புறக்கோட்டையில் மீட்பு

இரசாயன பதார்த்தம் தெளிக்கப்பட்டதாக கண்டுபிடிப்பு

பண்டிகை காலத்தில் சந்தையில் விற்பதற்காக வைக்கப் பட்டிருந்த சுமார் 75 ஆயிரம் பழங்கள் இவ்வாறு நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது மீட்கப்பட்டதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியது.
பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களுக்கு பழைய, காலவதியான பொருட்கள் விற்கப்படுவதை தடுப்பதற்காக கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து 10 திடீர் சோதனைக் குழுக்களை ஈடுபடுத்தியுள்ளார். இதன்படி நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ஒருவகை இரசாயனம் தெளிக்கப்பட்ட பெருமளவு பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் உள்நாட்டில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட வாழைப்பழம், மாங்காய் மற்றும் பப்பாசிப் பழம் என்பன அடங்குவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கூறியது. இவ்வாறான இரசாயனப் பதார்த்தங்கள் தெளித்த பழங்கள் வெளிப்பக்கத்தால் மாத்திரமே பழுத்திருக்கும். உட்பகுதி பழுத்திருக்காது. சாதாரணமாக பழங்கள் உட்பகுதியில் இருந்தே பழுக்கும் எனவும் அறிய வருகிறது.