புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2013


சர்வதேச விசாரணையை ஐ நா இடம் வலியுறுத்தும் தீவிர பிரசாரத்துக்கு கூட்டமைப்பு தீவிரம் 
இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார்.
வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பில், அரச படைகளின் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இம்முறை ஜெனிவாவில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். 
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் வெளிநாடுகளின்  இராஜதந்திரிகளைச் சந்தித்துவிட்டு ஜெனிவா சென்று அங்கு இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீவிர பரப்புரையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது எனவும் சுரேஷ் எம்.பி. தெரிவித்தார். 
இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இம்முறை கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி  புலம்பெயர் தமிழ் அமைப் புகள் மாபெரும் எழுச்சி மாநாட்டை நடத்தவுள்ளன. 
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் சபை அமைந்துள்ள வளாகத்தில் கவனவீர்ப்புப் போராட்டத்தையும், இலங்கை அரச படைகளினால் ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் நடத்தவுள்ளன. 
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஜெனிவா வந்தால் அது பெரும் சக்தியாக இருக்கும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண.இமானுவேல் அடிகளார் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். 
இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன வென்று அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பியிடம்  நேற்று கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஜெனிவாவில் நடத்தவுள்ள மாபெரும் எழுச்சி மாநாடு மற்றும் கவனவீர்ப்புப் போராட்டங்களை நாம் வரவேற்கின்றோம்; எமது ஆதரவையும் வழங்குவோம். 
கடந்த முறை போல இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்லவுள்ளது. ஆனால், இம்முறை எமது பரப்புரையைத் தீவிரப்படுத்தவுள்ளோம்.  இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையே எமது முக்கிய வலியுறுத்தலாக உள்ளது. 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஏற்கனவே இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மிகவும் கடுமையான பிரேரணை நிறைவேற்றப்படும் என நாம் நம்புகின்றோம். 
அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர் குழுவினர் ஆகியோரிடமும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்துமாறும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் சிவில் சமூகத்தினர் வலியு றுத்தியிருந்தனர் - என்று சுரேஷ் எம்.பி. தெரிவித்தார்.

ad

ad