28 டிச., 2013

இங்கிலாந்து அணி ஆதிக்கம்

அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறுகிறது.
மெல்போர்னில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியின் இரண்டாவது நாளான நேற்று 226 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது நாள் போட்டியை பார்வையிட 78,346 பேர் அரங்கில் குவிந்த நிலையில் அவுஸ்திரேலியா தனது பந்து வீச்சு திறமையை வெளிக்காட்டியது.

இதன்படி இங்கிலாந்து இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸ¤க்காக மேலும் 22 ஓட்டங்களுக்கு எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் தனித்து போராடிய கெவின் பீட்டர்சன் 161 பந்துகளில் 71 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸ¤க்காக 100 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.
மீண்டும் ஒருமுறை அவுஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய மிச்சல் ஜோன்சன் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். ரியான் ஹரிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் தொடக்கம் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆரம்பவீரர் வோர்னர் 9 ஓட்டங்களுக்கு வெளியேறியதோடு பின்னர் வந்த வொட்சன் (10), அணித் தலைவர் கிளார்க் (10) மற்றும் ஸ்மித் (19), பெய்லி (0) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதில் ஆரம்ப வீரர் ரொஜர்ஸ் மாத்திரம் நிதானமாக ஆடி அரைச்சதம் (61) ஒன்றை பெற்றதோடு கடைசி மத்திய வரிசையில் வந்த ஹெடின் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது அவுஸ்திரேலிய அணி 73.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றிருந்தது. இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அன்டர்ஸன், ஸ்டுவட் பிரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு டிம் பிரஸ்னன் 2 விக்கெட்டுகளை பதம் பார்த்தார்.
இரண்டாவது நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் மாத்திரம் கைவசம் இருக்கும் நிலையில் இங்கிலாந்தை விடவும் 91 ஓட்டங்களால் பின்னிலை பெற்றிருந்தது.