யாழ் - இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டத்தை கிளிநொச்சி விவசாயிகளின் சம்மதமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பாக ஆராய்ந்து முடிவு கூறும் வரை எந்தவொரு உடன்படிக்கைகளிலும் கையொப்பம் இடவேண்டாம் என கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் யாழ் - இரணைமடு குடிநீர் விநியோகத் திட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட அக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இக் கலந்துரையாடலிலேயே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
இக்கலந்துரையாடலில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதால் கிளிநொச்சி மக்களுக்கும் அப்பகுதி விவசாயிகளுக்கும் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக எடுத்துக்கூறியுள்ளோம்.
இச்சந்திப்பில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் ஏற்படவுள்ள பாதிப்புக்கள் தொடர்பான ஆவண ரீதியான அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளோம்.
எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் இத்திட்டத்தை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் ஒப்புதலின்றி நடைமுறைப்படுத்துவதில்லை என எம்மிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இத்திட்டம் தொடர்பாக நாம் ஆராய்ந்து முடிவு கூறும் வரையும் எந்தவொரு ஆவணத்திலும் ஒப்பமிடவேண்டாம் எனவும் எம்மை அறிவுறுத்தியுள்ளார், என்றார்.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சேனாதிராசா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறீதரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.