28 டிச., 2013

தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா? கலைஞர் பதில்
தி.மு.க. தலைவர் கலைஞரை வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி :- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில் :- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!


கேள்வி :- டி. ராஜேந்தருக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா?

பதில் :- இப்போதே அதைப்பற்றிச் சொல்ல முடியாது.

கேள்வி :- நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. டி.ராஜேந்தரைத் தொடர்ந்து வேறு பல கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில் :- வாய்ப்புகள் வருகிறதா என்பது அந்தக் கட்சிகள் இணையும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும்.

கேள்வி :- தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா?

பதில் :- வரவில்லை.

கேள்வி :- தி.மு.க. தலைமையிடமான அண்ணா அறிவாலயம் இருக்கும் இடத்தில் சென்னை மாநகராட்சிக்கு தர வேண்டிய இடத்தைத் தரவில்லை என சென்னை மாநகராட்சியில் இன்றும் பேசப்பட்டு, தி.மு. கழக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?
பதில் :- இந்தப் பிரச்சினை பல முறை பேசப்பட்டு விரிவான விளக்கம் தரப்பட்டாகி விட்டது. வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை மாநகராட்சி அங்கே வந்து அளந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் ஒன்றும் தவறான முறையில் தி.மு.க. சார்பாக அந்த இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது கொடநாடு அல்ல, அண்ணா அறிவாலயம்.
இவ்வாறு அவர் கூறினார்.